4.7 தொகுப்புரை |
மிகுராசு மாலை இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் பிறந்த முதல் முழு இலக்கியம் ஆகும். இவ்விலக்கியத்தின் அரங்கேற்றத்தின் பொழுது நபிகள் பெருமானார் தோன்றி, புலவர் வாய்ச்சொல் கேட்டார். அப்பொழுது நபிகள், அரங்கேற்றத்திற்கு உதவிய குருடருக்குப் பார்வை கொடுத்தார். இத்தகைய சிறப்பினை உடையது மிகுராசு மாலை. மேலும், மிகுராசு மாலையை முதல் நூலாகக் கொண்டு மிகுராசு நாமா, மிகுராசு வளம், மிகுராசு-லி-ஆரிஃபீன் என்னும் சிற்றிலக்கியங்களும் தோன்றியுள்ளன. மிகுராசமாலை இஸ்லாம் சமயத் தீர்க்கதரிசியாகிய நபிகள் பெருமானார் புறாக் என்னும் மின்பரியிலேறி வானுலகடைந்து இறைத்தரிசனம் பெற்று மீண்ட வரலாற்றைக் கூறுகின்றது. இப்பயணத்தால் நபி நாயகத்தைப் பின்பற்றும் இஸ்லாம் சமயத்தவர்கள் தினமும் ஐந்து தடவை இறைவழிபாடு செய்ய வேண்டும் என்ற கட்டாயக் கடமை பெறப்பட்டது. இஸ்லாம் சமயத்திற்கும் மூலப்பிதா இப்ராஹிம் நபி என்பதை அவர்தம் வரலாற்றின் மூலம் மிகுராசு மாலை தெளிவு படுத்துகின்றது. இஸ்லாமியர்களிடம் காணும் பக்ரீத் பண்டிகை இப்ராஹிம் நபி வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சி என்பதை இவ்விலக்கியத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. இவ்வகையில் மிகுராச மாலைச் சிற்றிலக்கியம் பல வகையிலும் சிறப்பாக அமைந்துள்ளது எனக் கூறலாம். |
|