![]() |
சமணம் பெருங்காப்பியங்களைப் படைத்துத் தமிழுக்கு வளமை சேர்த்ததை அறிந்துள்ளோம். அத்துடன் அமையாது பல அரிய இலக்கண நூல்களை எழுதிச் செந்தமிழின் பெருமையை மேலும் உயர்த்திய பெருமைக்கு உரியது சமண சமயம். எழுத்து, சொல், பொருள் என மூன்றாக இருந்த மூன்றிலக்கணக் கோட்பாடு, காலங்கள் பல கழிந்தபோது, எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என விரிந்து ஐந்திலக்கணக் கோட்பாடாக வளர்ச்சி பெற்றது. அந்த வளர்ச்சியில் சமணர்தம் பங்கு பிற சமயத்தவரைக் காட்டிலும் அதிகம் என்பதை மறுக்க இயலாது. ஒரு மொழியின் திறனை - வளத்தை நிகண்டுகள் காட்டி நிற்கும். பிற்கால அகராதிகளுக்கு முன்னோடியாய் அமைந்த நிகண்டுகளைப் படைத்து, அதிலும் தங்கள் ஈடுபாட்டைப் புலப்படுத்தியுள்ளனர். பரந்த இலக்கிய அறிவும் நுட்பமும் நிறைந்திருந்தால்தான் உரைகளை எழுத முடியும். ஏராளமான இலக்கிய இலக்கணங்களுக்கு உரை எழுதி, அதிலும் தங்கள் சுவடுகளை அழுத்தமாகப் பதித்துள்ளனர் சமணப் பெரியோர்கள்.
தமிழின் பெருமையை எண்ணும்போதெல்லாம்
சமணத்தின் பங்களிப்பையும் எண்ணும் வகையில் அவர்களுடைய பங்களிப்பு
அமைந்துள்ளது.
|