3.2 தமிழில் அறிவியல் நூல்கள்

தமிழ்நாட்டைப் பொருத்தவரை அறிவியல் போன்ற பிறதுறைகளில் மொழிபெயர்ப்புகள் கால்கொள்ள முக்கிய காரணம் பாடத்திட்டமும் பயிற்று மொழியும் ஆகும். 1930ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடுநிலைப்பள்ளி வரை இருந்த தாய்மொழி வழியிலான பயிற்சி மொழித்திட்டம் பட்ட வகுப்பு வரை நீட்டிப்பதற்கு வித்திட்டது. முதலில் கலைப்பாடங்களையும் பின்னர் அறிவியல் பாடங்களையும் தமிழில் கற்பித்தனர். இதனால் கலைப்பாட நுல்களும் அறிவியல் பாடநூல்களும் பெருமளவில் மொழிபெயர்த்தும், தழுவலாகவும், புதிதாகத் தமிழிலும் எழுதிக் குவித்தனர். அதனைத் தொடர்ந்து பொதுவாக அறிவியல் நூல்கள் வெளிவந்தன. இதழ்களில் அறிவியல் கட்டுரைகள் அதிக அளவில் எழுதப்படும் சூழ்நிலை உருவானது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் விரைந்து வளரத் தொடங்கியது. புதிய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகிக் கொண்டு இருந்த காலம் அது. ஆங்கிலேயர்களின் தாய்மொழியும் பாட மொழியும் அறிவியல் தொழில்நுட்பச் செய்திகளை ஏந்தி வந்த மொழியும் ஆங்கிலமாகவே அமைந்ததால் அவர்களைப் பொருத்த வரையில் அறிவியலை உணர்ந்து கொள்ள அவர்களுக்குச் சிக்கல் ஏற்படவில்லை. அதே நேரம் ஆங்கில மொழி அறியாதவர்களுக்கு அந்தச் சிக்கல் பெருகியது. இதற்காக மொழிபெயர்ப்பு அவசியமாயிற்று.

3.2.1 தமிழில் அறிவியல் அறிவு

ஆங்கிலம் போன்ற மொழிகளில் அறிவியல் கண்டுபிடிப்புத் தகவல்களைக் கூறும் ஆய்வுச் செய்திகள் பெருமளவில் வெளிவந்த போது அவற்றை உடனுக்குடன் மொழிபெயர்ப்புச் செய்து தங்கள் மொழியில் கற்றதனால் ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் அறிவியல் துறையில் வளர்ந்து செழிக்க முடிந்தது.

நம் நாட்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கமும் புதிது. அவர்களது மொழியும் புதிது. அதன் வழி வந்த அறிவியல் செய்திகளும் புதியன. ஆங்கிலேயரின் ஆட்சியில் உருவான கல்விக் கொள்கையில் அறிவியலும் ஆங்கில வழி கற்பிக்க வழி இருந்தது. இந்த நிலைதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை தொடர்ந்தது. இந்த அறிமுகத்திற்குப் பிறகு, அவற்றைத் தமிழில் கற்றால் இன்னும் சிறப்படையலாம் என்ற வேட்கை அக்காலத்தில் ஏற்பட்டது.

இவ்வேட்கையை நிறைவேற்றும் பொறுப்பை ஆட்சியாளர்களும், கல்வியாளர்களும், கிறித்துவ சமய அமைப்புகளும் அறிவு வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட தனிப்பட்ட அறிஞர்களும் தமிழ் வழி அறிவியல் பரப்பும் வழி பற்றி முனைப்புடன் சிந்தித்தனர்.

அறிவியலைத் தமிழில் தருவதில் பல்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதாக இருந்தது.

முதலாவதாக, பள்ளிக் கூடங்களில் கல்வி கற்கும் இளம் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் அறிவியல் பாடங்களை எளிமையாக எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இரண்டாவதாக அறிவியல் செய்திகளைப் பொதுமக்கள் விரும்புமாறு கட்டுரை வடிவிலும் கதைப்போக்கிலும் எளிய வடிவில் தருதல் வேண்டும்.

இந்த அடிப்படைகளில் அறிவியல் செய்திகளை வெளியிட நூல்களை உருவாக்கியவர்கள் தொடக்கக் காலத்தில் மொழிபெயர்ப்பு ஒன்றையே துணையாகக் கொண்டனர். அவற்றைக் கற்று உள்வாங்கிக் கொண்டு எளிய தமிழில் எழுதப்பட்ட படைப்புகளையும் அறிமுக நூல்களாக வெளியிட்டனர்.

3.2.2 பயிற்சி மொழி மாற்றம்

1830ஆம் ஆண்டுவரை இருந்த பள்ளிக் கூடங்களை ஆங்கிலேய கிறித்துவ அமைப்புகளே நடத்தின. அதில் பயிற்று மொழியாக இருந்தது ஆங்கிலமே. அந்த ஆண்டில்தான் தாய்மொழியாகிய தமிழ் மூலம் சிறுவர்களுக்குப் பாடம் புகட்டும் தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இதில் முதல் கட்டமாக முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை தமிழே பயிற்சி மொழி ஆக்கப்பட்டது. பாடமொழி தாய்மொழியாகிய தமிழாக இருந்ததால் அதற்கு இணங்கப் பாடநூல்கள் தமிழில் எழுத வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் தொடக்கத்தில் ஆங்கிலப்பாட நூல்களை மொழிபெயர்த்து, தமிழாக்கம் செய்து வெளியிடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

3.2.3 தொடக்கக் கால அறிவியல் நூல்கள்

1832ஆம் ஆண்டு ஆங்கில அறிவியல் நூலை அடிப்படையாகக் கொண்டு இரேனியஸ் பாதிரியார் ‘பூமி சாத்திரம்’ என்ற பெயரில் புவியியல் நூல் ஒன்றனைத் தமிழில் எழுதி வெளியிட்டார்.

  • 1850க்கு முன்னர் சென்னைப் பாட சாலை புத்தகச் சங்கம் உருவாக்கப்பட்டுப் பாடநூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன.

  • 1854இல் தென்னிந்திய கிறித்தவ பாடசாலைப் புத்தகச் சங்கம் உருவாக்கப்பட்டது. அக்காலத்தில் இவ்விரண்டும் தமிழ் மொழிபெயர்ப்பில் துணை நின்ற நிறுவனங்கள் ஆகும்.

  • அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்த முதல் மருத்துவர் டாக்டர் ஃபிஷ் கிரீன் (Fish Green) ஆவார். மருத்துவ நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தவர். 1848ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்த மருத்துவ ஆசிரியர்.

• முதல் கணித நூல்

தமிழ் நாட்டில் எண்ணையும் எழுத்தையும் கண்ணாகப் போற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தமிழ்நாட்டு எண்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். எண் என்பது அறிவியலையும் எழுத்து என்பது கலையையும் குறிப்பதாகக் கூறுவர்.

எண்களைப் பற்றிய அறிவும், அளவை பற்றிய அறிவும், நிறுத்தல் அளவை பற்றிய அறிவும் தமிழர் முழுமையாகப் பெற்றிருந்தனர். இன்று அவை பற்றிய நூல் கிடைக்கவில்லை.

• 1849ஆம் ஆண்டின் தொடக்கம் முதலே சில கணித நூல்கள் வெளிவந்தன. இவ்வகையில் முதன் முதல் வெளிவந்த நூல் ''பால கணிதம்'' என்னும் நூலாகும். இந்த நூல் முழுமையான மொழிபெயர்ப்பாக அமையாமல் ஆங்கிலக் கணித முறைகளின் சிறப்பியல்புகளும் தமிழ்க் கணித முறையின் சிறப்புக் கூறுகள் சிலவும் இணைந்த முறையில் வெளிவந்தது. இந்நூல் முழுமையான தமிழ் மூல நூல் என்ற தோற்றத்துடன் வெளியானது.

• 1855இல், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரோல், விஸ்வநாதன் என்ற இருவரும் அல்ஜீப்ரா கணிதத்தைத் தமிழில் ‘இயற்கணிதம்’ என்ற பெயரிலும் ''வீர கணிதம்'' என்ற பெயரிலும் தமிழ் வடிவில் வெளியிட்டனர்.

1861இல் ஆர்னால்டு என்பவர் ‘வான சாஸ்திரம்’ என்ற நூலைத் தழுவலாக வெளியிட்டார். சாலமன் என்பவர் ''க்ஷேத்திர கணிதம்'' (Geometry) நூலை வெளியிட்டார்.

3.2.4 தமிழில் மருத்துவ நூல்கள்

டாக்டர் கட்டர் என்பவரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த மருத்துவ நூலான ‘Anatomy, Physiology and Hygiene’ என்ற நூலை ''அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல்'' என்ற பெயரில், 1852இல் ஃபிஷ் கிரீன் (Fish Green) மொழிபெயர்த்தார். தமிழ்வடிவில் வெளிவந்த முதல் மருத்துவ நூல் இதுதான்.

இதன்பிறகு 1857ஆம் ஆண்டு டாக்டர். ஃபிஷ் கிரீனின் (Fish Green) மேற்பார்வையில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட மருத்துவ நூல் ''பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம்'' (Midwifery) என்பது ஆகும்.

1865இல் ஜெகந்நாத நாயுடு என்பவர் சரீர வினா விடை (A catechism of Human Anatomy and Physiology) என்ற பெயரில் வினா விடை வடிவில் மருத்துவ நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிட்டார்.

1884ஆம் ஆண்டு ஃபிஷ் கிரீனின் துணையுடன் ‘இந்து பதார்த்த சாரம் (Pharmacopoeia and India) மற்றும் வைத்தியம் (Practice of Medicine) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்தன.

அதே நேரத்தில் ஃபிஷ் கிரீனின் முனைப்பான மொழிபெயர்ப்பு நூலாக வெளிவந்த ‘கெமிஸ்தம்’ (Chemistry) எனும் நூலும் சிறப்பான மொழிபெயர்ப்பு நூலாகும்.

சாப்மன் என்பவர் மொழிபெயர்த்த ''மனுச அங்காதி பாதம்'' என்ற நூலும், ஃபிஷ் கிரீனின் மேற்பார்வையில் மொழிபெயர்க்கப்பட்ட ‘இரண வைத்தியம்’ (The science and art of surgery), ''மனுசகரணம்'' (Human Physiology) என்ற மொழிபெயர்ப்பு நூலும் மருத்துவத்தைத் தமிழில் விளக்கிக் கூறும் நூல்களில் சிறப்புடையனவாகக் கருதப்படுகின்றன.

1886இல் வெ.ப.சுப்பிரமணிய முதலியார் தமிழில் மொழிபெயர்த்த ‘கால்நடையியல்’ (Veterinary Science) என்ற நூல் வெளிவந்தது. இதில் கையாளப்பட்டுள்ள கலைச்சொற்கள் இன்றும் பயன்படுத்தப் படுகின்றன.

1868ஆம் ஆண்டு லூமிஸ் என்பவர் ‘தி ஸ்டீம் & தி ஸ்டீம் எஞ்சின்’ என்ற நூலைத் தமிழில் வெளியிட்டார். இந்த நூலில் பயன்பட்ட விளக்கப் படங்களுக்கான எண்கள் கூடத் தமிழ் எண்களாக அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நூல்களில் பல இலங்கையில் இருந்து வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. பிற துறை மொழிபெயர்ப்பில் இதழ்களின் பங்களிப்பு என்ன? விடை
2. புதிய சொற்கள் அறிவியல் மொழிபெயர்ப்பில் உருவாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து எழுதுக. விடை
3. மருத்துவ நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுக. விடை
4.

அறிவியல் நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுக.

விடை