தன்மதிப்பீடு : விடைகள் - II

3) பிள்ளைத் தமிழ் நூலின் சந்தச் சிறப்புப் பற்றி எழுதுக.

பாரதிதாசனைப் போலவே பல சந்தங்களைக் கையாண்டு பாவேந்தர் பிள்ளைத் தமிழைச் சிறப்பித்துள்ளார் ஆசிரியர்.

தமிழ் மொழியைப் பெண்ணாகவும், அம்மொழியில் அமைந்த நூல்களின் பெயர்களைப் பெயர் ஒப்புமை கொண்டு தமிழ்ப் பெண்ணின் அணிகலன்களாகவும் விளங்க, தமிழ்ப் பெண் ஆடிய அழகைக் கண்டு மனத்தைப் பறி கொடுத்து மயில் போலக் களித்துப் பாக்களைப் பாடிய புரட்சிக் கவிஞராம் குழந்தையே நீ செங்கீரையாடி அருள்வாயாக என்று பாடும் அழகைப் பாருங்கள்.

வடிவமை காதினில் குண்டலகேசி
வயங்கொளி கொண்டாட
வார்ந்த எழிற்கரம் ஏந்திய ஆடக
வளையாபதி ஆடத்
துடியிடை கையினில் ஒரு பிடி என்று
துவண்டு துவண்டாடும்
துறவற மேகலை ஒரு புறமாகவும்
தூய சிலம்பாடும்

அடிமலர் கண்டொரு மாமயிலானவன்
ஆடுக செங்கீரை
அஞ்சுகமாம் தமிழ் கொஞ்ச மகிழ்ந்தவன்
ஆடுக செங்கீரை

பாரதிதாசனின் கவிதையில் அமையும் சந்த அழகில் ஈடுபட்டுத்தான் பாவலர் புதுமைப்பித்தன் மேற்கண்ட பாடல் போல் அனைத்துப் பாடல்களையும் சந்தச் சிறப்புடன் அமைக்கின்றார்.