இயேசு பெருமானின் வாழ்வும் அறநெறிகளும் எவரையும்
எளிதில் ஈர்ப்பவை. பிற சமயங்களைச் சேர்ந்த கவிஞர்களும்
இயேசு பெருமான் மீது தாம் கொண்ட ஈடுபாட்டினை
வெளிப்படுத்தியுள்ளனர். பாரதியார், பாரதிதாசன்,
கண்ணதாசன் உள்ளிட்ட பல இருபதாம் நூற்றாண்டுக்
கவிஞர்களும் இயேசுவைப் பற்றிப் பாடியுள்ளனர்.
‘தோத்திரப்
பாடல்கள்’ என்னும் பகுதியில் ‘யேசு கிறிஸ்து’ என்னும்
தலைப்பில், பாரதியார் பாடியுள்ளார். ‘யேசு மொழிந்த
தெள்ளமுது’ என்னும் தலைப்பில் இயேசுவின் சிறப்பினைப்
பாரதிதாசன் பாடியுள்ளார். எளிமையே இறைவன் விரும்பும்
கோலம் என்ற கருத்தை வலியுறுத்தி ‘ஏசு நாதர் ஏன்
வரவில்லை’ என்னும் தலைப்பிலும் பாரதிதாசன்
பாடியுள்ளார்.
தமிழ்த் தென்றல் திரு.வி.கலியாண சுந்தரனார் ‘கிறிஸ்துவின்
அருள் வேட்டல்’, ‘கிறிஸ்து மொழிக் குறள்’ ஆகிய
நூல்களைப்
படைத்துள்ளார். சுத்தானந்த
பாரதியார் ‘ஏசுநாதர்
சரிதை’யை
இயற்றியுள்ளார். மேலும் தாம் இயற்றிய பாரத
சக்தி
மகா
காவியத்தில் ‘கிறிஸ்து ஜோதி படலம்’, ‘பைபிள் படலம்’
ஆகிய
படலங்களைப் படைத்துள்ளார். ச.து.சு.யோகியார் ‘மேரி
மக்தலேனா’ என்னும் காவியத்தைப் புனைந்துள்ளார். கண்ணதாசன் ‘இயேசு காவியம்’ பாடியுள்ளார். நாமக்கல் கவிஞர் ‘பெரியோர் புகழ் மலரில்’ இயேசுவைப் போற்றிப்
பாடியுள்ளார். ‘சிற்பி’ பாலசுப்பிரமணியன் ‘சிலுவை தவயோகி’
என்னும் தலைப்பில் நெடிய புதுக்கவிதை ஒன்றினை
எழுதியுள்ளார். இங்கு, இப்பாடத்தில் ஒரு சில கவிஞர்களின்
படைப்புகள் மட்டும்
விளக்கப்படுகின்றன.
1.3.1 ‘கிறிஸ்துவின் அருள் வேட்டல்’
திரு.வி.கலியாண சுந்தரனார் சமரச சன்மார்க்க நெறியைப்
போற்றியவர். கிறிஸ்து பெருமான் மீது ஈடுபாடு கொண்டவர்.
மலையின் மீது இயேசு மக்களுக்கு ஆற்றிய அறிவுரைகளும்,
இயேசுவின் அன்பு வாழ்வும் திரு. வி.க.
அவர்களைப் பெரிதும் கவர்ந்தன.
• தன்னுள் பிறந்த இயேசு மனித இருள் போக்க வந்த இயேசுவை, பிழை பொறுக்கும்
தெய்வம் எனத் திரு.வி.கலியாண சுந்தரனார் குறிப்பிடுகிறார்.
இயேசு
தன் உள்ளத்தில் பிறந்ததால் தான்
அவருக்குள் இறந்ததாகப்
பாடுகிறார் கவிஞர். (தான் இறத்தல் என்பது, தான் என்னும் ஆணவம் இழந்ததைக்
குறிக்கும்.) கவிஞரின் பாவ வாழ்க்கை
தொலைந்து புது
வாழ்வு தொடங்குவதை அவர் கீழ்க்குறிப்பிடும்
வகையில் பாடியுள்ளார்.
என்னுள்ளே
நீபிறந்தாய் ஏசு பெருமானே
உன்னுள்ளே யான்இறந்தேன் உற்று
(கிறிஸ்துவின் அருள் வேட்டல்: பக்:8)
|
தன்னை இயேசுவிடம் ஒப்புவித்தமையால், இயேசுவின் அருள்
உள்ளம் தன்னிடம் தோன்றியதாகக் கலியாண
சுந்தரனார் நயமாகக் குறிப்பிடுகின்றார்.
1.3.2 மேரி மக்தலேனா
ச.து.சு. யோகியார் எழுதிய
மேரி மக்தலேனா காவியம்
‘தமிழ்க்
குமரி’ என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இது
இரண்டு படலங்களாக அமைந்துள்ளது. இதில் 112 பாடல்கள்
உள்ளன.
இக்காவியத்தின் நாயகி பேரழகி; உடலை விற்று வாழ்பவள்;
ஆன்மீக அழகு மிக்க இயேசுவின் வரவு கண்டு, தன் பாவ
வழியை விட்டு விலகி, புதிய
வாழ்வினைப் பெறுகிறாள்.
• மக்தலேனாவின் அழகு இக்காவியத்தில், மக்தலேனாவின் அழகு பற்றிய பாடல்கள்
சந்தப்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளன. அவள் மன்மதன் தங்கும்
அரண்மனை போன்ற அழகுடையவள் என்கிறார் கவிஞர். அவள்
தளிர்
மேனியையும், காந்தள் மலர் போன்ற விரல்களையும், ஒளி
பொருந்திய கூந்தலினையும்
கவிஞர் பின்வருவாறு குறிப்பிடுகிறார்.
தழல்
பாய்ந்திடும் மின்னல் சுவை
செம் பொன் தளிர் மேனி
கழல் பாய்ந்திடு காந்தள் சிறு
விரலின் கதிர் விரியும்
குழல் பாய்ந்தொளி உண்ணும், இரு
கண் பாய்ந்திருள் கொல்லும்
நிழல் பாய்ந்தவள் நேர்காண ஓர்
சுவரேறியே நிலவும்
(காட்சிப்
படலம் பாடல் எண்-19)
|
(தழல் = தீ, கழல்
= பொன் வண்டு, காந்தள் = சிவந்த மலர், குழல் =
கூந்தல்)
அக இலக்கியம் பாடும் தமிழ்க் கவிஞர்களின் மரபைப்
பின்பற்றி
விவிலியத்தில் இடம் பெற்றுள்ள மேரிமக்தலேனாவின்
அழகைக் கவிஞர் யோகியார்
சிறப்பாகப் பாடியுள்ளார்.
1.3.3 சிலுவை தவயோகி
‘சிலுவை தவயோகி’ என்னும் தலைப்பில் அமைந்த நெடிய
புதுக்கவிதை
சிற்பியின் ‘ஒளிப்பறவை’ தொகுப்பில் இடம்
பெற்றுள்ளது.
• இயேசுவின் மரணப்பாடு ‘சிலுவை தவயோகி’ கவிதையில், மாடு கட்டும் கொட்டில்
இயேசு
பெருமானுக்குப் பூந்தொட்டிலாக அமைந்ததையும், ‘குன்றி
மணி இல்லா குடிசைப் பிறப்பாளியாக’ அவர் பிறந்ததையும்
நயமாகப் பாடுகிறார் கவிஞர். இயேசுவின் மரணப்பாடுகளை
விவரிக்கும்
பகுதியில்,
ஒன்னார்
இரும்பாணி
ஓங்கி அடிக்கையிலே
பொன்னார் திருமேனி
பூப்பூவாய் சிதைகிறது
சிலுவையிலே ‘ஐயோ’
சேர்த்து ஆணி அறைகையிலே
எலும்பு துகளாகி
இளம் ரத்தம் கசிகிறது
கிறிஸ்துவுக்கு முன், பின்னாய்க்
காலம் கிழிகிறது
அருள் வதனம் மன்னிப்பின்
அழகில் கனிகிறது |
(ஒன்னார் = பகைவர், பொன்னார்
= பொன் மேல் பொலிவுடைய,
வதனம் = முகம், துகள் = தூள்)
இங்ஙனம் கிறித்தவச் சமயம் சாராத கவிஞர் பலரும்
இயேசுவைப் பலவாறாகப் புகழ்ந்தும் வியந்தும் பாடியுள்ளனர். |