பொருட் சுருக்கம் சொல்லதிகாரத்தில் கிளவியாக்கம் முதல் உரியியல் ஈறாகவுள்ள எட்டு இயல்களில் சொல்லாது எஞ்சிய இலக்கணங்களைக் கூறுதலின் எச்சவியல் அப்பெயர் பெற்றது. பிரிநிலை, வினை முதலிய பத்துவகை யெச்சங்கள் கூறப்படுதலின் இவ்வியல் எச்சவியல் எனப்பட்டது என்பவரும் உண்டு. பத்துவகை யெச்சங்களின் இலக்கணங்களினும் பிற இலக்கணங்களே மிகுதியும் கூறப்படுதலின் அக்காரணம் பொருந்தாது. பெயர் வினைகளைப் பற்றிய செய்திகள் கிளவியாக்கத்திலும், பெயரைப் பற்றியன வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், உருபியல், பெயரியல் ஆகியவற்றிலும், வினையைப்பற்றியன வினையியலிலும், இடை உரிகளைப் பற்றியன அவ்வவ்வியல்களிலும் கூறப்பட்டுள்ளன. அவ்வவ்வியல்களில் கூறப்படவேண்டியவை விடுபட்டும் உள்ளன. விடுபட்டனவே எச்சவியலில் கூறப்பட்டுள்ளன. அன்றியும் எவ்வியலிலும் கூறுதற்கியாது விடுபட்டனவும் இவ்வியலிற் கூறப்பட்டுள்ளன. அவை செய்யுள் பற்றிய செய்திகளாம். அவை முதலில் கூறப்பட்டுள்ளன. 1. செய்யுள் ஒழிபுகள் 1. நால் வகைச் சொற்கள் செய்யுட்குரிய சொற்கள் இயற்சொல், திரிசொல், திசைச்சொல் வடசொல் என்னும் நான்குமாம். 1) அவற்றுள் இயற்சொல்லாவது தமிழ் நிலத்து வழங்கும்சொல். அது பொருளை வெளிப்படையாக உணர்த்துவது, நிலம் நீர் என்பன உதாரணமாம் (2) திரிசொல்லாவது அரிதிற் பொருள் உணர இருக்கும் சொல் அது இரண்டு வகைப்படும். அவை கிளி என்ற ஒரு பொருளைக் குறிக்கக் கிள்ளை, சுகம், தத்தை எனப் பல சொற்கள் வருவ
பிறைக்கோட்டுக்குள் உள்ள எண்கள் எச்சவியற் சூத்திர எண்கள். |