முகப்பு

தொடக்கம்


xvii

படர்தல்     எனவும்     வினைமுற்றாகப்    படர்ந்தான்   எனவும்
எச்சங்களாகப்     படர்ந்த,     படர்ந்து    எனவும்    சொற்களை
ஆக்கிக்கோடற்குரிய பகுதியாக வரும் ‘படர்’ போலும்  சொற்களையும்,
உடன்     பாட்டுச்     சொல்     இல்லாத    எய்யாமை   எனும்
எதிர்மறைச்சொல்லையும்,  மறுதலைச்  சொல்  இல்லா   நன்று எனும்
சொல்லையும்   ஆசிரியர்   வேர்ச்சொல்   நிலையில்  கூறாமல்  பல
வாய்பாடுகளில்  கூறியிருத்தலால் அவர் கருத்து  வேர்ச்சொல் ஆகாது
என்பதை  அறியலாம். இலம்பாடு என்பது உரிச்சொல் (உரி 62) என்ற
ஆசிரியர்  அதனை  ‘இலமென் கிளவிக்குப் படு வரு காலை’ (புள்ளி
மயங்கியல்,  21)  எனப்  புணர்ச்சி  விதி  கூறியதாலும்  நாம்  நன்கு
அறியலாம்.

தொகுப்புரை:

இதுகாறும் கூறியவற்றிலிருந்து தெரிய வருவன:

1. உரிச்சொல்    என்பதன்   பெயர்க்   காரணம்   பலவாறாகக்
கூறப்படினும்    பொருளுக்கு    உரிமைப்   படுத்தப்படுதலின்
உரிச்சொல் என்பதே சிறக்கும்.

2. பெயரினும்     வினையினும்    சேராக்   குறைபாடுகாரணமாக
உரிச்சொல் குறைச்சொல் எனப்படும்.

3. உரிச்சொல்  என்பது  பெயர்ச் சொல்,   வினைச்  சொற்களின்
வேர்ச்சொல் அன்று.

உரிச்சொற் பொருள் உணருமாறு

பெயர்ச்சொல்     என்பது பொருள், இடம், காலம், சினை, குணம்,
தொழில்களுள்    ஒன்றனை   யுணர்த்துவது;   ஆதலின்   பொருள்
வெளிப்படையில்   விளங்குவது,   திரிசொல்   ஆயினும்  அரிதுணர்
பொருளதாய்ப்  புலப்படும்;  அதாவது பொருள் இடம் முதலியவற்றுள்
ஒன்றைப் புலப்படுத்தும்.

வினைச்சொல்  என்பது    பொருளின்    புடைபெயர்ச்சியாதலின்
காலத்தைக் கொண்டதாய்ப் பொருளைப் புலப்படுத்தும்.

இடைச்சொல்   தனக்கெனப்     பொருளுடையதன்று;     பெயர்
வினைகளின் பொருள் புலப்பாட்டுக்குத் துணைபுரிவது.

உரிச்சொல்லானது   பொருள்  இடம்   முதலியவற்றை  அல்லது
அவற்றின்   புடைபெயர்ச்சியை   யுணர்த்துவதன்று;   இசை,  பண்பு,
குறிப்பு  என்னும்  இவற்றுள்  ஒன்று பற்றித் தோன்றுவது; தோன்றிய
பின்னர்ப்  பெயராகவோ வினையாகவோ மாற்றம் பெறுவது; அதனால்
அதன்  பொருள்  இன்னதென்று  வெளிப்படையிற்  புலனாவதில்லை.
அப்படியானால் உரிச்சொற்பொருள் உணருமாறு யாங்ஙனம்?


முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்