1.1 சிற்றிலக்கியம்
சிற்றிலக்கியம் என்ற வகைமை, அதனுள் அடங்கும் பல்வேறு சிற்றிலக்கியங்கள்; அவற்றின் உள்ளடக்கம், அமைப்பு, அவற்றின் சிறப்புகள் ஆகியவற்றை இங்குக் காணலாம்.
1.1.1 சிற்றிலக்கியம் என்ற வகைமை
தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்களைப் பேரிலக்கியம், சிற்றிலக்கியம் என்று பொதுவாக வகைப்படுத்தும் மரபு உள்ளது.
சிற்றிலக்கியம் என்றால் என்ன?
சிற்றிலக்கியம் - சிறிய இலக்கியம் எனப் பொருள் படுகிறது.
சிற்றிலக்கியம் என்னும் வகைமையை விளங்கிக் கொள்ளச் சிற்றிலக்கியங்கள் என்று
சொல்லப்படும் இலக்கியங்களைப் பேரிலக்கியங்கள் என்று சொல்லப்படும் இலக்கியங்களோடு ஒப்பிட்டுக் காண வேண்டும்.
1.1.2
பேரிலக்கியமும் சிற்றிலக்கியமும்
சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், பெருங்கதை, வளையாபதி, குண்டலகேசி என்பன போன்றவை பெருங்காப்பியங்கள். உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி போன்றவை சிறுகாப்பியங்கள். இவை போன்ற இலக்கியங்களைப் பேரிலக்கியம் என்று அழைப்பது மரபு ஆகும். தூது, உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம் முதலியவற்றைச் சிற்றிலக்கியம் என்பர். பேரிலக்கியத்திற்கும் சிற்றிலக்கியத்திற்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றைக் காண்போம்:
வரிசை
எண் |
பேரிலக்கியம் |
சிற்றிலக்கியம் |
1. |
பாடல் எண்ணிக்கை / அடி எண்ணிக்கை அதிகம் |
பாடல் எண்ணிக்கை / அடி எண்ணிக்கை குறைவு. |
2. |
அகப்பொருளிலோ புறப்பொருளிலோ பல துறைகளை உள்ளடக்கியது |
ஏதேனும் ஒரு துறையை மட்டும் கூறும் |
3. |
பேரிலக்கியம் தலைவனின் முழு வாழ்க்கையையும் விளக்கிக் கூறும். |
சிற்றிலக்கியம் தலைவனின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் கூறும். |
4. |
அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் கூறும். |
ஏதேனும் ஒன்றைக் கூறும். |
|
1.1.3 சிற்றிலக்கியம் - விளக்கம்
மேற்காட்டிய ஒப்பீட்டின் அடிப்படையில் சிற்றிலக்கியத்தைக் கீழ்க்காணுமாறு விளக்கலாம்:
1) |
சிற்றிலக்கியம்
அளவில் (பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கை) சுருங்கியதாக
அமைவது. |
2) |
அகப்பொருள், அல்லது
புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றியதாக அமையும். (கோவை
போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும்
உண்டு.) |
3) |
பாடப்பெறும் கடவுள்
அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு
கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக:
உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப்
பாடப்படுவது. |
4) |
அறம், பொருள், இன்பம்,
வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைத் தருவதாக
அமைவது சிற்றிலக்கியம். |
5) |
இவ்வகையில் தூது,
உலா, பிள்ளைத்தமிழ், கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற பலவகை
இலக்கியங்கள் சிற்றிலக்கியம் என்ற வகைமையுள் அடங்கும். |
• பிரபந்தமா, சிற்றிலக்கியமா?
சிற்றிலக்கியங்களை முதலில் பிரபந்தங்கள் என்று வழங்கினர். பிரபந்தம் என்ற வடசொல்லுக்கு நன்கு வடிவமைக்கப்பட்டது என்பது பொருள். இது அனைத்து இலக்கியங்களுக்கும் பொதுவானதே, ஆகவே
காலப்போக்கில் சிற்றிலக்கியம் என்ற சொல்லே இவ்வகை இலக்கியங்களைக் குறிக்க நிலைபெற்றது.
1.1.4
சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை
சிற்றிலக்கியம் என்னும் வகைமை பல இலக்கிய வகைகளை உள்ளடக்கியது என முன்பு கண்டோம். சிற்றிலக்கியம் என்பதனுள் 96 வகையான இலக்கியங்கள் காணப்படுகின்றன என்று பொதுவாகக் கூறும் வழக்கம் உள்ளது. சிற்றிலக்கிய வகைகள் தொண்ணூற்றாறு என்று கி.பி. பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய பிரபந்த மரபியல் என்ற பாட்டியல் நூல் கூறுகின்றது. இந்நூல்,
பிள்ளைக் கவிமுதல் புராணம் ஈறாகத்
தொண்ணூற் றாறுஎன்னும் தொகையதுஆம்
என்கிறது.
(பிள்ளைக் கவி = பிள்ளைத் தமிழ் என்ற இலக்கியம்
தொகை
= எண்ணிக்கை)
அதாவது, பிள்ளைத் தமிழ் என்ற இலக்கிய வகை முதலாகப் புராணம் ஈறாகத் தொண்ணூற்றாறு வகைப்பட்டது பிரபந்தம் என்பது இதன் பொருள் ஆகும்.
வீரமா முனிவர் இயற்றிய சதுரகராதியும் 96 இலக்கிய வகைகளைக் குறிப்பிடுகின்றது.
சிவந்தெழுந்த பல்லவன் உலா என்ற நூலில், தொண்ணூற்றாறு கோலப் பிரபந்தங்கள் கொண்ட பிரான் (கோலம் = அழகு; பிரான் = தலைவன்) என்ற
தொடர் இடம் பெறுகின்றது.
இவற்றால், சிற்றிலக்கியங்கள் 96 என்று கூறப்படும் பொதுவான மரபு இருந்துள்ளது என்று தெரிகிறது. ஆனால், இக்காலத்தில் முந்நூற்று ஐம்பதற்கும் மேற்பட்ட சிற்றிலக்கிய வகைகள் உள்ளன என்று அறிஞர்கள் கூறுவர். எனவே, சிற்றிலக்கிய வகைகள் இவ்வளவு என்று வரையறுத்துக் கூற இயலாது எனலாம்.
1.1.5 சிற்றிலக்கியக் காலம்
சங்க
காலத்திலேயே சிற்றிலக்கியம் தோன்றிவிட்டது
எனலாம். சங்க இலக்கியத்தை எட்டுத்தொகை,
பத்துப்பாட்டு எனப் பிரிப்பர். இவற்றுள், பத்துப்பாட்டில் 10 நூல்கள் உள்ளன. அவற்றுள் 5 நூல்கள் ஆற்றுப்படை என்ற சிற்றிலக்கிய வகை ஆகும். திருமுருகாற்றுப்படை, பொருநர்
ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை என்பன அவை.
சங்கம்
மருவிய காலத்துத் தொகையான பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள இனியவை நாற்பது, இன்னா
நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது ஆகியவை சிற்றிலக்கியங்களே ஆகும்.
பக்தி இலக்கியக் காலத்தில் நாயன்மார்கள் இயற்றிய திருமுறைகள், பன்னிரு ஆழ்வார்கள் இயற்றிய நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றுள் பல்வேறு சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. காரைக்கால் அம்மையார் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருநாவுக்கரசர் பாடிய திருத்தாண்டகம், மாணிக்கவாசகர் பாடிய திருத்தசாங்கம், திருக்கோவையார், திருமங்கை ஆழ்வார் பாடிய திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந்தாண்டகம் போன்றவை சிற்றிலக்கியங்கள் ஆகும்.
பின்னர்ப் பல்வேறு காலங்களில் பல்வேறு சிற்றிலக்கிய நூல்கள் இன்று வரையிலும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. எனினும், சிற்றிலக்கிய வகைகள் மேலோங்கி நின்ற காலத்தின் அடிப்படையில் சிற்றிலக்கியக் காலம் என்று அழைத்தனர். கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை சிற்றிலக்கிய வகைகள் மேலோங்கி நின்றன. இக்காலத்தைச் சிற்றிலக்கியக் காலம் என்று அழைக்கலாம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
தமிழில் உள்ள இலக்கிய வகைமைகள் சிலவற்றைக் கூறுக. |
விடை |
2. |
பேரிலக்கியம் - சிற்றிலக்கியம் வேறுபாடுகளுள் ஒன்றைக் குறிப்பிடுக. |
விடை
|
3. |
சிற்றிலக்கியத்தைக் குறிக்க முதன் முதலில் வழங்கப்பட்ட சொல் யாது? |
விடை
|
4. |
சிற்றிலக்கிய வகைகளின் எண்ணிக்கை எனப் பொதுவாக எவ்வளவு கூறப்படுகிறது? |
விடை
|
5. |
சங்க இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கியத்துக்கும் பக்தி இலக்கியத்தில் உள்ள சிற்றிலக்கியத்துக்கும் ஒவ்வோர் எடுத்துக் காட்டுத் தருக. |
விடை |
|
|