6.4 தொகுப்புரை | ||||||||||||||||
பாவலர்புலமைப்பித்தன், புதுமை உலகம் காணத் துடிக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றை, சிறந்ததொரு பிள்ளைத் தமிழ் இலக்கியமாகப் படைத்துள்ளார். பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக, பழைய மரபில் புதிய கருத்துகளைஎடுத்துரைக்கும் விதத்திலும், பாரதிதாசனின் தமிழ்ப் பற்றையும், சமுதாயப் பற்றையும், இலக்கியப் பணிகளையும் போற்றும் விதத்திலும் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது. இந்நூலில் பாரதிதாசன் உள்ளத்தைக் கவர்ந்த பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் இவ்வாசிரியருடைய உள்ளத்தையும் கவர்ந்திருப்பதால் அது தொடர்பான கருத்துகளை எடுத்துரைக்கும் போது மனம் ஈடுபட்டுப் பாடக் காணலாம்.
அண்ணா என் மனக் கோயில் இறைவன் (81)
பாவேந்தர் என் பாட்டுடைத் தலைவன் என்றும் பாடக் காணலாம்.
‘பாவேந்தர் புகழைப் பாடும் தகவு இலாச் சிறிய கவிநான்’
(31) என்று பாவலர் புலமைப்பித்தன் அவையடக்கமாகக் குறிப்பிட்டாலும், பாரதிதாசனின்
தமிழ்ப்பற்றையும், சமுதாய அக்கறையையும் சிறிதும் குறைவுபடாமல் எடுத்துரைக்கும்
பாவேந்தர் பிள்ளைத் தமிழ் சிறந்ததோர் பிள்ளைத் தமிழ் இலக்கியம்
என்பதில் சிறிதும் ஐயமில்லை.
|