| 2.2 பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கவிதை பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப்பின் புதுமை இலக்கிய வகைகள் பெருகியதால் அதுவகையான காலகட்ட இலக்கியங்களை ஒரு தொகுதியாகக் காண்பதும் பொருத்தமாக இருக்கும். அவ்வகையில் சங்கக்கவிதைகள், நீதிநூல்கள், காப்பிய இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள் ஆகியவற்றை ஒருதொகுதியாகக் கொண்டு காணலாம். இந்திய மொழிக் குடும்பங்களில் தமிழ் நீண்ட பாரம்பரியம் கொண்டது. கி.பி.முதல் இரண்டாம் நூற்றாண்டு வரையான காலத்தைச் சங்க இலக்கியங்கள் தோன்றிய காலமாகக் கூறுவர்.
தமிழின் சங்ககாலக் கவிதைகள் எழுத்தில் அமைந்தவையா, வாய்மொழியில் அமைந்தவையா என ஆய்வாளர்களிடையே மாற்றுக் கருத்துகள் உண்டு. க.கைலாசபதி தமது தமிழ் வீரயுகப் பாடல்கள் என்ற ஆங்கில நூலில் சங்க இலக்கியப் பாடல்களை வாய்மொழிப் பாடல்கள் என நிறுவியுள்ளார். கதிர் மகாதேவன், தமிழண்ணல், கமில் ஸ்வலபில் போன்றோர் அக்கருத்தை ஏற்று எழுதியுள்ளனர். ஜோர்ஜ் எல்.ஹார்ட், செ.வை.சண்முகம் போன்றோர் சங்க இலக்கியத்தை எழுத்திலக்கியம் என்று கூறுவர்.
சங்க இலக்கியங்களின் காலம் சுமார் 400 ஆண்டுகள் என அறிஞர்கள் மதிப்பிட்டுள்ளனர். இக்காலகட்டத்தில் சங்கக் கவிதை பல மாற்றங்களைப் பெற்றுள்ளது. சங்க நூல்களில் முதலில் பாடப்பட்டதாகக் கூறப்படும் அகநூல்களான அகநானூற்றிலும் (200), நற்றிணையிலும் 59, குறுந்தொகையிலும் (27) அரசியல் குறிப்புகள் உள்ளன. இதன்பின் பாடிய நூல்களில் அரசியல் குறிப்புகள் குறைவே. ஐங்குறுநூறு சிறிய அகவற் பாடல்கள் கொண்டு அமைகின்றது. மற்றைய நூல்களுடன் ஒப்பிடும்போது அமைப்பில் வேறுபட்டுக் காணப்படுகின்றது. பத்துப்பாட்டு நூல்கள் மிக நீண்ட பாடல்களை உடைய அகவற்பாடல்களால் ஆனவை. ஆற்றுப்படை மரபு என்பது இதிலிருந்து தொடங்குகிறது. காலத்தால் பிந்தியதாகக் கலித்தொகையைக் கூறுவர். இதற்கு முந்திய அகத்திணைப் பாடல்களில் பெண் பற்றிய வருணனைகள் பாடலின் தேவைக்கேற்ப அமைந்தன. ஆனால் கலித்தொகையில் பெண்கள் பற்றிய வருணனைகள் அதிகரித்துள்ளன. மேலும் திணை மரபிலிருந்து கலித்தொகை வேறுபட்டுச் செல்கிறது. யாப்பிலும், எடுத்துரைப்பு முறையிலும் மாறுபட்டுள்ளது. பரிபாடல் சங்க இலக்கிய மரபிலிருந்து முற்றிலும் மாறியுள்ள பாடல்களைக் கொண்டதாகும். இதன் அடிப்படை அகமோ, புறமோ அல்ல. பாடல்கள் தெய்வ வணக்கமும், புராணக் கூறுகளும் நிறைந்தனவாக உள்ளன. பொதுவாக, (1) யாப்பு முறை (2) பாடல் பொருள் மாற்றம் (3) வடிவ மாற்றம் எனச் சங்கக் கவிதைகள் மாற்றங்கள் பெற்றன. 2.2.2 நீதி நூல்கள்சங்க காலத்தின் பிற்பகுதியில் நீதிநூல்கள் தோன்றின. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அறியப்பட்ட அந்நூல்கள் மக்களுக்கு அறநெறிகளைச் சொல்வனவாக அமைந்தன. படிப்படியான வளர்ச்சி நிலையில் தனிமனித வாழ்விலும், சமுதாய வாழ்விலும் ஏற்பட்ட மாற்றங்கள் இலக்கியங்களிலும் ஏற்பட்டன. சமண, பௌத்த சமயங்களின் செல்வாக்கு அறவியல் நூல்கள் அதிகம் தோன்றக் காரணமாயின. இக்காலக் கவிதைப்பொருள் மாற்றத்திற்கான காரணம், தமிழில் விரிவாக ஆராயவும் எழுதப்படவும் வேண்டிய ஒன்றாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எனப்படுவன, (1) நாலடியார் (அறம்) (2) நான்மணிக்கடிகை (அறம்) (3) இன்னா நாற்பது (அறம்) (4) இனியவை நாற்பது (அறம்) (5) கார் நாற்பது (அகம்) (6) களவழி நாற்பது (புறம்) (7) ஐந்திணை ஐம்பது (அகம்) (8) திணைமொழி ஐம்பது (அகம்) (9) ஐந்திணை எழுபது (அகம்) (10) திணைமாலை நூற்றைம்பது (அறம்) (11) திருக்குறள் (அறம்) (12) திரிகடுகம் (அறம்) (13) ஆசாரக்கோவை (அறம்) (14) பழமொழி நானூறு (அறம்) (15) சிறுபஞ்சமூலம் (அறம்) (16) முதுமொழிக்காஞ்சி (அறம்) (17) ஏலாதி (அறம்) (18) கைந்நிலை (அகம்) என்பனவாகும். இந்நூல்களில் பதினொன்று அறம்பாடுபவையாகவும், ஆறு அகம் பாடுபவையாகவும், ஒன்று புறம் பாடுவதாகவும் பகுக்கப்பட்டுள்ளன. சங்ககாலப் பண்பாட்டில் புலால் உண்ணல், கள்ளுண்ணல், கூடா ஒழுக்கம் போன்றன கலந்து கிடந்தன. ஆனால் நீதிநூல்கள் இவற்றை எதிர்த்துப் பாடின. சமண, பௌத்தர்கள் பலர் இந்நூல்களைப் பாடினர். வடநூல்களின் தாக்கம் நீதிநூல்களில் புகுத்தப்பட்டது. உலக மொழிகளில் திடீரெனக் காப்பியங்கள் தோன்றி விடுவதில்லை. வாய்மொழியாகப் பாடப்பட்டனவே பின் புலமை நலம் சான்ற புலவர்களால் கதை போன்ற நிகழ்வு தழுவி வரும் பெரிய பாடல்களாகப் பத்துப்பாட்டில் மலர்ச்சியுற்றுப் பெரிய கதையாக இரட்டைக் காப்பிய காலத்தில் வளர்ச்சியுற்றதனை அறியமுடிகின்றது. இந்தியக் காப்பியக் கதைமரபு சமணர்களால் வளம் பெற்றது. சமண, பௌத்தர்கள் தங்களுடைய முன்னோர் பற்றிய கதைகளைச் சுவைபடத் தொகுத்தார்கள். அவை மக்களிடையே பரவின. தமிழகத்திற்கு வந்த அவர்கள் அதே கதைகளைச் சுவையான காப்பியங்களாகப் படைக்க ஆரம்பித்தனர். சிலப்பதிகாரத்தின் கதைப்பொருள் தமிழகத்தில் வாய்மொழியாக வழங்கப்பட்டதாகும். இது பின்வந்த புலமை நலஞ்சான்ற இளங்கோவடிகளால் காண்டங்களாகவும் காதைகளாகவும் பிரிக்கப்பட்டுப் பாடப்பட்டது. மணிமேகலை, சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சியாக அமைந்தது. இதில் காண்டம் என்ற பகுப்பு இல்லை. முப்பது காதைகளை மட்டும் கொண்டதாக அமைகின்றது. சிந்தாமணி 13 இலம்பகங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. பாவகையில் மாற்றம் பெற்றுப் பிற்கால நூல்களுக்கு வழிகாட்டியாய் அமைகின்றது. ஐஞ்சிறு காப்பியங்கள் என்பன காப்பிய இலக்கணங்கள் சற்றுக் குறைவுபட்டு எழுந்தனவாகும். பெருங்கதை, கம்பராமாயணம், வில்லிபாரதம் ஆகியன தமிழின் சிறந்த காப்பியங்களாக அமைந்துள்ளன.
சங்க இலக்கியங்களுக்குப்பின் பெரும் மாற்றங்கள் கொண்டு எழுந்தவை காப்பியங்களாகும். பாடுபொருள், யாப்பு எனப் பல மாற்றங்களைக் காப்பியங்கள் பெற்று வளர்ந்தன. சங்க இலக்கியங்கள் தனிமனித உணர்வுகளை வெளிப்படுத்தின. காப்பியங்கள் கதை மூலம் பாத்திரங்களின் வழிப் பொதுமனித உணர்வுகளை வெளிப்படுத்தின. வடநாட்டுக் கதைகளைத் தமிழ் மரபிற்கேற்பக் காப்பியக் கவிஞர்கள் பாடினர். சமயக் கருத்துகளுக்கு முதன்மை தரப்பட்டது. தமிழர்கள் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த காலத்தில் தோன்றியவை சங்க இலக்கியங்கள். அதன்பின் சமணப் பௌத்தத் தாக்கத்தால் நீதிநூல்கள், காப்பியங்கள் தோன்றின. சமயம் கவிதையில் முன்னிறுத்தப்பட்ட காலத்தில் சுமார் கி.பி.600-இல் பக்தி இயக்கம் தமிழகத்தில் வளர்ச்சி பெற்றது. சைவர்களும், வைணவர்களும், பக்தியை வளர்த்ததோடு, பக்தி இலக்கியங்களையும் படைத்தனர்.
சைவ சமய நாயன்மார்கள் கோவில் கோவிலாகச் சென்று பாடியன பன்னிரு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. திருஞானசம்பந்தர் முதல் மூன்று திருமுறைகளைப் பாடினார். இவற்றில் 383 பதிகங்களே கிடைக்கின்றன. திருநாவுக்கரசர் 4, 5, 6 திருமுறைகளைப் பாடினார். இதில் 312 பதிகங்கள் கிடைக்கின்றன. ஏழாம் திருமுறையைப் பாடியவர் சுந்தரர். இவர் பாடியதில் 100 பதிகங்கள் உள்ளன. மாணிக்கவாசகர் பாடியது எட்டாம் திருமுறை. ஒன்பதாம் திருமுறை என்பது ஒன்பது சைவச் சான்றோர்களின் பாடல் தொகுப்பாகும். திருமூலர் பாடிய திருமந்திரம் பத்தாம் திருமுறை எனப்படும். பதினொரு சைவ அடியார்கள் பாடியது பதினோராம் திருமுறை. சேக்கிழார் பாடிய பெரிய புராணம் பன்னிரண்டாம் திருமுறையாக அமைகின்றது.
திருமாலின் பெருமையைப் பாடிய வைணவ ஆழ்வார்களின் பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள் என்றழைக்கப்படும். பன்னிரு ஆழ்வார்கள் என்று பெயர் பெற்ற அவர்கள் முறையே : (1) பொய்கை ஆழ்வார் (2) பூதத்தாழ்வார் (3) பேயாழ்வார் (4) திருமழிசை ஆழ்வார் (5) நம்மாழ்வார் (6) மதுரகவி ஆழ்வார் (7) குலசேகர ஆழ்வார் (8) பெரியாழ்வார் (9) ஆண்டாள் (10) தொண்டரடிப்பொடி ஆழ்வார் (11) திருப்பாணாழ்வார் (12) திருமங்கை ஆழ்வார் எனப்படுவர்.
முந்தைய இலக்கியங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது பக்தி இலக்கியம்.
பக்தி இலக்கிய காலத்தோடு தொடர்ந்து எழுந்தவையே சிற்றிலக்கியங்கள். ஒவ்வொரு இலக்கிய வகையும் ஒரு குறிக்கோளுடன் தோன்றுகின்றன. அந்த வகையில் இறைவனைப் பாட எழுந்தன சிற்றிலக்கியங்கள். பின் தமிழ் மன்னர், நிலக்கிழார், பொது வாழ்வினர் எனப் பரவி விரிந்து சென்றது. வடமொழி அடிப்படையில் பிரபந்தங்கள் என்றும் 96 வகை என்றும் பாட்டியல் நூல்கள் குறிப்பிடும். சிற்றிலக்கிய வகைகள் இன்றைக்கு 417 ஆகக் கண்டறியப்பட்டுள்ளன. சிற்றிலக்கியங்கள் ஒன்றைப்போல் மற்றொன்றாகப் பாடப்பட்டு, படிப்பவருக்குச் சலிப்பூட்டியதால் காலப்போக்கில் செல்வாக்கை இழந்தன.
தமிழ் இலக்கிய உலகில் ஏராளமான புலவர்கள் தோற்றம் பெற்றது சிற்றிலக்கியங்கள் மூலமே. இன்றும் ஏதாவது ஒரு வகையில் சிற்றிலக்கியங்களின் சாயல் பெற்ற இலக்கியங்கள் படைக்கப்பட்டே வருகின்றன.
சிற்றிலக்கியங்கள் நிலைபெற்றிருந்த காலங்களிலேயே ஆங்காங்கே புலவர்கள் தங்கள் உணர்வுகளைச் சிறு சிறு பாடல்களாகப் பாடினர். அவையே தனிப்பாடல்கள் ஆகும். காளமேகப் புலவர், பிற்கால ஒளவையார், இராமச்சந்திரக் கவிராயர் எனத் தொடர்ந்தது புலவர் பரம்பரை.
நாட்டுப்புற மக்களின் உணர்ச்சிகள் மற்றும் அனுபவங்களின் பிரதிபலிப்பாக விளங்கக் கூடியவை நாட்டுப்புற இலக்கியங்களாகும். இவ்விலக்கியங்களே பிற ஏட்டிலக்கியங்கள் தோன்றுவதற்குக் காரணமாவன. இப்பாடல்களைப் பாடியோர் நாட்டுப்புறங்களில் வாழ்ந்த பாமரர்களே ஆவர். வாய்மொழி இலக்கியமான நாட்டுப்புறப் பாடலின் தோற்றத்தைச் சங்க காலத்திலேயே உணர முடிகிறது. இருந்தபோதிலும் 19-ஆம் நூற்றாண்டில்தான் தமிழில் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுப்பது, ஆய்வு மேற்கொள்வது நிகழத் தொடங்கியது. நாட்டுப்புற இலக்கியத்தைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம். அவையாவன : (1) நாட்டுப்புறப் பாடல்கள் (2) நாட்டுப்புறக் கதைகள் (3) நாட்டுப்புறக் கதைப்பாடல்கள் (4) பழமொழிகள் (5) விடுகதைகள் என்பனவாகும்.
நாட்டுப்புறப் பாடல்கள் எளிய மக்களால் பாடப்பெற்றன. இலக்கியச் சாயலில் பாடப்பெற்ற நாட்டுப்பாடல்கள் காலப்போக்கில் எளிமையாக, அனைவருக்கும் புரியும் வகையில் பாடப்பெற்றன. மக்களின் இன்ப துன்ப உணர்வுகள் இப்பாடல்களின் அடிப்படையாக அமைந்தன.
|
|||||||||||||||||||||||||