தன் மதிப்பீடு : விடைகள் - II
4. நபிகள் நாயகம் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களில் இரண்டினைக் கூறுக.
நபிகள் பெருமானார் இளமையில் கதீஜா பிராட்டியாரிடம் பணிக்கு அமர்த்தப்பட்டார். அவருடைய கூர்த்த மதியைக் கண்ட கதீஜா பிராட்டியார் அவரைச் சிரியா நாட்டிற்குச் சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவருக்கு ஓர் ஒட்டகமும் அதனை நடத்திச் செல்லப் பணியாளும் கொடுத்தார். ஆனால் அந்தப் பணியாள், ‘சிறிய நபிபிரானுக்கு இத்தனைச் சிறப்பா’ எனப் பொறாமை கொண்டான். ஊர் எல்லையைத் தாண்டி வணிகக் குழு வந்ததும் நபிபிரானை ஒட்டகத்தை விட்டு இறங்கி நடந்து வருமாறு செய்தான். ஏற்கெனவே அவருடைய தலைக்கு மேல் நிழலிட்டு வந்த மேகம் இன்னும் அகலப் பரவி நிழலிட்டது.

மக்கமா நகரத்தில் நபிகள் பெருமானார் பரப்பி வந்த ஓரிறைக் கோட்பாட்டை அவ்வூரார் ஏற்றுக் கொள்ளவில்லை. அவ்வாறு ஏற்றுக் கொள்ளாத எதிர்ப்பாளர்களுக்குத் தலைவராக அபுஜகில் என்பார் அமைந்தார். நபிகள் பெருமானாரைக் கொன்று விடக் கருதிய அபுஜகில் நபிபிரானிடம் ஊருக்கு வெளிப்புறம் உள்ள வெட்ட வெளிக்கு வந்தால், தான் இஸ்லாம் சமயத்தை ஏற்றுக்கொள்வதாகக் கூறினான். நபிபிரானும் ஒப்புக் கொண்டு புறப்பட்டார். இருவரும் நடந்து பெரும் வனாந்தரத்திற்கு வந்தனர். அபுஜகில் தனக்குத் தாகம் எடுப்பதாகவும், இங்கு நீர்ச்சுனை ஒன்றைத் தோற்றுவித்தால் அத்தண்ணீரைக் குடித்தபின், தான் இஸ்லாம் சமயத்தை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினான். அவ்வளவில் நபிகள் பெருமானார் இறைவனின் திருநாமத்தை மனத்தில் நினைத்து கைநகத்தால் தரையைக் கீறினார். உடனே குபுகுபுவென்று இன்சுவை நீர் வெளிப்பட்டது.

இவை இரண்டும் நபிகள் நாயகம் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்கள் ஆகும்.

முன்