4.2 இயேசுவின் பிறப்பும் காலமும்

உரோமையர்கள் பாலஸ்தினாவை (இன்று வழக்கிலுள்ள
கணிப்புப்படி) கி.மு.63-இல் தங்கள் குடியேற்ற ஆதிக்கத்துக்குள்
கொணர்ந்தனர். தாங்கள் ஆக்கிரமித்த குடியேற்ற ஆதிக்க
நாடுகளில் அந்தந்த இடத்திலுள்ள பலம் வாய்ந்த ஆளுநர்களையே
அதிகாரியாக நியமிப்பது உரோமையரின் வழக்கம். அதற்கொப்ப
யூதர்களின் அரசனாக ஏரோது என்ற சக்திவாய்ந்த ஆளுநனைப்
பாலஸ்தீனாவை ஆண்டிட நியமித்தனர். மகா ஏரோது
என்றழைக்கப்படும் இம்மன்னனின் ஆட்சிக்காலத்தில்தான் இயேசு
பிறந்தார். கி.மு.4-ஆம் ஆண்டு மகா ஏரோது இறக்கவே, அவனது
அரசு மூன்றாகப் பிளவுபட்டது. அவனது மகன்களில் ஏரோது
அர்க்கெலாவுஸ் கலிலேயா பகுதியையும், ஏரோது பிலிப்பு வட
மாநிலப் பகுதியையும் ஆளலாயினர்.

அர்க்கெலாவுஸ் ஆண்ட பகுதியில் மக்களிடையே அதிருப்தி
மூண்டதால் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் உரோமையர்கள்
அர்க்கெலாவுசைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு உரோமை ஆளுநன்
ஒருவனை யூதேயா மற்றும் சமாரியா பகுதிகளில் ஆட்சிசெய்ய
அனுப்பினர். அப்போது இயேசுவுக்கு வயது 12 இருக்கும்.

உரோமையின் நேரடி ஆட்சி தொடங்கியதோடு யூத நாட்டின்
வரலாற்றிலேயே மிகக் குழப்பமான காலமும் ஆரம்பித்தது
எனலாம். இக்குழப்பத்தின் காரணமாக கி.பி.70-ஆம் ஆண்டில்
எருசேலம் ஆலயமும், நகரமும் ஏன் யூத நாடே பெருமளவு
அழிந்துபோயின. கி.பி.135-இல் இந்த அழிவு முழுமையாகவே
நிகழ்ந்து விட்டது. இயேசு வாழந்து இறந்த காலம் அது.

4.2.1 இயேசுவும் சீடர்களும்

ஆதித்திருச்சபை, படிப்படியாகக் காலூன்றத் தொடங்கியது.
இயேசுவின் போதனைகளால் கவரப்பட்டு முதல் இரு
நூற்றாண்டுகளில் கிறித்துவர்களில் நிறையப் பேர் கிறித்துவின்
சீடர்களாயினர்.

இவர்கள் உலகெங்கும் சென்று இயேசுவின் கிறித்துவத்தைப்
போதித்தனர். தொடக்க காலத்தில் உரோமையில் கிறித்துவம் பல
சிக்கல்களையும் அடக்குமுறைகளையும் சந்தித்தது. பின் அதே
உரோமையில் கி.பி. 4-ஆம் நூற்றாண்டில் அரசு சமயமாகக்
கிறித்துவம் உருப்பெற்றது. அரசின் சொத்துக்கள் திருச்சபையின்
சொத்துக்களாயின. இயேசுவின் வாரிசுகள் புனித உரோமைப்
பேரரசின் வாரிசுகளாக மாறினர்.

இயேசுவின் சீடர்களே கிறித்துவம் உலகெங்கும் பரவுவதற்குப்
காரணமாக விளங்கினர். அவர்களுள் முதல்வர் புனித பேதுரு
(St.Peter)
ஆவார். மேலும் அவர் சகோதரர் பெலவேந்திரர்.
செபதெயுவின் மகன் யாகப்பர், அவர் சகோதரர் யோவான், பிலிப்பு,
பார்த்தொலாமேயு, தோமையார், மத்தேயு, அல்பேயுவின் மகன்
யாகப்பர், ததேயு, கனனேய சிமோன் ஆகியோரும் உலகெங்கும்
சென்று இயேசுவின் நற்செய்தியைப் போதித்தனர். உலகமெங்கும்
சென்று எல்லா இனத்தாருக்கும் தம் நற்செய்தியைப் போதிக்குபடி
இயேசுவே கட்டளையிட்டார்.

4.2.2 புதிய ஏற்பாடும் கிறித்துவமும்

இயேசு மக்களுக்குப் போதித்த அனைத்தும் பின்னர் நூல்
வடிவம் பெற்றன. இயேசுவைப் பின்பற்றிய சீடர்களும் அவர்
அளித்த நற்செய்தியைப் பரப்பினரர்கள். இயேசு போதித்த
போதனைகள்     மக்களை     அடைவதற்கு     நூல்வடிவம்
இன்றியமையாதது ஆயிற்று. புனித மாற்கு முதல் நற்செய்தி நூலை
எழுதினார். அவரைச் சார்ந்து மத்தேயுவும் லூக்காவும் எழுதினர்.
இம்மூன்று நற்செய்தியாளர் எழுதிய நூல்களுள் பல ஒத்தமைவுச்
செய்திகள் காணப்படுகின்றன. புனித யோவான் எழுதிய நற்செய்தி
மற்ற மூவர் படைப்புக்களிலிருந்தும் வேறுபடுகின்றது. இந்நால்வர்
எழுதிய நற்செய்தியும், புனித யோவான், பேதுரு, புனித பவுலடியார்
எழுதிய மடல்களும் புதிய ஏற்பாடு என அழைக்கப்படுகின்றது.
இந்நூல்களே கிறித்துவம் எது என்பதற்குச் சான்று பகர்கின்றனவாக
உள்ளன. இதுவே கிறித்துவர்களின் வேதமாகும். இந்நூலைக்
கடவுளே அருளினார் என்பதே கிறித்துவத்தின் கருத்தாகும்.
இப்புதிய ஏற்பாடு உருவாவதற்கு முன்னரும் வேதநூல் ஒன்று
உண்டு. அது பழைய ஏற்பாடு என அழைக்கப்படுகிறது. இயேசு
கிறித்துவின் வாழ்வுக்கு முந்தைய சமயத்தையும், விதிமுறைகளையும்
பழைய ஏற்பாடு தாங்கியுள்ளது. பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு
என இரண்டும் சேர்ந்ததே விவிலியம் (Bible) என
அழைக்கப்படுகிறது.