1.4.1 சமயக்குரவர்கள் நால்வர்
ஏழாம் நூற்றாண்டில் நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடியபாடல்களின் வாயிலாகப் பக்தி இயக்கம் வளர்ச்சி பெற்றது.
நாவுக்கரசரும், ஞானசம்பந்தரும் தமிழ் நாட்டிலுள்ள பல
திருக்கோயில்களுக்குச் சென்று வழிபட்டுப் பாடிய பாடல்கள்
ஆயிரக்கணக்கானவை. மறைந்துபோன பாடல்கள் போக,
இப்போதுள்ள இவர்களின் பாடல்கள் ஏழாயிரம் ஆகும். அடுத்த
நூற்றாண்டில்
வந்த சுந்தர மூர்த்தி நாயனார் பாடல்கள் 1000.
இம்மூவரின் பாடல்களும் தேவாரம்
என்று போற்றப் பெறுகின்றன.
இசையோடு இன்ன பண் என்று குறித்துப் பாடப்பட்டு வருகின்றன.
ஞானசம்பந்தர் கையில் தாளம் ஏந்தி, பாடியும் ஆடியும் சிவனை
வழிபட்டார். பாணர் குடும்பத்தைச் சேர்ந்த
திருநீலகண்ட
யாழ்ப்பாணர் அவருடைய பாடல்களுக்கு யாழ் இசைத்து வந்தார்.
ஞானசம்பந்தர் தம் பாடல்களில் அந்தந்த ஊர்க்
கோயில்களைப்
பாடுமிடத்தில் கோயில்களைச் சூழ்ந்த இயற்கை
அழகுகளையும், கற்பனைச் சுவையுடன் எடுத்துரைத்துப்
பாடியுள்ளார்.
கடைக்காப்பு என்னும் பதினோராம் பாடலில் தம்
பெயரைப்
பெருமிதத்துடன் குறிப்பிடுவார். மண்ணில் நல்ல
வண்ணம் வாழலாம் என்று இல்லறத்தைப் போற்றியும்,
பெண்களைப் போற்றிப் பெருமையாகப் பேசியும், போலித்துறவைக்
கடிந்தும்
பாடியுள்ளார்.
மதுரையில் சைவத்தை நிலைநாட்டி, சமணத்தைச்
சார்ந்திருந்த பாண்டியனைச் சைவனாக்கிய பெருமை இவரையே
சாரும்.
புதிய யாப்பு வடிவங்களான
ஏகபாதம், மாலைமாற்று,
திருஎழுகூற்றிருக்கை, யமகம், நாலடிமேல் வைப்பு
முதலானவற்றைப் புகுத்தி யாப்பின் வகைமைகளாகப் பயன்படுத்தி
விளக்கமுறச் செய்துள்ளார்.
திருநாவுக்கரசர்
மருள்நீக்கியார் என்னும் இயற்பெயரினைக் கொண்டவர்
திருநாவுக்கரசர். சைவ சமயத்தில் வளோண்குடியில் தோன்றிய
இவர், இளமையிலேயே பெற்றோரை இழந்தார்.
பின்னர் சமண மத
நூல்களில் தேர்ச்சி பெற்று, சமணத் துறவிகளுக்குத் தலைமைப்
பொறுப்பையும் ஏற்றார். பிறகு தமக்கையார் திலகவதியின்
வேண்டுகோளை ஏற்று மீண்டும் சைவ சமயம் வந்தார்.
நெடுங்காலம் வாழ்ந்து
தலங்கள் பலவற்றுக்குச் சென்று, பக்திப் பாடல்கள் பாடினார்.
இசையோடு அமைந்த பாடல்களையும்,
தாண்டகம் என்னும் பாடல்
வகையினையும், நேரிசை விருத்தம்
என்னும் யாப்பு வகையினையும்
பாடியவர் இவர். அதனாலேயே
தாண்டக வேந்தர் என்று
பலராலும் போற்றப்பட்டார். தம்
காலத்தில் வாழ்ந்த
அரசன்
மகேந்திர வர்மப் பல்லவனைச் சைவத்திற்கு மாற்றிய
பெருமைக்குரியவர். ஞான சம்பந்தரோடு சமகாலத்தில் வாழ்ந்த
சிறப்புக்குரியவர்.
சுந்தரர்
எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சுந்தரர்.
இறைவனாலேயே வன்தொண்டர்
என்று போற்றப்பட்டவர்.
பரவையார், சங்கிலியார் எனும் இரு மங்கையரைத் திருமணம்
செய்து
கொண்டவர். அவர் பாடியனவாக இன்று கிடைப்பவை 1026
பாடல்களாம். இவருடைய பாடல்களைத்
திருப்பாட்டு என்று
அழைப்பர். ஞான சம்பந்தரின் பாடல்களைப் போல இவருடைய
பாடல்களும் இனிய இசையமைப்பு உடையவை. இறைவனைத்
தோழமை நெறியில் நின்று பாடியவர். இவர் பாடிய
திருத்தொண்டத் தொகை என்பதே, பிற்காலத்தில்
பெரிய
புராணம் தோன்றுவதற்குக்
காரணமாக இருந்தது.
மாணிக்கவாசகர்
அரிமர்த்தன பாண்டியனின் அரசவையில் அமைச்சராகப்
பணி புரிந்தவர் மாணிக்கவாசகர். குருந்த மரத்தடியில் ஞான
உபதேசம் பெற்று இறையடியார் ஆனார். இவருடைய நூல்கள்
திருவாசகம், திருக்கோவையார் ஆகியன.
திருவாசகத்திற்கு உருகார்
ஒரு வாசகத்திற்கும் உருகார்
என்னும் பழமொழியே திருவாசகத்தின் பெருமையை
எடுத்துக்
கூறும்.
திருவாசகத்தில்
திருஅம்மானை.
திருப்பொற்சுண்ணம்,
திருக்கோத்தும்பி,
திருத்தெள்ளேணம்,
திருத்தேள்நோக்கம்,
திருப்பொன்னூசல்,
திருச்சாழல்,
திருப்பூவல்லி போன்ற பாடல்
வகைகளைப் பாடியுள்ளார். பத்துப் பத்துப் பாடல்கள் ஒரு
தொகுதியாக
அமைக்கப்பட்டுள்ளன.
திருவாசகத்தில்
இடம்பெற்றுள்ள இப்பத்துப் பத்துப் பாடல்களே, பிற்காலத்தில்
தனித்தனியே பாடும் சிற்றிலக்கிய வகைகள் தோன்றுவதற்குக்
காரணமாய் அமைந்தன.
மேலும் இவருடைய பாடல்கள் ஆழ்ந்த தத்துவங்களைக்
கூறி, உணர்ச்சிப் பெருக்கால் உள்ளத்தை, உருக்கக்
கூடியனவாகவும் இருக்கின்றன. இவருடைய பாடல்களில் தெய்வ
மணங்கமழும் தத்துவக் கருத்துகள், எளிய நடை, தெளிவாகப்
புரியும் சொற்கள், நாட்டுப்புறச்
சாயல் வடிவில் வெளியிடும் பாங்கு
முதலான தன்மைகள் இடம்பெற்றிருப்பது தனிச் சிறப்பாகும்.
1.4.2 ஆழ்வார்கள்
திருமால் பக்தியில் திளைத்தவர்கள் ஆழ்வார்கள். அவர்கள்
பன்னிருவர். பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்,
திருமழிசையாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார்,
மதுரகவியாழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்
பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார்,
குலசேகரஆழ்வார்
ஆகியோர் ஆவர். இவர்கள் திருமாலை
வழிபட்டுப் பாடிய பக்திப்
பாடல்கள், நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
என்று
போற்றப்படுகின்றன. இவர்களுள் பெரியாழ்வார் கண்ணனைக்
குழந்தையாகக் கற்பனை செய்து பக்திப் பாடல்கள் பாடியுள்ளார்.
இவருடைய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும்
தனி இலக்கிய வகையாக மலர்வதற்குக் காரணமாயின.
பெரியாழ்வார், பெருமானுக்குக் கண்எச்சில்
(கண்ணேறு)பட்டு
விடுமோ என்று திருப்பல்லாண்டு பாடியவர் ஆவார். அதற்குத்
திருப்பல்லாண்டு
என்று பெயர். சைவத் திருமுறைகளில்
ஒன்பதாந் திருமுறையிலமைந்த சேந்தனாரின் திருப்பல்லாண்டு,
பெரியாழ்வார் பாடிய திருப்பல்லாண்டை அடியொட்டிப் பாடியது
என்றால் மிகையாகாது.
ஆண்டாள் நாச்சியார், பெரியாழ்வாரால் வளர்க்கப்பட்ட
கோதையாவார்.
இவர் பாடிய பாடல்கள் வேதம் அனைத்திற்கும்
வித்தாகும் திருப்பாவையும், நாச்சியார் திருமொழிப் பாடல்களும்
ஆகும். இத்திருப்பாவையும் மாணிக்க வாசகரின்திருவெம்பாவையும் பிற்காலத்தில்
பாவை இலக்கியம் வளர்வதற்குக்
காரணமாய் அமைந்தன எனலாம். இப்பாடல்கள் தமிழகம்
மட்டுமன்றி,
தாய்லாந்து, சயாம், இந்தோனீசியா போன்ற கீழ்த்திசை
நாடுகளிலும் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும்
வைணவத்தின் வளர்ப்புத்தாய்
என்று போற்றப்படும்
ராமானுஜருக்கு, ஆண்டாளின் திருப்பாவை மீது மிகுந்த ஈடுபாடு
இருந்தது. எனவே அவர் திருப்பாவை ஜீயர் என்று
போற்றப்பட்டார்.
குலசேகர ஆழ்வார் பாடிய 105 பாடல்கள்
பெருமாள்
திருமொழி
என்று போற்றப்படுபவையாகும். இவர்
இராமாவதாரத்திலும், கிருஷ்ண அவதாரத்திலும் மிகுந்த
ஈடுபாடு
கொண்டு பாடியிருக்கின்றார்.
திருமங்கையாழ்வார்
திருவாலித் திருநகரில் கள்ளர் மரபில் அரசராகத்
தோன்றியவர் இவர்.
இயற்பெயர் கலியன். வைணவரின் மகளாகிய
குமுதவல்லியை மணந்து திருமால் அடியவர் ஆனார். தம்
செல்வம் முழுவதையும் திருமால் அடியவர்க்கு அமுதூட்டுவதில்
செலவழித்தார். செல்வம் தீர்ந்தபோது வழிப்பறிக்
கொள்ளையடித்துத் தம் எண்ணத்தைச் செயல்படுத்தினார்.
அப்போது இறைவன் மகாலட்சுமி
தேவியுடன் வந்து அருள்செய்ய,
நாராயணா என்னும் திருநாமத்தை உணர்ந்தார். அதன்பிறகுதிருமங்கையாழ்வாராகப் பாடத் தொடங்கினார். அவர் பாடியவை
பெரியதிருமொழி, திருக்குறுந்தாண்டகம்,
திருநெடுந்தாண்டகம்,
திருஎழு கூற்றிருக்கை, பெரிய
திருமடல், சிறிய திருமடல்
என்னும் ஆறு சிற்றிலக்கியங்களாகும். பெண்டிர் மடலேறுதல்
மரபன்று என்னும் தமிழ் மரபுக்கு மாறாக,
வடமொழி மரபு பற்றி,பெண்ணாக இருந்தும் மடல் ஊர்வேன்
என்கிறார். தம்மைக்
காதலியாகவும், இறைவனைக் காதலனாகவும்
வைத்துப் பல
பாடல்கள் பாடியுள்ளார்.
நம்மாழ்வார்
பாண்டிய நாட்டில் உள்ள ஆழ்வார் திருநகரியில்
தோன்றியவர் இவர்; மாறன் சடகோபன் என்று அழைக்கப்பட்டவர்.
ஆழ்வார்களுள்
தலைசிறந்தவர். திருவிருத்தம், திருவாசிரியம்,
பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி
ஆகிய நான்கு
நூல்களைப் பாடியுள்ளார். இந்நான்கும் நான்கு வேதங்களின்
சாரம்
என்று கூறுவர். பக்தி உணர்விற்கும் தெளிந்த
மெய்யுணர்விற்கும் திருவாய்மொழியே களஞ்சியமாக உள்ளது.
வைணவ சமயத்தைச் சார்ந்த சான்றோர்கள் இந்நூலுக்கு அரிய
பெரிய விளக்கங்கள்
எழுதியுள்ளனர்.
சைவத்திற்கு மாணிக்க வாசகர் போன்று வைணவத்திற்கு
நம்மாழ்வார்
ஆவார். இறைவனைத் தலைவனாகவும், தன்னைத்
தலைவியாகவும் கொண்டு பல அகப் பாடல்களைப் பாடியுள்ளார்.
நாரை, பூவை முதலிய பறவைகளை இறைவனிடம் தூதாக
அனுப்பிய பாடல்கள் நெஞ்சை
உருக்குபவை. பிற்காலத்தில் இவை
தூது இலக்கியங்களாக மலர்ந்தன எனலாம்.
மதுர கவியாழ்வார்
திருக்கோவிலூரில் தோன்றியவர். மதுரகவியாழ்வார்
நம்மாழ்வாரின் சீடர். நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதி,கண்ணிநுண் சிறுத்தாம்புப் பதிகம் என்னும் 11 பாடல்கள்
அடங்கிய பாசுரத்தைப் பாடியவர்.
திருமழிசை யாழ்வார்
காஞ்சிபுரத்திற்கருகிலுள்ள திருமழிசை என்னும் ஊரில்
பிறந்தவர். திருமாலிடம்
மிகுந்த ஈடுபாடு கொண்டு நான்முகன்
திருவந்தாதியும், திருச்சந்த விருத்தமும் பாடியுள்ளார். பிறசமயங்களை வெறுக்கும் பாங்கும் உணர்வும் இவர் பாடிய
பாடல்களில் காணப்படுகின்றன.
தொண்டரடிப் பொடியாழ்வார்
சோழ நாட்டிலுள்ள திருமண்டங்குடி என்னும் ஊரில்
தோன்றியவர். திருமாலுக்குப்
பூமாலை கட்டி மலர்த் தொண்டு
ஆற்றி வந்தவர். திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்ற
இரண்டு பாமாலைகள் இவர் பாடியவை.
திருப்பாணாழ்வார்
சோழநாட்டு உறையூரில் தோன்றியவர் திருப்பாணாழ்வார்.
திருவரங்க
நாதனை வழிபாடு செய்தவர். அமலானாதிப் பிரான்
என்று தொடங்கும் 10 பாசுரங்கள்
இவர் பாடியவையாகும்.
பக்தி இயக்கத்தில் ஞானசம்பந்தர் ஒரு
சமயப் புரட்சியாக
மக்கள்
இயக்கத்தினை ஏற்படுத்தினார். சங்க காலத்திலிருந்த
காதல் உணர்வு, பக்தி இயக்கக்
காலத்தில் நாயக, நாயகி பாவமாக
உருப்பெற்றது. அரசனிடமும், புலவனிடமும் இருந்த தமிழ், பக்தி
இயக்கக் காலத்தில் பொது மக்களிடம் சென்றடைந்தது. கடவுளைப்
போற்றிப் பாடுவதற்குப்
பைந்தமிழ் ஒரு கருவியாக அமைந்தது.
இந்த பக்தி இயக்கக் காலத்தில் தோன்றிய
தேவார, திருவாசம்,
திவ்வியப் பிரபந்தம் முதலான இலக்கியங்கள், பிற்காலத்தில்
பல
சிற்றிலக்கியங்களும், பல சிற்றிலக்கிய வகைகளும் தோன்றுவதற்குக்
காரணமாயிருந்தன.
| தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
|
1.
|
பக்தி என்னும் சொல்லின் பொருள் யாது?
|
|
|
2.
|
பக்தி இலக்கியத்தின் முன்னோடிகள் யாவர்? |
|
|
3.
|
முதலாழ்வார்கள் யார்? |
|
|
4.
|
தாண்டக வேந்தர் என்று யாரைக் குறிப்பர்? |
|
|
5.
|
திருவாசகத்தில் இடம் பெற்றுள்ள பாடல் வகைகள்
சிலவற்றினைக் கூறுக. |
|
|
6.
|
வைணவத்தின் வளர்ப்புத் தாய் என்று யாரைப்
போற்றுவர்?
|
|
|
7.
|
பெரிய திருமடல், சிறிய திருமடல் ஆகியவற்றை
எழுதியவர் யார்? |
|
|
8.
|
ஆழ்வார்கள் பாடிய பாடல் தொகுதிக்குப் பெயர்
என்ன? |
|
|
9.
|
இராமாவதாரத்திலும், கிருஷ்ணாவதாரத்திலும்
மிகுந்த பக்தி கொண்ட ஆழ்வார் யார்?
|
|
|
10.
|
மதுரகவியாழ்வார் யாரைத் தெய்வமாக வழிபட்டார்? |
|