6.1 மொழிபெயர்ப்பில் இடர்ப்பாடுகள்
மொழிபெயர்க்கும்போது பல இடர்ப்பாடுகளை
அல்லது
சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும். அவற்றுள் சில
வகைகளை இனிக் காணலாம்.
மொழிபெயர்ப்பது எப்படி என்பது பற்றியும்
மொழிபெயர்ப்பு முறைகள் பற்றியும் அறிவது ஒருபுறமிருக்க,
மொழிபெயர்ப்பு வகைகளை அறிவதும் ஓர் அடிப்படை ஆகும்.
அந்த வகையில் மொழிபெயர்ப்புப் பணியில் எழுகிற
நடைமுறைச் சிக்கலைப் பட்டறிவு கொண்டுதான் கூர்ந்தாய்வு
செய்ய இயலும். அப்பொழுதுதான் ஒரு தீர்வும் ஏற்படும்.
மொழி எதுவாயினும் காலம்தோறும் பல்வேறு வகைகளில்
பிரித்தும், வகுத்தும் திறம் கண்டுள்ளனர்.
மொழிபெயர்க்கப்படும் மொழி எதுவாயினும் அதற்கு
இலக்கிய வழக்கு, உலக வழக்கு என்ற இரு பாகுபாடுகள்
உள்ளன. மொழிநிலையின் இன்றைய போக்கு சில நேரங்களில்
நடுச்சந்தித்தேர் போல
மொழித் தூய்மை நாடுவோர்
ஒருபுறமும், மொழிக் கலப்பை ஆதரிப்போர்
மறுபுறமும்
அமைய இருதிசைகளில்
இழுக்கப்படுகிறது. இந்நிலையில்
அம்மொழி பேசும் பாமர மக்கள் தங்களுக்குள் சில ஒலி
வடிவத்தை வைத்து வாழ்வு
நடத்துவதும் உண்டு. உலக
வரலாற்றுப் பக்கங்களைப்
புரட்டினால் உலகில் உதித்த
மொழிகளின் வாழ்வும், தாழ்வும் அம்மொழி பேசும் மக்கள்
நாட்டைக் கட்டி ஆளும் வல்லமை பெற்றபோது வாழ்ந்தும்
அம்மொழி இனத்தார் தாழ்ந்த போது வழக்கொழிந்தும்
வந்ததைக் காணுகிறோம்.
பொதுவாக மொழிபெயர்ப்புகளை
ஒன்பது வகையாகப்
பகுக்கலாம் அவை வருமாறு;
(1) இலக்கிய மொழிபெயர்ப்பு
(2) அறிவியல் மொழிபெயர்ப்பு
(3) சட்டத்துறை மொழிபெயர்ப்பு
(4) விளம்பர வகையிலான மொழிபெயர்ப்பு
(5) மக்கள் தொடர்புச் சாதன மொழிபெயர்ப்பு
(6) தொழில்நுட்பத் துறை மொழிபெயர்ப்பு
(7) ஆட்சித்துறை மொழிபெயர்ப்பு
(8) நீதித்துறை மொழிபெயர்ப்பு
(9) மேடை மொழிபெயர்ப்பு
6.1.1 இலக்கிய மொழிபெயர்ப்பு
தமிழில் இலக்கிய மொழிபெயர்ப்பு என்கிற பொழுது
ஷேக்ஸ்பியர் படைப்புகளின் மொழிபெயர்ப்பு, தாகூரின்
கீதாஞ்சலி மற்றும் உமர்கய்யாமின் ரூபாயத்தின் ஆங்கில
ஆக்கம் செய்த ஃபிட்ஸ்ஜெரால்ட் நூலின் கவிமணியின்
தமிழாக்கம், ச.து.சு. யோகியாரின் தமிழாக்கம் ஆகியவை நம்
கண்முன் எழுவது இயற்கை. காளிதாசனின் சாகுந்தல
நாடகத்தை மறைமலையடிகள் மொழிபெயர்த்தார். குமார
சம்பவத்தையும் மேக சந்தேசத்தையும்
ஜெகந்நாத ராஜா
மொழியாக்கம் செய்தார். மிருச்சகடிகத்தைப் பண்டிதமணி
அவர்கள் மண்ணியல் சிறுதேர் என்று மொழிபெயர்த்தார்.
செம்மீன், இரண்டிடங்கழி என்னும் தகழி
சிவசங்கர
பிள்ளை அவர்களின் மலையாள நூல்களைச் செம்மீன்,
இரண்டு படிகள் என்ற பெயர்களில் சுந்தர ராமசாமி
மொழிபெயர்த்தார். இவற்றில் கவிதை வடிவ நூலை
மொழியாக்கம் செய்கிற பொழுது கவி உள்ளம்
புலப்படாநிலையில் மொழிபெயர்ப்பாளர் தடுமாற
வாய்ப்பு
ஏற்படுகிறது. மூலக் கவிதையின் உயிரோட்டத்தை உள்வாங்கி
அதே வேகத்தில் வெளியிடுவது சிரமமாக இருக்கிறது. இது
உயிரோட்டப் புலப்பாட்டுச் சிக்கலாக அமைகிறது.
இலக்கியங்களை அந்தந்த மொழியில் கற்பதுதான் உயிரூட்டம்
தரும் என்றும், காவியங்களையும், மெய்ஞ்ஞான
தத்துவங்களையும் எளிதில் மொழிபெயர்க்க இயலாது என்றும்
கூறுவர். கருத்தோட்ட மொழிமாற்றம் என்பது மொழி
பெயர்ப்பாளருக்கு மொழிபெயர்ப்பாளர் மாறுபடும். இதனை
‘உமர்கய்யாம்’ பாடல்களைத் தமிழில் தந்த கவிமணி, ச.து.சு.
யோகியார் ஆகியோரின் தமிழாக்கங்களைப் படித்து
உணரலாம்.
6.1.2 அறிவியல் மொழிபெயர்ப்பு
அறிவியலில் உள்ள அடிப்படைக் கருத்துகள் எல்லா
நாட்டினரிடையேயும் மிகவும் பரவலாகப் பரப்பப்பட்டு வந்தன;
வருகின்றன. இதனால் அறிவியல் பற்றிய புத்தகங்கள்
எழுதப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.
இலக்கியத்தை அதிகமாக மொழிபெயர்க்கும் பணியில்
ஈடுபட்டிருப்பவர்கள் அறிவியல் துறையில் தங்கள் கவனத்தைச்
செலுத்த வேண்டியது மிகவும் தேவையான ஒன்றாகும்.
ஏனென்றால் இன்றைய உலகம் ஓர் அறிவியல் உலகமாகத்
திகழ்கிறது என்பதோடு, அந்த அறிவியல் கருத்துகள்
எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டாக வேண்டும் என்ற
தேவையும் முன் நிற்கிறது.
அறிவியல் படைப்புகளை மொழிபெயர்ப்பது என்பதை ஒரு
சிறந்த மொழிபெயர்ப்புக்குச் சான்றாகக் கொள்ளலாம். இதில்
கருத்துகளுக்குத்தான் முதலிடம் அளிக்கப்படுகிறதே தவிர,
கருத்துகள் வெளியிடப்படுகின்ற முறைக்கு அல்லது நடைக்கு
அல்ல.
மூலமொழியிலுள்ள கருத்துகளைப் பற்றிய அறிவை
அறிவியல் மொழிபெயர்ப்பாளர் பெற்றிருக்க வேண்டிய
தேவையை வலியுறுத்தல் அவசியம். அறிவியல்
மொழிபெயர்ப்பிலே சொற்களுக்கு மிகுந்த முக்கியத்துவம்
அளிக்கப்பட்டுள்ளது.
அறிவியல் நூல்கள் கருதுகோள் அடிப்படையில்
பரிசோதனையை நடத்திச் சில உண்மைகளை வெளியிட்டு
நிற்கின்றன. இந்நூல்களைப் படிக்கின்றவர்கள் உண்மைகளைத்
தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால்
அவர்கள் படைப்பாளியினுடைய இலக்கிய நடைநலனில் கவனம்
செலுத்துவதே இல்லை. கருத்துகள் தெளிவாகப் புரியும்
வண்ணம் சொல்லப்படவேண்டும் என்பதுதான்
மொழிபெயர்ப்பாளரின் முக்கியக் குறிக்கோளாக அமைதல்
வேண்டும்.
அறிவியல் நூல்களைப் படிப்பவர்கள் செய்தித்
தெளிவுக்காகவும் அறிவு விளக்கத்திற்காகவுமே படிக்கின்றனர்.
அறிவியல் செய்திகள் எளிமையாக, தெளிவாக விளக்கப்பட
வேண்டும். மொழிபெயர்க்கப்படும் மொழியில் எளிதில்
விளங்கக் கூடிய வகையிலே சொற்களைப் புதிதாக உருவாக்க
வேண்டும்.
சான்றாக :
ஆங்கிலத்தில் Pump என்ற சொல்லுக்குக் கிணற்றிலிருந்து
நீரை இறைத்து வெளியேற்றும் கருவி என்பது பொருள்.
இவ்வளவு பெரிய தொடரை மொழிபெயர்ப்பாகத் தர
இயலாதே, இதற்கு இணையான சொல் என்ன என்று சிந்தித்த
பொறியாளர் கொடுமுடி. சண்முகம் ‘அறிவியல்
மொழிபெயர்ப்பில் ஏற்படும் சிக்கல்கள், என்ற தனது வானொலி
உரையில் எற்றி என்ற சொல்லைக் குறிப்பிட்டார். பின்னர்
மருத்துவக் கல்லூரியில் Pump என்பது எக்கி என்று
கூறப்பட்டதாக அறிந்து பேரகராதியை நாடிய போது எக்கி
என்ற தொடர் நீர்வீசும் பொறி என்ற பொருளில்
சுட்டப்பட்டிருப்பது கண்டு மகிழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரே அந்த வானொலி உரையில் மேலும் விளக்கும்போது,
Budget என்ற தொடரை வரவு செலவுத்திட்டம் என்கிறோம்,
பொருளாதாரத்தில் மட்டுமன்றி Time Budget, Water Budget
என்ற தொடர்களுக்குப் புதுச்சொல் தேட வேண்டியுள்ளது.
இச்சொல்லுக்கேற்ற நல்ல சொல் சொல்லடையாக அமைந்தால்
எதனொடும் பொருத்திக்காண வாய்ப்பு ஏற்படும் என்றும்
குறிப்பிட்டார்.
பல சொற்கள் உருவாகும் நிலையில் மொழி வளர்ச்சி
மேலோங்குகிறது. அந்தப் புதிய சொற்கள் வளருந்தன்மையைக்
கருத்தில் கொண்டு மற்றைய மொழிகளில் புதிய சொற்களை
நாம் அமைக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக :
Photo என்ற சொல் இருக்கிறது. அதிலிருந்து
photograph, photography, photo synthesis, photometry
என்ற பல தொடர்கள் உருவாயின. இதற்கு இணையான தமிழ்ச்
சொல்லை உருவாக்கக் கருதினால் photo என்பதற்கு ஒளி
என்ற அடிச்சொல்லை ஏற்றுக் கொண்டால் ஒளிவரை,
ஒளிவரையம், ஒளிச்சேர்க்கை, ஒளி அளவையம் என்று
அமைப்பது எளிமையும் தெளிவும் பெறும். அறிவியல்
மொழிபெயர்ப்பில் கருத்து மாறுபாடு எளிதில் ஏற்பட
வாய்ப்புண்டு. அறிவியல் செய்திகள் உலகளாவிய தன்மை
கொண்டிருப்பதால் அது உலக அரங்கில் பயன்படுத்தப்படும்
பொருள்நிலையிலேயே மொழியாக்கத்திலும் அமைதல்
வேண்டும். பிறமொழிச் சொற்கள் வலுக்கட்டாயமாக
மாற்றப்படாமல் இயல்பாகப் பொருள் உணர்த்தும் வகையில்
மொழியாக்கம் பெற வேண்டும். அவ்வாய்ப்பு குன்றிய நிலையில்
ஒலிமாற்ற நிலையில் அல்லது போல ஒலித்தல்
நிலையில் அமைவதும் பொருந்தும்.
Radar - ரேடார்
Penicillin - பென்சிலின்
Molecule - மூலக்கூறு
என்று பொருள்நிலை ஒலிமாற்றத்தை இங்கே காணலாம்.
''கலப்பென்று தமிழையே மறைக்க முயல்வது தமிழுக்கு
ஆக்கம் தேடுவதாகாது. தமிழை வளர்க்கும் முறையிலும்
அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு'' என்ற திரு.வி.க.வின்
கூற்று சிந்தித்தற்குரியது.
6.1.3 சட்டத்துறை மொழிபெயர்ப்பு
மொழிபெயர்ப்பு நான்கு நோக்கங்களில் அமைகிறது. அவை:
(1) வேற்றுமொழி அறியாதவர்களுக்குப் பயன்பட
வேண்டுமென்ற நோக்கு.
(2) வேற்றுமொழி நூல் பலவற்றை அறிந்து கொள்ள
வேண்டுமென விழையும் ஆர்வலர்க்குப் பயன்படும்
நோக்கு.
(3) பிறமொழியை ஒரு காலக் கட்டத்தில் பயின்று தங்குமிடம்,
தொழில் காரணமாக மறந்துவிட்டவர்கள் மீள்நினைவு
பெறவேண்டும் என்ற நோக்கு.
(4) அரசியல் நிகழ்வுகளைக் குடிமக்கள் அம்மொழியறிவு
இல்லாத காரணத்தால், அறிய இயலாநிலையில்
தவறு இழைப்பதைத் தடுக்கும் நோக்கு.
என்பனவாகும். இன்ன தவறுக்கு இன்ன தண்டனை என்று சட்டம் விதிக்கிறது.
சட்டத்தை அறிந்திருக்கவில்லை (சட்டம் தெரியாது)
என்பதால்
தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அதே
போல, சட்டம்
எழுதப்பட்டுள்ள மொழி தெரியாது
என்பதாலும்
தண்டனையிலிருந்து தப்ப முடியாது. (Ignorance of Law is no
excuse.) இந்த நெருக்கடியிலிருந்து மக்களைக் காப்பதற்காகவே
ஆங்கில மொழியிலுள்ள
சட்டங்களைத் தமிழில்
மொழிபெயர்க்கும் முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன;
தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
நமது அரசியல் அமைப்புச் சட்டம்
ஆங்கிலேயர்
ஆட்சிக்காலத்தில் இயற்றப்பட்ட காரணத்தால் ஆங்கிலத்தில்
எழுதப்பட்டுள்ளது. அது அப்போதைக்கப்போது
மொழிபெயர்க்கப்பட்டு மக்கள் அறியும் வண்ணம்
வெளிவந்துள்ளது.
1908ஆம் ஆண்டு உரிமையியல் விசாரணைச் சட்டம்.
1919ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிச் சட்டம்
1920ஆம் ஆண்டு மாவட்ட நகராட்சிகள் சட்டம்
1967ஆம் ஆண்டு இந்திய சாட்சிச் சட்டம்.
இப்படி காலவாரியாகத் தேவை கருதி இவை
வெளியிடப்பட்டன. ஆனால், சட்ட அறிவை மக்கள், அரசியல்
அமைப்பைச் சார்ந்த உரிமையாகக் கோர இயலாது கலங்கிய
ஒரு காலக்கட்டம் இருந்தது. விடுதலைக்குப் பின்னர் இந்திய
அரசியலமைப்புச் சட்டத்தில் ஆட்சி மொழிக்கு வகை
கோலப்பட்டது. இதை ஒட்டி எழுந்த மாநில ஆட்சிமொழி
ஆணையங்கள் பல நாடெங்கிலும் அமைக்கப்பட்டு, வட்டார
மொழிகளில் மைய மாநிலச் சட்டங்கள் மொழிபெயர்த்து
மக்களுக்கு வழங்கப்பட்டன.
இவ்வகையில் 1967ஆம் ஆண்டுக்குப் பின் தமிழக அரசு
ஆட்சி மொழி ஆணையம் சட்ட
மொழிபெயர்ப்பைத்
தொடங்கித்
தமிழில் வெளியிடத் தொடங்கியது. சட்டத்தை
மொழிபெயர்ப்பது, மொழிமரபுப்படி அமைய வேண்டுமானால்
நெடுங்காலச் சட்ட நிருவாக அனுபவம் இருந்தால் தான்
மொழிபெயர்ப்புச் சிறப்பாக அமையும். ‘செம்மையான சட்டத்
தமிழாக்கத்திற்கு மொழிபெயர்ப்புத்துறை அனுபவமும், தமிழ்
மொழியறிவும், தமிழில் புதிதாகச் சொற்களைப் படைக்கும்
ஆற்றலும் இருந்தாக வேண்டும். புதுச் சொற்கள் தமிழ்
மரபுப்படியே தரப்படவேண்டும். இப்பணியில் எளிமையும்,
சுருக்கமும் கருதித் தமிழ் வேர்ச் சொற்களையே பயன்கருதி
ஆக்க வேண்டும். இக்கட்டான கட்டங்களில் ஆங்கிலச்
சொற்களை அடைப்புக்குறிக்குள் பயன்படுத்தலாம்’ என்று
டாக்டர் வீ.சந்திரன் குறிப்பிடுகிறார். இக்கருத்தை மா.சண்முக
சுப்பிரமணியமும் வலியுறுத்துகிறார்.
எடுத்துக்காட்டாக :
Damages என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படும் சட்டச்
சொல்லுக்கு, ''இரண்டு பேர் தமக்குள் ஓர் ஒப்பந்தம்
செய்துகொண்டு ஒருவர் ஒப்பந்தத்தை நிறைவேற்றத்
தவறுவதால் மற்றவருக்கு இழப்பு நேரிடுகிறது. இழப்பு
நேர்ந்தவர் ஒப்பந்தத்தை மீறியவர் மீது வழக்கிட்டுப் பெறும்
தொகைதான் Damages என்பது.'' இதற்கு இழப்பீடு என்று
மொழிபெயர்ப்பு இருக்கிறது. இதே Damages என்பது அவதூறு
காரணமாக எழுமானால் தீங்கீடு என்று குறிக்கப்படுகிறது.
Punishment என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தண்டனை என்கின்றனர். Sentence என்ற சொல்லுக்குத்
தீர்ப்புத்தண்டனை என்கின்றனர். இங்ஙனம் நுண்நோக்குடன்
கண்டு ஆய்ந்து எழுதப்படும் நிலையில் பல சிக்கல்கள் தீர
வாய்ப்பு ஏற்படுகிறது.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
|
1.
|
மொழிபெயர்ப்புக்கும், மொழியாக்கத்திற்கும்
உள்ள வேறுபாடு என்ன?
|
விடை
|
2.
|
மொழிபெயர்ப்பியல் வளர்ச்சியின் வகையில்
ஏற்பட்ட விளைவுகள் எத்தனை?
|
விடை
|
3.
|
நைடா கூறும் மொழிபெயர்ப்புத் தேவைகளை
எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?
|
விடை |
4.
|
உயிரோட்டப் புலப்பாட்டுச் சிக்கல் எப்பொழுது
எழுகிறது?
|
விடை |
5.
|
அறிவியல் நூல்களைப் படிப்போரின் நோக்கம்
என்ன?
|
விடை |
6.
|
Damages என்ற ஆங்கிலச் சொல்லுக்குப்
பயன்படுத்தப்படும் தமிழ்ச் சொற்கள் யாவை?
|
விடை
|
7.
|
மொழிபெயர்ப்பு எத்தனை நோக்கங்களில்
அமைகிறது? அவை யாவை?
|
விடை
|
|
|