4.1 பெண்ணியம் : விளக்கம்

    Feminism என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாக வழங்குவது, பெண்ணியம் என்ற சொல்லாகும். இதனையே சிலர், ‘பெண்ணிலை வாதம்’ என்றும் சொல்லுவர். பெண்ணின் நிலையிலிருந்து கருத்துக்கள் அல்லது வாதங்கள் எழுவது, பெண்ணியவாதம் ஆகும். ஆண்டாண்டுக் காலமாக உலகின் பல்வேறு பகுதிகளிலும் பெண் அடிமைப்பட்டே இருந்தாள். குடும்ப நிர்வாகம் முதற்கொண்டு பல கடமைகளைச் செய்தாலும், இனவிருத்தி செய்து குடும்பத்தைப் பெருக்கினாலும், அன்பு, பாசம் முதலிய பல நல்ல பண்புகளைப் பெற்றிருந்தாலும் பெண், தொடர்ந்து அடிமையாகவே இருக்கிறாள். இந்தச் சமுதாயம் ஆண்களை மையமிட்டது; எல்லாக் கருத்துக்களும் செயல்களும் ஆண்களை மையமிட்டே நடக்கின்றன. இவ்வாறு பெண்ணியம் தீவிரமான கருத்துக்களை முன்வைக்கிறது. இத்தகைய சமுதாயச் சூழ்நிலையை மாற்றவேண்டும்; பெண், விடுதலை பெற வேண்டும் என்று பெண்ணியம் கூறுகிறது. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஆளுமை (personality) உண்டு; அந்த ஆளுமை காப்பாற்றப்பட வேண்டும்; வளர்க்கப்பட வேண்டும்;     காட்டிக்கொள்ளப்பட வேண்டும் - என்று பெண்ணியம் கூறுகின்றது. பெண் விடுதலை என்பது, சமூக - பொருளாதார அரசியல் - பண்பாட்டுத் தளங்களில், பெண் சுயமாக இயங்குவதற்கு வேண்டிய உரிமைகளைப் பெறுவது - போராடியாவது பெறுவது- ஆகும்.

4.1.1 பெண்ணியம் : வரலாறு

    கி.பி. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பெண்ணியம் என்ற கோட்பாடு, நவீனத்துவத்தின் சூழமைவில், எழுந்தது. தொடர்ந்து பிரான்சு நாட்டைச் சேர்ந்த சய்மோன் தெபௌவோ (Simon De Beauvoir) எழுதிய இரண்டாவது பாலினம் (The Second Sex; 1949) என்ற பிரசித்தமான நூலை முன்னோடியாகக் கொண்டு, பெண்ணியம் ஓர் அறிவார்ந்த கொள்கையாகவும் போராட்டக் கருவியாகவும் முன்வைக்கப்பட்டது. பல நாடுகளில் பெண்ணுரிமை ஒரு பிரச்சினையாகப் பேசப்பட்டது; இயக்கங்களும் தோன்றின. இந்தியாவில் சமூகச் சீர்திருத்த உணர்வுடைய பலர் இது பற்றிப் பேசியும் எழுதியும் வந்தனர். தமிழகத்தில், முதல் நாவலாசிரியராகிய மாயவரம் முனிசீப் வேதநாயகம் பிள்ளை, பெண் விடுதலை பற்றி எழுதியுள்ளார். பெண்மதி மாலை அவருடைய நூல்களில் ஒன்று. திரு. வி.க.வின் பெண்ணின் பெருமை இவ்வகையில் மிகச் சிறந்த ஒரு நூலாகும். தமிழகத்தில் பெண் விடுதலை பற்றி அழுத்தமாகவும் புதுமைக் கண்ணோட்டத்துடனும்     எழுதியவர்கள் இருவர். ஒருவர், மகாகவி பாரதியார்; இன்னொருவர் பெரியார் ஈ. வெ. இராமசாமி. தமிழகத்தில் 1980-கள் வாக்கில் இயக்கங்கள் பல தோன்றின. இந்தச்     சூழ்நிலையில்தான் பெண்ணுரிமை தொடர்பான இலக்கியங்களும் தோன்றின. வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம், புனைவியல் நவிற்சியாக ஒரு பெண்ணின் அற்புத ஆற்றலைக் கதையாக்கித் தந்துள்ளது.