6.1 தத்துவங்கள்
  • ஐந்து பருப்பொருள்கள் (பஞ்சபூதங்கள்)

    நிலம், நீர், தீ, காற்று, வானம்.

நிலம்

நீர்

தீ

காற்று

வானம்
  • ஐந்து அறிகருவிகள் (ஞானேந்திரியங்கள்)

    மெய், வாய், கண், மூக்கு, செவி.

மெய்

வாய்

கண்

மூக்கு

செவி
  • ஐந்து தொழிற்கருவிகள் (கன்மேந்திரியங்கள்)

    வாய் (வாக்கு), கை (பாணி), கால் (பாதம்), எருவாய் (பாயு), கருவாய் (உபத்தம்).
  • ஐந்து நுண்ணிய பொருள்கள் (தன்மாத்திரைகள்)

    சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்.
இவ்றோடு மனம், முனைப்பு (அகங்காரம்), மான் (மஹான்),
விளக்கமில் பகுதி (அவ்யக்தம்) என்னும் நான்கு.

இந்த இருபத்துநான்கு தத்துவங்கேளாடு இருபத்தைந்தாவது
தத்துவம் உயிர் (ஆன்மா) என்பதும், இருபத்தாறாவது தத்துவம்
இறைவன் என்பதும் வைணவ சமயத்தின் முடிபு ஆகும்.

பொங்கு ஐம்புலனும் பொறிஐந்தும்
கருமேந்திரியம் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிர்ஏய் பிரகிருதி
மான் ஆங்காரம் மனங்களே


(உயிர்ஏய் = உயிரோடு பொருந்திய; பிரகிருதி = மூலப்பகுதி,
மூலப்பொருள்; மான் = மாறான்; ஆங்காரம் = அகங்காரம்)

என்று (திருவாய்மொழி: 10-7-10) இருபத்துநான்கு தத்துவங்கள்
பற்றி நம்மாழ்வார் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே
திருச்சந்தவிருத்தப் பாசுரம் ஒன்றிலும் தத்துவங்கள்
இருபத்துநான்கையும் நிர்வகிப்பவன் எம்பெருமான் என்னும்
கருத்து இடம் பெற்றுள்ளது. அப்பாசுரம் வருமாறு:

ஐந்தும் ஐந்தும் ஐந்துமாகி அல்லவற்று உளாயுமாய்
ஐந்தும் மூன்றும் ஒன்றுமாகி நின்ற ஆதிதேவனே

(முதலடியில் வரும் 3 ஐந்தும் முறையே ஐம்பூதங்கள் ஐந்து,
ஞானேந்திரியங்கள் ஐந்து, கன்மேந்திரியங்கள் ஐந்து. இரண்டாம்
அடியில் வரும் ஐந்தும் தன்மாத்திரைகள் ஐந்து. மூன்று -
பிரகிருதி, மாறான், அகங்காரம், ஒன்று - மனம் ஆக 24
தத்துவங்கள்.)

6.1.1 முப்பொருள் விளக்கம்
மேலே குறித்த இருபத்தாறு தத்துவங்களை முப்பொருளாக
வகைப்படுத்திக் காட்டுவதுண்டு. அவை சித்து, அசித்து,
ஈசுவரன்
என்பன.

சித்து என்பது உயிர்கள் அல்லது சீவான்மாக்களின் தொகுதி
ஆகும்.

அசித்து என்பது, மக்கள் விலங்கு முதலியவற்றின் உடல்,
உலகிலுள்ள ஏனைய பொருள்கள் இவற்றிற்குக் காரணமான
பிரகிருதியாகும். பிரகிருதி, மூலப்பகுதி எனவும் வழங்கப்படும்.

ஈசுவரன், இறைவன்.
(அ) இவை மூன்றும் தனித்தனி இயல்புடைய வெவ்வேறு
பொருள்கள்.
(ஆ) என்றும் அழிவில்லாதவை.
(இ) எக்காலத்தும் இவை சேர்ந்தே இருக்கின்றன.

இவை தத்துவத்திரயம் (திரயம் = மூன்று) என்னும்
பெயராலும் வழங்கி வருகின்றன.

சித்து என்பது அறிவுள்ள பொருளாகும்; அசித்து என்பது
அறிவில்லாப் பொருள். சித்து, அசித்து ஆகிய இரண்டையும்
தனக்கு உடம்பாகக் கொண்டிருக்கிறான் இறைவன். அவற்றுள்
அந்தரியாமியாய் (மறைந்து உறைபவனாய்) நிற்கிறான்.

இவ்வாறு, இம் முப்பொருள்களும் ஒன்றை விட்டொன்று
பிரியாமல், எக்காலத்தும் தம் இயல்பை விடாமல் ஒன்று
சேர்ந்துள்ளன
என்பது வைணவ சமயக் கொள்கையாகும்.
இதனைச் சரீர - சரீரி பாவத்தால் விளக்கிக் கூறியுள்ளனர்.

6.1.2 உடல் - உயிர்க்கொள்கை (சரீர - சரீரி பாவம்)
சித்து முதலான இம்முப்பொருள்களுள் - இறைவனுக்கும் மற்ற
இருபொருள்களுக்கும் இடையேயுள்ள உறவு, உயிருக்கும்
உடலுக்கும் உள்ளதைப் போன்றதோர் உறவாகும். இந்த
உறவுமுறையினை அறிவிப்பதில்தான் விசிட்டாத்வைதம்
எனப்படும் வைணவத்தின் உயிர்நிலையே
இருக்கிறது
எனலாம்.இதனை விளக்குவதே உடல்-உயிர்க்கொள்கை ஆகும்.

அறிவுள்ள பொருள் (சித்து), அறிவில்லாப் பொருள் (அசித்து),
இறைவன் ஆகிய முதற்பொருள்கள் மூன்றனுள், அறிவுள்ள
பொருளும் அறிவில்லாப் பொருளும் இறைவனுக்கு
உடலாகின்றது. இறைவன் அவற்றைத் தனக்கு உடலாகக்கொண்டு
உறைகின்றான். அதாவது, “உயிர்கள் அனைத்தும் உலகமும்
இறைவனது சரீரம். இறைவன் சரீரி (அச்சரீரத்தை உடையவன்).”
இந்த உடல் - உயிர்க்கொள்கையைக் கீழ்க்காணும் நம்மாழ்வார்
பாசுரம் தெளிவுபடுத்தல் காணலாம்.
திட விசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை
படர்பொருள் முழுவது மாய்அவை அவைதொறும்
உடல்மிசை உயிர்எனக் கரந்தெங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே

(திருவாய்மொழி :1-1-7)


(திடவிசும்பு = திடமானவானம்; எரி = நெருப்பு; வளி = காற்று;
இவைமிசை = இவற்றின் மீது; கரந்து = மறைந்து; பரந்து =
உள்ளும்புறம்பும் வியாபித்து; சுருதி = வேதம்; சுரன் = தேவன்.)

‘எல்லாப் பொருள்களுமாகி அந்தந்தப் பொருள்களில்
எல்லாம் உடம்புகளில் உயிர் மறைந்திருப்பது போல உள்ளும்
புறம்புமாய் வியாபித்து (பரந்து) இருப்பவன் இறைவன்’ என்பது
இதன் திரண்ட கருத்தாகும்.

கரந்து எங்கும் பரந்துளன் என்பதால் எல்லாப்
பொருள்களிலும் அந்தர்யாமியாக மறைந்து நிற்கிறான்;
அவை எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி எங்கும் வியாபித்தும்
உளன் என்பது விளங்கும். இந்த இரு தன்மைகளையும்
அந்தர்யாமித்துவம், வியாபகத்துவம் என்று மெய்விளக்க
அறிஞர்கள் கூறுவர். இந்த இரண்டையும் ஆழ்வார்,

தன்னுள் அனைத்துஉலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்

(திருவாய்மொழி : 9-6-4)


என்று மற்றோர் இடத்திலும் விளக்கியுள்ளார். (எல்லா
உலகங்களும் தன்னிடத்திலே தங்கியிருக்க, அவ்வுலகத்து
உயிர்களுக்குள்ளே முறை தப்பாவதவாறு தானும் தங்கியிருக்கின்ற
உபகாரகன் - என்பது இதன் பொருளாகும்.)

இதனால் இறைவனையொழிய உலகிற்குத் தனியிருப்பும்
தனி்ச்சார்பும் இல்லை என்பது தெளிவாகும்.

இவ்வாறு இறைவன் எல்லாப் பொருள்களுக்கும்
உள்ளுறைபவனாய் இருந்தாலும் அவற்றின் குற்றங்கள் அவனைத்
தீண்டுவதில்லை. அவை தன்னைத் தீண்டாதவனாக
இருக்கின்றான். இதனைக் கீழ்க்காணும் திருவாய்மொழிப்
பாசுரத்தால் அறியலாம்.
யாவையும் எவரும் தானாய்
அவரவர் சமயந் தோறும்
தோய்விலன்; புலன்ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி,
ஆவிசேர் உயிரின் உள்ளால்
ஆதுமோர் பற்றில்லாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூடலாமே

(திருவாய்மொழி : 3-4-10)


(யாவையும் எவரும் தானாய் = அறிவில் பொருள்களும்
அறிவுடைப் பொருள்களும் தானேயாய்; சமயம் = அவஸ்தை;
விகாரம். ‘அவரவர் சமயம் தோறும்’ என்னுமிடத்தில்
‘அவையவை சமயம் தோறும்’ என்பதனையும் சேர்த்துப்
பொருள்காண வேண்டும்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்
= ஐம்பெரும்புலன்களாலும் அறியப்படாதவன்;
ஆவி
= உடல்; ஆதும் = யாதும்.)

உடலில் உள்ள உயிர் அவ்வுடலின் விகாரங்களை எப்படி
அடைவதில்லையோ, அப்படியே சித்து, அசித்து ஆகிய
இரண்டனையும் தனக்கு உடலாகக் கொண்ட இறைவனும்
அவற்றின் விகாரங்களை அடைவதில்லை என்பது இப்பாசுரத்தின்
சாரமான கருத்தாகும். இங்ஙனம் பரம்பொருளாகிய திருமால்
எல்லாப் பொருள்களுள்ளும் எக்காலத்தும் விட்டுப் பிரியாது
கலந்து அந்தர்யாமியாக இருக்கும் நிலையே உடல் -
உயிர்க்கொள்கையாகும்.
6.1.3 விசிட்டாத்வைதம்
இக்கொள்கையினையொட்டியே வைணவக் கோட்பாட்டினை
விசிட்டாத்வைதம் எனக்குறிக்கின்றனர்.

இறைவனும் உயிரும், ஒளியும் இருளும் போல
ஒன்றுக்கொன்று முரண்பட்டவை என்பது துவைதம்.

இறைவன் ஒருவனே உண்மைப்பொருள்; மற்றவையெல்லாம்
நிழல்களே என்பது அத்வைதம்.

சித்து, அசித்து, இறை (பிரம்மம்) ஆகிய மூன்றும் தம்
இயல்பை விடாமல் எப்போதும் ஒன்றாக உள்ளன என்பதே
விசிட்டாத்வைதம்.

துவைதம் என்பதற்கு இரண்டாய் இருக்கும் தன்மை
என்பது பொருளாகும். இதனால் பேதம் என்று ஆகிறது. எனவே
அத்வைதம் என்றால் அபேதம் (இரண்டற்ற தன்மை) என்று
பொருள் ஆகிறது. இனி, அத்வைதம் என்கிற சொல்லோடு
விசிஷ்ட என்னும் சொல் சேர்வதால் விசிட்டாத்வைதம் என்று
ஆகிறது. இது விசிஷ்டஸ்ய அத்வைதம் என்று விரியும். இதற்கு
விசிஷ்டத்தினுடைய அபேதம் என்று பொருளாகும். அதாவது
விசிஷ்டமானதொன்றின் அபேதம் என்று ஆகிறது. விசிஷ்டமான
அவ் - ஒன்று யாது? எனில்; விசேஷணத்தோடு கூடியது
விசிஷ்டமாகும். இங்குப் பிரம்மமே விசிஷ்டமான பொருள். அது
சேதன, அசேதனத் தொகுதிகளை விசேஷணமாகக் கொண்டு
ஒன்றாக உள்ளது. சேதனங்கள் தன்னுணர்வு கொண்ட உயிரிகள்;
அசேதனங்கள் தன்னுணர்வில்லாத உயிரற்ற ஜடப்பொருள்கள்.
இவற்றைப் பிரம்மம் தன்னை விட்டுப் பிரியாத
விசேஷணங்களாகக்கொண்டு எப்போதும் ஒன்றாக உள்ள
தன்மையே விசிட்டாத்வைதம் எனப்படும்.(விசேஷணம் = அடை;
விசேஷியம் = அடைகொளி; விசஷ்டம் = அடைகொண்டது.)

எனவே எல்லாவகைச் சேதன (சித்து) அசேதன (அசித்து)ப்
பொருள்கேளாடு கூடின பிரம்மம் ஒன்று - என்று
ஏற்றுக்கொள்வதால் வைணவ சமயமானது விசிஷ்டாத்வைதம்
என்று வழங்கப்படுகிறது.

சேதனம், அசேதனமாகிய இரண்டும் இல்லையென்றும்
பிரம்மம் ஒன்றே உள்ளதென்றும் கொள்ளுகின்ற பிறருடைய
மதத்தைத் தள்ளி, சேதனம், அசேதனம் இவ்விரண்டையும்
விட்டுப் பிரியாத - விசேஷணமாகக் கொண்ட பிரம்மம் ஆகிய
மூன்று தத்துவங்களும் உண்மையில் உள்ளன என்று
கொள்ளுவதே விசிஷ்டாத்வைத தரிசனத்தின் தேர்ந்த
பொருளாகும்.

இராமாநுசர் நிறுவிய தத்துவம் இதுவே.

இதனை இந்திய தத்துவ ஞானம் என்னும் நூலில் அறிஞர்
கி.லக்ஷ்மணன் பின்வருமாறு தெளிவுபடுத்துகிறார்.

“இராமானுசர் கொள்கைப்படி உலகம், உயிர், இறைவன்
ஆகிய மூன்றும் உண்மைப்பொருள்கள். எனினும், இறைவனே
உயிர்கள் அனைத்துக்கும் உலகுக்கும் அந்தர்யாமியாய் அதாவது
உள்நின்ற அவையனைத்தையும் இயக்குகின்றான். எனவே
ஆன்மாக்கள் பலவாயினும் அவ்வான்மாக்கள் அனைத்தையும்
தனக்கு உடலாகக்கொண்டு, ஆன்மாக்களுக்கெல்லாம்
ஆன்மாவாய் நிற்கும் பரமான்மா ஒன்றுதான் என்பதும்
புலனாகின்றது. இறைவன் உயிருக்கு உயிராய் நிற்கும்
காரணத்தால், இறைவன் வேறு, உயிர் வேறல்ல; இரண்டும்
ஒன்றுதான் என்பதும் பெறப்படுகின்றது. இதுவே இராமானுசர்
பேசும் அத்வைதம். சங்கரர், இரண்டில்லை; உள்ளது ஒன்றுதான்
என்னும்போது உயிர்கள் கிடையா; உலகு கிடையாது; பிரம்மம்
ஒன்றே உள்ளது என்பது கருத்து. ஆனால் இராமானுசர் பேசும்
அத்வைதத்தில் உலகும் உண்டு; உயிர்களும் உண்டு. ஆனால்
அவை பிரம்மத்துக்கு விசேஷணங்கள். பிரம்மம்
அவ்விசேஷணங்களை உடைய விசேஷியம். இந்த விசேஷிணம்,
விசேஷியம் ஆகிய இரண்டும் சேர்ந்த விசிஷ்டமே இராமானுசர்
பேசும் பரம்பொருள். இதனாலேயே அவரது அத்வைதக்
கொள்கைக்கு விசிஷ்டாத்வைதம் என்று பெயர் ஏற்படலாயிற்று.
சங்கரரும் ஒரேயொரு பொருளுக்கு மட்டுமே முதன்மை
கொடுக்கின்றார். இராமானுசரும் ஒரேயொரு பொருளுக்கே
முதன்மை கொடுக்கின்றார். ஆனால் சங்கரர் ஏனைய
யாவற்றையும் இல்லாதன ஆக்கித் தாம் பேசும் பொருளுக்கு
முதன்மை தேடுகின்றார். இராமானுசர் ஏனைய யாவற்றையும் தாம்
பேசும் பரம்பொருளுக்குச் சரீரமாக்கி அப்பரம்பொருளைச்
சரீரியாக்கி அதற்கு முதன்மை கொடுக்கின்றார்.”

இந்த விசிட்டாத்வைதக் கொள்கையின் அடிப்படையில்
நாராயணனே பரம்பொருள் என்று நிலைநாட்டுகிறது வைணவ
சமயம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் I

1.
வைணவ சமயம் கூறும் தத்துவங்கள் எத்தனை?
2.
முப்பொருள்களாக வைணவம் குறிப்பிடுவன யாவை?
3.
வைணத்தின் உடல்-உயிர்க் கொள்கையை வெளியிடும் திருவாய்மொழிப் பாசுரம் எது?
4.
விசிட்டாத்வைதம் என்றால் என்ன?