6.2 திரு.வி.க. உரைநடையின் வடிவம்

உரைநடையின் பொருளில் புதுமை கண்டவர் திரு.வி.க. அதைப் போலவே, உரைநடையின் வடிவத்திலும் அவர் வளர்ச்சியை ஊட்டினார் என்றால் அது மிகையாகாது. அவர் வழங்கிய நடை, உரைநடையின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் ஒரு சிறந்த இடத்தைப் பெற்றதாகும். நீண்ட தொடர்களுடன், குறியீடுகள் இன்றி, ஏற்ற இறக்கங்கள் இன்றி உணர்ச்சி வெளிப்பாட்டில் கவனம் செலுத்தாது, நீண்ட பத்திகளுடன் வழங்கியது பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை. அதிலிருந்து மாறுபட்டுச் சிறுசிறு தொடர்களையும், பல்வேறு உணர்ச்சிகளையும் முறையாக வெளிப்படுத்தும் குறியீடுகளுடன் துள்ளல் அமைப்பில், உள்ளத்துக் கருத்துகளுக்கேற்பச் சொற்களைப் புகுத்திப் புதியதோர் அழகுநடையை உருவாக்கியவர்களுள் திரு.வி.க. தலைசிறந்தவராவார்.

தமிழ் உரைநடையைப் பாமரரும் கேட்கும் வண்ணம் ஓரளவுக்கு எளிமைப்படுத்தி, எழில் கூட்டி, வீறுகாட்டி, மிடுக்கு ஊட்டி வழங்கியவர் அவரே. பிறருடைய உரைநடை நூல்கள் கற்றறிந்த அறிஞர் மத்தியில் மட்டுமே உலவின எனலாம். அவர் கொண்ட பன்முக உறவு தமிழ் உரைநடையைப் பலரோடும் உறவாடச் செய்தது ; பலரைப் பின்பற்றச் செய்தது. இந்த நூற்றாண்டின் நடைமாற்றத்துக்கு வழி காட்டி, உன்னதப் படைப்புகளை வழங்கிய முதல்வர்களுள் முதல்வர் திரு.வி.க.வே எனலாம்.

6.2.1 பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை வடிவம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் உரைநடை வடிவங்கள் சிலவற்றை நோக்கினால் திரு.வி.க.வின் உரைநடை வடிவ வளர்ச்சியை இனங்காணல் இயலும்.

“உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை யென்பது பரமகர்த்தராகிய இயேசு கிறிஸ்து நாதர் ஸ்தாபித்த சமயத்தின் தூதனாகவும் அஸ்திவாரமாகவும் இருக்கின்றதென்றும் புரோடெஸ்டாண்டும் மதங்கள் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட அபத்த மார்க்கங்களாயிருக்கின்றன வென்றுங் காண்பிக்கின்ற திஷ்டாந்தங்கள்” (மெய்ஞ்ஞான திருச்சபையின் விளக்கம் - 1841) எனவரும் கிறிஸ்துவ சமயநூல் தொடரிலும், “இச்சீவக சிந்தாமணியை உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியருரையுடன் பல பிரதிரூபங்களைக் கொண்டு நன்றாகப் பரிசோதித்து எழுதுவோரால் நேர்ந்த வழுக்களை மாற்றி, பலருக்கும் பயன்படும் வண்ணம் அச்சிடுவிக்க முயலும்படி சில வருடத்திற்கு முன் ம-ள-ள-ஸ்ரீ இராமசாமி முதலியாரவர்கள் பலமுறை வற்புறுத்திக் கொடுத்தார்கள்” (1887, சீவகசிந்தாமணி முதற்பதிப்பு முகவுரை) என எழுதுகின்ற டாக்டர் உ.வே.சாமிநாத ஐயருடைய மொழியிலும், நாம் சென்ற நூற்றாண்டின் உரைநடையமைப்பைக் காணலாம்.

இவ்வடிவங்களில் நாம் காண்பது என்ன? உணர்வது எது? நீண்ட நீண்ட தொடர்கள், பெரிய பெரிய பத்தியமைப்புகள், உணர்ச்சிகளையும் சொற்சிறப்புகளையும் வெளிப்படுத்தும் குறியீடுகளின்மை ஆகியவற்றையே.

சுதேசமித்திரனில் பாரதி எழுதிய கட்டுரைகளிலும் நாம் செம்மையைக் காண முடியவில்லை. நீண்ட வாக்கியங்களையும், கவிதையில் ஒதுக்கிய வடமொழிச் சொற்களை இதில் அதிகம் பெய்துள்ள மொழியமைப்பையுமே காண்கின்றோம். ஆயின், அவரிடம் பிற்காலத்தில் சிறிய சிறிய தொடர்கள் கொண்ட தூய தமிழ்ச் சொற்கள் இடம்பெற்ற நடை உருவாயிற்று. சிறிய தானியம் போன்ற மூக்கு, சின்னக் கண்கள், சின்னத் தலை, வெள்ளைக் கழுத்து எனத் தொடரும் சிட்டுக் குருவியின் வருணனை புதுமை கொண்ட நடையை நினைவூட்டுவதாகும்.

6.2.2 திரு.வி.க. கண்ட உரைநடை வளர்ச்சி

திரு.வி.க.வின் உரைநடையோ எளிமை, இனிமை என்னும் இரண்டு இனிய பண்புகளைத் தாங்கி, சிறு சிறு தொடர்களால் துள்ளல் போட்டு நடை பயில்வதைக் காணலாம்.

“சாமிநாத ஐயர் தமிழிலே பிறந்தார்; தமிழிலே வளர்ந்தார்; தமிழிலே வாழ்ந்தார். அவர் பிறப்புத் தமிழ்; வளர்ப்புத் தமிழ்; வாழ்வுந் தமிழ்; அவர் மனமொழி மெய்களெல்லாம் தமிழே ஆயின. அவர் தமிழாயினர்; தமிழ் அவராயிற்று. அவர் தமிழ்; தமிழ் அவர்” எனத் தொடரும் மொழியிலும் (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் - பக்.100). “மொழிநடையைப் பற்றிய போராட்டத்தையும் என் வாழ்க்கை கண்டது. இப்போராட்டம் பொருளற்ற தென்பது எனது உள்ளக் கிடக்கை. ஒரே மனிதர் வாழ்க்கையிலேயே பலதிற நடைகள் அமைகின்றன. எழுதிப் பழகப் பழக அவருக்கென்று ஒரு நடை இயற்கையாகும். இன்னொருவருக்கு வேறுவித நடை இயற்கையாகும்” எனத் தொடரும் மொழிகளிலும் நாம் இவ்வுண்மையைக் காணலாம்.

திரு.வி.க.வின் இத்துள்ளல் நடையே கவிதைப் பண்புடன் உரைவீச்சாக மலர்ந்தது எனலாம்.

“1932ஆம் ஆண்டு ! துறையூர் உமாமகேசுவரர் வரவேற்பு ! சுயமரியாதை எழுச்சி ! என் பெயர் தீட்டிய வளைவு தீக்கிரை ! உமாமகேசுவரர் கையில் தீயன் சிக்கல் ! ‘நம்மவன் விடுங்கள்’ என்கிறது என் நா ! - (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக்.807)

எனத் தொடர்ந்து வியப்புக் குறிகளையே பயன்படுத்தி, சொற்கட்டில் ஒரு அழுத்தத்தையும் விறுவிறுப்பையும் ஊட்டிப் பெய்துள்ளமையை நோக்கும்போது இதனை உணரலாம்.

இத்துள்ளல் நடையே டாக்டர் சாலை.இளந்திரையன் அவர்கள் படைக்கும் உரைவீச்சிலும் அமைந்திருக்கிறது.

பெண்ணே,

பட்டு உடுத்தினால் பகட்டு -

நகை போட்டால் நளினம் -

பசை தடவினால் பளபளப்பு -

மை தீட்டினால் மலர்ச்சி -

சுண்ணம் பூசினால் சுகந்தம் -

இப்படி இப்படிச் சொல்லி

உன்னை

மரப்பாச்சி ஆக்கி விட்டார்கள் மனிதர்கள்

. .. . . . . . . . . . . . . . . . .

விளம்பரத் தட்டியாகவா நீ இருப்பது?

இதுவா பெண்ணின் பெருமை?

- (சாலை. இளந்திரையன், உரைவீச்சு. பக்-12)

என வரும் உரைவீச்சில், தனித்தொடர்கள், உணர்வு காட்டும் சிறு சிறு தொடர்கள் கொண்ட நடை காணப்படுகின்றதன்றோ?

6.2.3 நடையும் நடைமாற்றமும்

இளமையில் அவரிடம் கால்கொண்ட நடை வேறு. சங்க இலக்கியப் பயிற்சிக்குப் பிறகு அமைந்த கடிய நடைவேறு, பத்திரிகைத் துறையில் நுழைந்த பிறகு அமைந்த இனிய நடைவேறு. இறுதியில் அமைந்த பத்திரிகைக்காக மாற்றப்பட்ட நடையே அவரது உரைநடை வடிவமாயிற்று என்று அவரே தெளிவு செய்தல் காண்கிறோம். அவர் கொண்ட நடை பற்றிய விமர்சனத்தை அவர் கூற்றின் வாயிலாகவே காண்போம்.

“யான் தமிழ்ப் போதகாசிரியனாயிருந்தவன். இப்பொழுது தமிழ்ப் பத்திரிகையாசிரியனானேன். தேசபக்தனுக்கென்று ஒரு தனிநடை கொண்டேன். சிறுசிறு வாக்கியங்கள் அமைக்கலானேன். எளிமையில் கருத்துகள் விளக்கும் முறையைப் பற்றினேன். அந்நடையை நாடோறும் எழுதி எழுதிப் பண்பட்டமையால் அதுவே எனக்கு இயற்கையாகியது. பழைய தொடர் மொழிகளும் கோப்பு மொழிகளும் என்னுள்ளேயே ஒடுங்கின. சமயம் நேர்ந்துழிச் சிலவேளையில் அவை தலைகாட்டும்.” எவ்வித நடையைக் கைக்கொண்டார் என்பது பற்றி அவர் தரும் ஒரு குறிப்பையும் இங்குக் காணல் தகும்.

“செவ்விய தமிழ்நடை, தமிழ்நாட்டிலுள்ள பல்லோர்க்கு இது போழ்து பயன்படாதென்று கருதித் தேசபக்தனுக்கெனச் சிறப்பாக ஒருவகை உரைநடையைக் கொண்டுள்ளேன். இதுகாலைத் தமிழ்நாட்டு வழக்கிலுள்ள பிற மொழிக்குறியீடுகளையும் இக்கால வழக்குச் சொற்களையும் ஆன்றோராட்சி பெறாத சில முறைகளையும் பண்டைத் தமிழ் மக்கள் கோலிய வரம்பிற்குப் பெரிதும் முரணாதவாறு ஆண்டு வருகின்றேன்” என்ற கூற்றுகளிலேயே அவர்தம் செவ்வியநடை புலனாகிறதன்றோ? உருவாகும் உரைநடைகளின் நடையில் மாற்றம் காண்பது எதனால்? இவ்வினாவுக்குப் பலரும் பல்வேறுவகைக் காரணங்களைக் காட்டியுள்ளனர். திரு.வி.க. அதனை இயற்கை என்னும் ஒரே வகை விதைகளினின்றும் தோன்றும் மரங்கள், உருவ வேறுபாடு கொண்டு வளர்வது போல - மாறுபடுவது என்றும், மொழிநடை அவரவர் இயற்கைக் கேற்ற வண்ணம் அமையும் என்றும் கூறுகின்றார். உள்ளப் பண்போடு பண்பை உருவாக்கிய சூழல், வாழ்ந்த சூழல், கற்ற நூல், பழகிய பழக்கம் இவற்றைப் புலப்படுத்துவது போல அது காணப்பெறும்; ஒவ்வொருவரின் கையெழுத்தும் மாறுதல் போல அதுவும் ஒவ்வொருவரிடமும் மாற்றம் கொள்ளும்" என்கிறார், டாக்டர் மு.வரதராசனார்.

திரு.வி.க. பழகிய துறைகள் பல, பயின்ற துறைகள் பல, நுழைந்த துறைகள் பல, தேடிய துறைகள் பல. எனவே, அவரிடம் பல்வேறுபட்ட துறைமொழியறிவும், கலைமொழியறிவும் தமிழ்மொழியறிவோடு சங்கமமாயின. ஆதலின் அவருடைய நடை இவற்றையெல்லாம் வெளிப்படுத்தும் சிறந்த நடையாகக் காணப்படுகிறது எனலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

திரு.வி.க.வின் ஆசிரியர்களாக அமைந்தவர்களைக் குறிப்பிடுக.

விடை

2.

திரு.வி.க.வின் உரைநடையின் வடிவத்தை விளக்குக.

விடை

3.

திரு.வி.க.வின் துள்ளல் நடைக்கு உதாரணம் தருக.

விடை

4.

திரு.வி.க. தம் தமிழ்நடை பற்றிக் கூறியது என்ன?

விடை

5.

திரு.வி.க. பணியாற்றிய பத்திரிகைகள் யாவை?

விடை
6.

‘அவர் தமிழ், தமிழ் அவர்’ என்று திரு.வி.க. யாரைப் போற்றுகிறார்?

விடை

7.

திரு.வி.க. உரைநடையின் வடிவத்தில் எத்தகைய புதுமையை மேற்கொண்டார்?

விடை
8.

புதிய உரைநடையின் தந்தை என்றும், தமிழ் மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்படுபவர் யார்?

விடை