|  
  3.3 வரலாற்றுப் புதினங்கள் வரலாற்றுப் புதினம் என்பது வரலாற்றில் காணப்பெறும் மாந்தர்களையும், நிகழ்ச்சிகளையும், அதன் பின் புலத்தையும் பயன்படுத்தி ஓரளவு கற்பனை கலந்து படைக்கப்படும் புதின வகையாகும். மேலை நாட்டார் படைத்த வரலாற்று நாவல்களில் வால்டர் ஸ்காட்டு எழுதிய நாவல்களையே பலரும் முன்னோடியாகக் கொள்கின்றனர்.   கற்பனைப் படைப்பின் தாக்கம் மிகமிக வரலாற்றுக் கற்பனை நாவல்களே மிகுந்த அளவில் தோன்றியுள்ளன. வரலாற்று நாவல்கள் என்பன நடப்பு நிலையைத் தவிர்ப்பதில்லை. பழங்கால நிகழ்ச்சிகள் தற்கால நிகழ்ச்சிகளுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையனவாக இருக்கும். வரலாற்றுப் புதினங்களில் புனைநிலை மாந்தரே சிறப்பான இடம் பெறுவர். வரலாற்று நாவல்களில் மக்களுக்கு ஒரு பற்றை ஏற்படுத்தியவர் கல்கி. வரலாற்று நாவல்களைச் சிறப்பாக எழுதிப் பிற்காலச் சந்ததியினருக்கு முன்னோடியாகத் திகழ்ந்த இவரை வரலாற்று நாவல் துறையின் தந்தை எனலாம். பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் என்பன இவரது படைப்புகள். சிவகாமியின் சபதம் பல்லவர் காலத்தின் பெருமையைப் பறை சாற்றும். இப்புதினத்தில் இடம் பெறும் சிவகாமி, வாசகர் நெஞ்சில் நிலையான இடத்தைப் பெற்றுவிட்ட கதாபாத்திரமாகும். இன்றும் மாமல்லபுரத்துச் சிற்பங்களைப் பார்க்கும் பொழுது ஆயனரும், அவர் மகள் சிவகாமியும் கண் முன் நடமாடி மகிழ்வூட்டக் காணலாம். அடுத்து இராசராச சோழனின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன் என்ற புதினத்தை உருவாக்கினார். இதில் வரும் நந்தினி பாத்திரம் தனிச் சிறப்பு வாய்ந்தது. சாண்டில்யன் குமுதம் பத்திரிகை மூலம் பல புதினங்கள் எழுதி எண்ணற்ற வாசகர்களையும் பெற்றார். இவரது மலைவாசல், ராஜமுத்திரை, யவனராணி, கடல் புறா ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ராபர்ட்கிளைவ் பற்றிக் கூறும் ராஜபேரிகை என்ற புதினம் வங்க மாநிலப் பரிசு பெற்றது. கலைஞர் மு.கருணாநிதியின் ரோமாபுரிப்பாண்டியன், தென்பாண்டிச் சிங்கம் இரண்டும் குறிப்பிடத்தக்கவை. தமிழகத்தின் தொடக்கக் கால வரலாற்றை ரோம் நாட்டு அகஸ்டஸ் கால வரலாற்றோடு இணைக்கும் முயற்சியில் இவர் ரோமாபுரிப் பாண்டியனைப் படைத்துள்ளார். வணிகத் தொடர்பால் இரு நாட்டின் உறவு பெருகியதைப் பல இலக்கியச்சான்றுகள் தங்க நாணயங்கள், புதைபொருள் சான்றுகள் உறுதி செய்கின்றன. கி.மு. 20ஆம் ஆண்டினைத் தொடக்கமாகக் கொண்டு கதை தொடங்குகிறது. மேத்தாவின் சோழநிலா, பூவண்ணனின் காந்தளூர்ச்சாலை, கொல்லிமலைச் செல்வி அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவி, நா.பார்த்தசாரதியின் பாண்டிமாதேவி, மணி பல்லவம் ஆகியவை சிறப்பு வாய்ந்த தரமான புதினங்களாகும். 
  | 
 ||||||||||||||||||