தமிழ் இலக்கியத்தில் மிகச் சிறப்பாகப் போற்றப்படும்
காப்பியங்களில் ஒன்று இராமாயணம். அதில் அயோத்தியா காண்டத்தின் ஒரு
பகுதியான கங்கைப் படலம் என்ன சொல்கிறது என்பதை இப்பாடம் விளக்குகின்றது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
பெரியோரைக் (அரசனைக்) காணுங்கால், கையுறை எடுத்துச் செல்ல வேண்டும் என்னும்
நாகரிகம் வெளிப்படுகிறது.
தான் வேடர்
தலைவனாயினும், சக்கரவர்த்தித் திருமகனுக்குக் கட்டுப்படுகின்ற குகனின்
உயர் பண்பு குறிப்பிடத் தக்கதாகும்.
இராமன் சக்கரவர்த்தித்
திருமகனாயினும் வேடனாகிய குகனோடு அவன் கொள்ளுகின்ற நட்பு, தோழமை ஆகியவை
இராமனின் உயர்பண்பை வெளிக்காட்டுகின்றன.
ஒவ்வொருவரையும்
அவரவர் பணியில் நிறுத்தும் இராமனின் நிர்வாகத்திறன் (தலைமைப் பண்பு)
மேலோங்கி நிற்பதனைக் காணலாம்.
அன்புடையாரைக்
காணுங்கால், மகிழ்வது மட்டுமன்றி, அவர் இடருற்ற பொழுது அவர்க்கு உற்றுழி
உதவ வேண்டும் என்கின்ற உயர்ந்த பண்புடையவன் குகன் என்பதை இப்படலத்தின்
வழி உணர முடிகின்றது.
அன்பால் அகிலத்தை
ஆளலாம் என்னும் உயர்ந்த கருத்து, இப்படலத்தில் சிறப்பாக வெளிப்படுவதை
அறியலாம்.
அன்பால், உடன்பிறப்பு என்னும் உறவுமுறை விரிவடையும் தன்மையைக் கம்பர்
காட்டுவதை அறிந்து மகிழலாம்.