1.5 கூற்று வகை

E


    
அகப்பொருள் மரபில் குறிப்பிடத்தக்க இன்னொன்று கூற்று வகை.
கதாபாத்திரங்களுள் ஒருவர் தாமே நேரிடையாகப் பேசுவதுபோல்
அமைக்கப்படும் செய்யுள் கூற்றுவகைச் செய்யுள் எனப்படும்.
தலைவன் பேசுவதுபோல் அமைந்திருக்கும் பாட்டு, ‘தலைவன்
கூற்று’, எனவும் தோழி பேசுவது போல் அமையும் பாட்டு ‘தோழி
கூற்று’ எனவும் அகப்பொருள் பாடல்கள் வகைப்படுத்தப்படும்.
திருவள்ளுவரின் காமத்துப்பாலில், இந்தக் கூற்று வகை சிறப்பிடம்
பெறுகின்றது.

    அகப்பொருள் இலக்கியங்களிலே கூற்று நிகழ்த்துவோருள்,
முதன்மையானவர், தலைவனும் தலைவியுமே.


1.5.1 தலைவன் கூற்று


    காமத்துப்பாலின் முதல்பாட்டே, கூற்றுவகையைச் சார்ந்ததாகவே
அமைந்துள்ளது. தன் எதிரிலே தோன்றிய தலைவியின் அழகைக்
கண்டு மயங்கிய தலைவன் கூறும் கூற்றாக அமைந்துள்ளது.

    தலைவியின் உறுப்பு நலன் கண்டு, மகிழ்ச்சியுடன் பலவாறு
பேசுகிறான்.     தலைவியைப்     பற்றிய     தனது உள்
உணர்வுகளையெல்லாம், தன் கூற்றுகள் மூலம் வெளிப்படுத்துகிறான்.

    அவளது கண்ணின் அழகு அவனைப் பெரிதும் கவர்ந்தது.
பொதுவாகப் பெண்களின் கண்களைக் குளிர்ச்சியும் அழகும்
பொருந்திய குவளை மலரோடு ஒப்பிட்டுக் கூறுவது மரபு. ஆனால்,
இந்தத் தலைவியின் கண்கள் குவளை மலரைவிடவும் மிகவும்
அழகானவை. எனவே, இவளது கண்ணுக்குக் குவளை மலர் சமம்
ஆகாது என்கிறான் தலைவன்.


காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோக்கும்
மாணிழை கண் ஒவ்வேம்! என்று



(குறள்: 1114)


(மாணிழை = இளமகளிர்)

    கண்கள்போன்று அழகு வாய்ந்தவை
குவளை மலர்கள். அவைகள் கண்
போன்றிருந்தாலும், பார்க்கும் திறன்
இல்லாதவை. பார்க்கும் தன்மை
பெற்றிருந்தால், என் தலைவியின்
அழகைப்     பார்த்து இவளது
கண்களுக்கு நாம் ஒப்பாக மாட்டோம்
எனக்கருதி நாணித் தலையைக்
கவிழ்த்துக் கொண்டு நிலத்தையே

காட்சி

பார்க்கும். அத்தகைய அழகு வாய்ந்தது என் தலைவியின் கண்கள்
என்று கூறுகிறான் தலைவன்.

    தலைவனின் இந்தக் கூற்று, தலைவியின் அழகின் மீது அவன்
கொண்டுள்ள ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு தன்
அன்பை வெளிப்படுத்தும் தன்மையில் அவன் கூற்றுகள் பல,
காமத்துப்பாலில் இடம் பெற்றுள்ளன.


1.5.2 தலைவியின் கூற்று


    காதலர் வாழ்வில் பிரிவு என்பது
மிகவும் துன்பமானது. பிரிவின்
பொழுது, தலைவனை நினைந்து
தலைவி பலவகையில் துன்பம்
அடைவாள். தன் துன்பத்தைப்
போக்குவதற்குத் தலைவனோடு கூடி
வாழ்ந்த காலத்திலுள்ள இன்ப
நிகழ்ச்சிகளை எல்லாம் நினைத்து
மகிழ்வாள்.     அந்த     இன்ப
நினைவுகளைக் கனவுகளில் கண்டு்

காட்சி

களிப்பாள். ஆனால் கனவிலே கண்ட காதலன், நனவு வந்ததும்
மறைந்து விடுகிறான். அந்த இன்பக் காட்சியும் மறைந்து விடுகிறது.
கனவிலாவது காதலனைப் பார்த்து மகிழலாம் என்ற நிலை இல்லாது
போயிற்று.


நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்!



(குறள்: 1216)


தன்னை விட்டுப் பிரிந்து சென்ற தலைவனைக் கனவில்தான் கண்டு
மகிழ முடிகிறது.

    அந்தக் கனவும் எப்பொழுதும் நிலைத்திருக்குமா என்றால் அதுவும்
இல்லை. கனவு முடிந்து, நனவு வந்து விடுகிறது. நனவில் காதலனைப்
பார்க்க முடியாது, ஏனென்றால், அவன் அவளைவிட்டுப் பிரிந்து
வெகுதூரத்தில் இருக்கிறான். எனவே, நனவு என்ற ஒன்று
இல்லாவிட்டால், என்னை விட்டுப் பிரிந்து சென்ற காதலனைக்
கனவிலாவது கண்டு மகிழ்வேன்’ என்று கூறுகிறாள் தலைவி.

    தலைவியின் இந்தக் கூற்று, அவளது உள்ள இயல்பை
எடுத்துக்காட்டுகிறது. தலைவனை நேரில் பார்த்து மகிழ முடியாது
அவள் அடையும் துன்பத்தை வெளிப்படுத்துகிறது.

    இவ்வாறு, தலைவியின் ஒவ்வொரு கூற்றும், தலைவன் மீது அவள்
கொண்டிருந்த அன்பையும், பற்றையும், பிணைப்பையும் சுட்டிக்
காட்டுகிறது. அவளது மன உணர்வுகளையும், எண்ணங்களையும்
வெளிப்படுத்துவன அவளது கூற்றுகளே.