5.2 திருமாலின் பெருமைகள்

தலைவி, தலைவனாகிய திருமாலின் மீது காதல் கொண்டு வருந்துவதாகக் காட்டப்படுகிறது. தலைவி காதல்கொண்ட திருமாலின் பெருமைகள் பெரிய திருமடலில் கூறப்படுகின்றன.

5.2.1 பள்ளி கொள்ளும் சிறப்பு

திருமால் பாற்கடலில் ஆதிசேடன் என்ற பாம்பைப் படுக்கையாகக் கொண்டு பள்ளி கொள்கின்றான். திருமாலின் தூக்கம் அறிதுயில் எனப்படும். இத்தகைய நிலை பெரிய திருமடலில் வருணிக்கப்படுகின்றது.

திருமால் பள்ளி கொள்ளும் படுக்கையாகிய ஆதிசேடன் ஆயிரம் வாய்களைக் கொண்டது. அதன் படங்களில் உள்ள மணிகள் ஒளி வீசுகின்றன. அப்படுக்கையில் ஒரு மலையைப் போன்று திருமால் பள்ளி கொள்கின்றான். சூரியனும் சந்திரனும் விளக்குகளாக உள்ளன. கடல் அலைகள் விசிறிகள். அவன் தாமரை மலர் போன்ற பாதங்கள் நில உலகை அளந்தவை. திருமகள் அணிந்துள்ள மாலை நட்சத்திரங்கள். அவள் கூந்தல் மேகங்கள். திருமாலிருஞ்சோலை மலையும் திருவேங்கட மலையும் மார்புகள். இத்தகைய திருமகள் திருமாலின் திருவடிகளைத் தடவ, அவன் பள்ளி கொள்கின்றான். தூக்கம் நீங்கிய பின் படைத்தல் தொழிலில் ஈடுபட்டான். தன் கொப்பூழில் தாமரைப் பூவை உண்டாக்கினான். அத்தாமரைப் பூவில் பிரம்மனை உண்டாக்கினான் என்று கூறுவதாகக் காட்டுகின்றார். திருமால் பள்ளி கொண்டதை.

மன்னிய பல்பொறிசேர் ஆயிரம்வாய் வாள்அரவின்
சென்னி மணிக்குடுமித் தெய்வம் சுடர்நடுவுள்
மன்னிய நாகத்து அணைமேல்ஓர் மாமலைபோல்
மின்னும் மகரமணிக் குண்டலங்கள் வில்வீச
துன்னிய தாரகையின் பேர்ஒளிசேர் ஆகாசம்
என்னும் விதானத்தின் கீழால் - இருசுடரை
மன்னும் விளக்குஆக ஏற்றி மறிகடலும்
பள்ளு திரைக்கவரி வீச - நிலமங்கை
தன்னை முனநாள் அளவிட்ட தாமரைபோல்
மன்னிய சேஅடியை ; வான்இயங்கு தாரகைமீன்
என்னும் மலர்ப்பிணையல் ஏய்ந்த மழைக்கூந்தல்
தென்னன் உயர்பொருப்பும் தெய்வ வடமலையும்
என்னும் இவையே முலையா வடிவுஅமைந்த
அன்ன நடைய அணங்கே அடிஇணையைத்
தன்உடைஅங் கைகளால் தான்தடவத் தான்கிடந்துஓர்
உன்னிய யோகத்து உறக்கம் தலைக்கொண்ட
பின்னை ..............................................................
(அடிகள் : 1-17)

(பொறி = புள்ளி; வாள் = ஒளிமிகுந்த; அரவு = பாம்பு; சென்னி = தலை; அணை = படுக்கை; வில் = ஒளி; துன்னிய = நெருங்கிய; தாரகை = நட்சத்திரம்; ஆகாசம் = வானம்; விதானம் = மேல் விரிப்பு (கூரை); கீழால் = கீழாக; இருசுடர் = சந்திரன், சூரியன்; திரை = அலைகள்; கவரி = விசிறி; முனநாள் = முன்பு ஒரு நாள்; சேஅடி = சிவந்த பாதம்; பிணையல் = மாலை; மழை = மேகம்; தென்னன் = பாண்டியன்)

என்று பாடுகிறார்.

இவற்றுள், திருமால் பாம்பைப் படுக்கையாகக் கொண்டது, நிலத்தைத் தன் பாதத்தால் அளந்தது. பிரம்மனைத் தோற்றுவித்தது ஆகிய பெருமைகள் கூறப்படுகின்றன.

5.2.2 இடங்களும் சிறப்புகளும்

தலைவனின் பல்வேறு பெருமைகளைக் கூறும் தலைவி, தலைவனாகிய திருமால் எழுந்தருளும் இடங்களையும் சிறப்புகளையும் கூறுவதாகக் காட்டப்படுகின்றது.

திருவிண்ணகர்
- பொன்மலைபோல் எழுந்தருளியுள்ளான்.
திருக்குடந்தை - போர்செய்த காளையைப் போல் சாய்ந்து பள்ளி கொண்டுள்ளான்.
திருக்குறுங்குடி
- பவள மலை போல் விளங்குகின்றான்.
திருஎவ்வுள்
- மலைபடுத்தது போல் காட்சி கொடுக்கின்றான்.
திருக்கண்ணமங்கை
- கற்பக மரமாக எழுந்தருளுகின்றான்.
திருவெள்ளறை
- திருமகளுடன் விளங்குகின்றான்.
திருப்புட்குழி
- மரகதம் ஆக எழுந்தருளுகின்றான்.
திருவரங்கம் - நீலமணிபோல் விளங்குகின்றான்.
திருவல்லவாழி
- நப்பின்னைப் பிராட்டியின் நாயகன் ஆக உள்ளான்.
திருப்பேர்
- பிடிப்பில்லாத பெருமான் ஆக விளங்குகிறான்.
திருக்கடல்மல்லை
- நித்தியவாசம் செய்கின்றான்.
திருத்தண்கால்
- வலிமையாளன் ஆகக் காட்சி அளிக்கின்றான்.
திருவழுந்தூர்
- சோதியாய் விளங்குகின்றான்.
திருக்கோட்டியூர்
- சக்கரப் படை ஏந்தி உள்ளான்.
திருமெய்யம்
- அமுத வெள்ளம் ஆக எழுந்தருளி உள்ளான்.
திருவிந்தளூர்
- அந்தணனாய் உள்ளான்.
காஞ்சியில் உள்ள
திருவேளுக்கை
- நரசிம்மனாய் உள்ளான்.
திருவெஃகா
- பள்ளி கொண்டுள்ளான்.
திருமூழிக்களம்
- விளக்காக உள்ளான்.
திருஆதனூர்
- காலங்களை அளக்கும் இறைவனாக உள்ளான்
திருநீர் மலை
- நேற்று, இன்று, நாளை ஆகிய மூன்று காலங்களுக்கும் தலைவன் ஆக உள்ளான்.
திருப்புல்லாணி
- நான்கு வேதங்கள் ஆக உள்ளான்.
திருத்தலைச்சங் காடு
- முழுச் சந்திரன்போல் உள்ளான்.
திருவாலி - அமுதமாகக் காட்சி அளிக்கின்றான்.

இவ்வாறு தலைவி தலைவனாம் திருமால் எழுந்தருளி உள்ள இடங்களையும், அங்கு உள்ள இறைவனின் சிறப்புகளையும் கூறுகிறாள்.

5.2.3 பிற பெருமைகள்

தலைவி தன் காதல் துயரத்தின் காரணம் யார் என்று தெரியுமா? எனக் கேட்டுத் தலைவனாகிய திருமாலின் பல்வேறு பெருமைகளைக் கூறுவதாகக் காட்டப்படுகின்றது.

மணம் வீசும் துளசி மாலை அணிந்த மார்பை உடையவன்.காயாம் பூ என்ற மலரின் நிறத்தை உடையவன். அவன் இராமன் ஆவான். அவன் இராவணனுடன் போர்செய்து இராவணனின் பத்துத் தலைகளையும் வெட்டியவன். நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியன் என்ற அரக்கனின் மார்பை வகிர்ந்தவன். சக்கரப் படையினைக் கையில் ஏந்தியவன். பன்றி அவதாரம் எடுத்தவன். இந்த உலகைக் கடல் விழுங்கியபோது பன்றி வடிவம் எடுத்து, கொம்பால் உலகைக் கடலின் மேலே எடுத்தவன். கடலில் அமுதத்தைக் கடைந்தவன். குறுகிய வடிவம் ஆகிய வாமன அவதாரம் எடுத்தவன். வாமன அவதாரம் எடுத்து மாவலியை அடக்கியவன். திருமகளின் கணவன் என்று திருமாலின் பல்வேறு பெருமைகளைத் தலைவி கூறுகின்றாள். எடுத்துக்காட்டாக,

மன்னன் நறும்துழாய் வாழ்மார்பன் மாமதிகோள்
முன்னம் விடுத்த முகில்வண்ணன் - காயாவின்
சின்ன நறும்பூம் திகழ்வண்ணன் ........................
(அடிகள் :191-193)

(நறும் = மணம்மிக்க; துழாய் = துளசி; மார்பன் = மார்பை உடையவன்; மாமதி = சந்திரன்; கோள் = துன்பம்; முன்னம் = முன்னால்; விடுத்த = நீக்கிய; முகில்= மேகம்; வண்ணன் = நிறம் உடையவன்; காயா = காயாம்பூ)

என்ற அடிகளைக் காட்டலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.

பெரிய திருமடலை இயற்றியவர் யார்?

விடை
2.

நாற்பொருள்கள் யாவை?

விடை
3.

திருமாலின் படுக்கை யாது?

விடை
4.

திருமாலின் நிறம் யாது?

விடை
5.

திருமால் திருவழுந்தூரில் எவ்வாறு காட்சி தருகிறார்?

விடை