6.2 கதைமாந்தர்

புதினங்களுக்கு அணிகலனாகத் திகழ்வது பாத்திரப் படைப்பு ஆகும். இலக்கியத்தின் பல்வேறு உத்திகளுள் பாத்திரப் படைப்பு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

ஒரு நாவலின் சிறப்பிற்குப் பாத்திரப் படைப்பு இன்றியமையாத கூறாகிறது. ஒரு நாவலுக்குக் கரு இன்றிமையாதது; இருப்பினும் அக்கருவிற்கு உயிர் தரவல்ல சிறப்பினை உடையவை பாத்திரங்களாகும்.

இருவகைப் பாத்திரங்கள்

பொதுவாக நாவல்களில் இடம்பெறும் பாத்திரங்களை இருவகைப்படுத்துவர். அவை, (1) முதன்மைப் பாத்திரங்கள், (2) துணைப் பாத்திரங்கள்.

துப்பறியும் புதினங்களில் கதைமாந்தர்

பொழுதுபோக்கு நாவல்களில் துப்பறியும் நாவல்கள் முதன்மை யானவை. இவ்வகை நாவல் ஆசிரியர்கள் கதையை விறுவிறுப்பாகக் கொண்டு செல்வதில் மட்டும் ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றில் மனதில் நிலைத்து நிற்கும் பாத்திரங்கள் அரிதாகவே அமையும்.

மோஹன சுந்தரம் - புதினத்தின் கதைமாந்தர்

ஜே.ஆர்.ரங்கராஜுவின் ‘மோஹன சுந்தரம்' என்னும் இந்நாவலில் பதினைந்திற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன. இந்நாவலில் கோவிந்தனை முதன்மையான பாத்திரமாகக் கூறலாம். இருப்பினும் லீலாவதி, விசாலாட்சி, மோஹன முதலியார், சுந்தர முதலியார், பூபதி முதலியார், கோபால்சாமி நாயுடு ஆகியவர்களும் கதையோட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

சாட்சி கூறும் இரவு நேரக் காவலாளி சுப்பராயன், இன்ஸ்பெக்டர், கோவிந்தனின் உதவியாளராக வரும் ராமுடு, சீனு, விசாலாட்சிக்கு உதவும் மரகதம், அவளுடைய காதலன் கோபாலன், வடக்குத்தியான், பாலு முதலி, சீதாராம முதலி, அவனுடைய அடியாட்கள் போன்றோரைத் துணைப் பாத்திரங்களாகக் கொள்ளலாம்.

6.2.1 முக்கிய கதைமாந்தர்

ஒரு புதினத்தின் வெற்றி என்பது அதில் இடம் பெறும் முக்கிய பாத்திரங்களைப் பொறுத்தே அமைகிறது. மோஹன சுந்தரம் என்ற இந்த நாவலில் துப்பறியும் பாத்திரமாக இடம் பெறும் கோவிந்தனே முக்கிய பாத்திரமாகப் படைக்கப் பெற்றுள்ளான். இவனுடன் சுந்தர முதலியார், மோஹன முதலியார், லீலாவதி போன்றோரும் படிப்போர் மனதில் முக்கிய பாத்திரங்களாக இடம் பெறுவர். அவர்களின் பாத்திரப் படைப்புப் பின்வருமாறு விளக்கப்படுகிறது.

துப்பறியும் கோவிந்தன்

திருவல்லிக்கேணி கோவிந்தன் ஒரு சிறந்த துப்பறியும் நிபுணர்; புத்திக் கூர்மை உடையவர். தன்னுடைய யோசிக்கும் அறிவினாலேயே நடந்தவற்றைக் கணிக்கும் ஆற்றல் உடையவர். புத்திமான் பலவான் என்ற கூற்றிற்கு ஏற்ப அமைந்த பாத்திரம் இப்பாத்திரமாகும்.

இவர் கொலை நடந்த இடத்தில் கிடைத்த காலணிகளின் அடையாளம் கொண்டே கொலையாளியைக் கண்டுபிடிக்கிறார். கொலையைக் கண்டு பிடிக்க, தக்க சாட்சிகள் தேவை. இவர் தனக்குக் கிடைத்த சிறுசிறு ஆதாரங்களைக் கொண்டே துப்புத் துலக்குகிறார். ஆசிரியரின் அனைத்து நாவல்களிலும் இப்பாத்திரத்தைக் காணலாம்.

லீலாவதி

இக்கதையின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமானவள்; பணத்தின் மீது அளவு கடந்த பாசம் கொண்டவள்; தன்னை ஒரு சிறந்த குலமகள் போலக் காட்டிக் கொள்கிறாள்; சுந்தர முதலியாரை மணந்து கொள்கிறாள்; அவருடைய ஒரே மகளான விசாலாட்சியைப் பல வகைகளில் துன்புறுத்துகிறாள்; விசாலாட்சியை வீட்டை விட்டுத் துரத்துகிறாள்; காவல் நிலையத்தில், முன்னாள் கணவன் பாலு முதலியின் சகோதரனால் வெட்டப் பட்டு இறக்கிறாள்.

சுந்தர முதலியார்

இவர் அறுபது வயதைக் கடந்தவர். மனைவியை இழந்தவர்; லீலாவதியின் அழகில் மதிமயங்குகிறார்; அவளுக்காக மருமகனான பூபதியை வீட்டை விட்டுத் துரத்துகிறார்; லீலாவதியை இரண்டாம் தாரமாக மணந்து கொள்கிறார்.

இவர் லீலாவதியின் கையில் இருக்கும் ஒரு பொம்மையைப் போலக் காலம் கடத்துகிறார். நாவலின் இடையே சுந்தர முதலியார் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறது. இவர் விரோதிகளால் கடத்தப்படுகிறார். ஆனால் இறுதியில் சுந்தரமுதலியார் உயிருடன் திரும்புகிறார்.

இவர் துன்பத்தில் இருப்பவர்களுக்கு உதவுபவர். தன்னுடைய ஏஜெண்ட் கோபால்சாமி நாயுடு கம்பெனியின் பணத்தைக் கையாடல் செய்திருப்பதை அறிந்த பின்பும், அவருக்காகத் தன்னுடைய பணத்தைக் கொடுக்கிறார்; தன் நண்பன் மோஹன முதலியாரே உண்மையான கொலையாளி என அறிந்த பின்பும் அவரைக் காப்பாற்றவே நினைக்கிறார். இதிலிருந்து அவருடைய நல்ல பண்புகள் விளங்கும்.

மோஹன முதலியார்

இவர் சுந்தர முதலியாரின் ஆருயிர் நண்பர்; மோஹன சுந்தரம் அண்ட் கம்பெனியின் மற்றொரு பங்குதாரர்; மரணத்தில் உள்ள மர்மத்தைக் கண்டுபிடிக்கத் துப்பறியும் கோவிந்தனை அவரே அழைக்கிறார்; குற்றவாளியே துப்பறிவாளரை அழைப்பது விந்தையானது; பிறகு, கோவிந்தனால் இவருடைய குற்றம் நிரூபிக்கப்படுகிறது; தன் தவறுக்குத் தானே தண்டனை விதித்துக் கொள்கிறார்; விஷமருந்தித் தற்கொலை செய்து கொள்கிறார்.

விசாலாட்சி

இவள் இசை மீது ஆர்வம் கொண்டவள்; இசை கற்றுக் கொடுக்க வந்த லீலாவதியே தனக்குச் சித்தியாக வருவதை விரும்பாதவள்; சித்தியின் நடவடிக்கையால் வீட்டை விட்டு வெளியேறுகிறாள்; தற்கொலை செய்து கொள்ள முயலும் போது, ராமதாஸ் என்னும் நல்லவரால் காப்பாற்றப் படுகிறாள்; மோஹன முதலியாரின் பொய்யான வார்த்தையை நம்பித் தவறானவர்களுடன் ஊரைவிட்டு வெளியேறுகிறாள்; இறுதியில் கோவிந்தனால் காப்பாற்றப்படுகிறாள்.

‘நல்லது எது, கெட்டது எது' என்று பகுத்தறியத் தெரியாத பாத்திரம். இவளின் கதாபாத்திரத்தில் இளமையின் வேகமே வெளிப்படுகிறது.

பூபதி முதலியார்

இவர் முறைப்பெண் விசாலாட்சி இருக்க, லீலாவதியின் மீது காதல் கொள்கிறார்; லீலாவதியின் உண்மையான குணம் தெரியவர, தன் முடிவை மாற்றிக் கொள்கிறார்; விசாலாட்சி வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்து அவளைக் கண்டுபிடித்துத் தருமாறு கோவிந்தனை வேண்டுகிறார்; இறுதியில் விசாலாட்சியை மணந்து கொண்டு இன்பமாக வாழ்கிறார்.

ஒரு சராசரி இளைஞனாகவே இப்பாத்திரம் படைக்கப் பட்டுள்ளது. புற அழகின் மீது ஆசைகொண்டு உண்மை தெரிந்து தெளியும் கதாபாத்திரமே பூபதி முதலியார்.

கோபால்சாமி நாயுடு

கோபால்சாமி நாயுடுவின் பங்கு இக்கதையில் சிறிதளவே. இவர் பணத்தைக் கையாடல் செய்யும் ஏஜெண்ட்; தான் செய்யும் தவறுக்காக வருந்தாதவர்; சிறிதுகாலம் கோவிந்தனின் சொற்படி பைத்தியமாக நடிக்கிறார்.

6.2.2 துணைமாந்தர்

கதையின் ஓட்டத்திற்குத் துணையாக வருபவையே துணைப் பாத்திரங்கள் ஆகும். இப்பாத்திரங்களின் பங்களிப்பு கதை முழுவதும் இருக்காது. ஆனால் கதை நகர்ந்து செல்வதற்கு உறுதுணையாக அமையும்.

இரவு நேரக் காவலாளி சுப்பராயன், சுந்தர முதலியாருடன் கொலை நடந்த அன்று பேசிக் கொண்டிருந்தவர் பூபதி முதலியாரே என்று சாட்சியம் கூறும் துணைப் பாத்திரமாகிறார்.

இன்ஸ்பெக்டர் பாத்திரமும் பல இடங்களில் வருகிறது. கோவிந்தனின் உதவியாளராக வரும் ராமுடு, சீனு போன்றோரும் பிறரைக் கண்காணிக்க, தகவல் கொடுக்க என்று பயன்பட்டிருக்கின்றனர்.

விசாலாட்சியைக் காப்பாற்றும் ராமதாசும் துணைப் பாத்திரமாவார். மரகதம் என்னும் வேலைக்காரப் பெண்ணும் துணைக் கதாபாத்திரங்களில் குறிப்பிடத்தக்கவள். இந்நாவலில் பத்திற்கும் மேற்பட்ட துணைப் பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளன.

தன்மதிப்பீடு : வினாக்கள்- I

1
ஜே.ஆர்.ரங்கராஜுவின் பொழுதுபோக்கு நாவல்களைக் குறிப்பிடுக. விடை
2
சுந்தர முதலியாரின் மகள் யார்? விடை
3
துப்பறியும் நிபுணரைக் குறிப்பிடுக. விடை
4
துணைப் பாத்திரங்கள் யார், யார்? விடை