xix

அறுநூறு ரூபாய் நிரந்தர வருமானமளிக்கும் ஜாகீர் ஒன்று 1922 ஏப்பிரல்12 முதல் பயன் தருமாறு வழங்கப் பட்டது.

இவருடைய பக்தி மிகுந்த பரிசுத்தமான பிரமசரிய வாழ்க்கையும் இனிய குணமும், சிறந்த கலையுணர்வும், வசீகரத் தோற்றமும், வணங்கிய வாக்கும், நுணங்கிய கேள்வியும் வள்ளன்மையும், அடுத்தவரை ஆதரிக்கும் நற்பண்பும் இவரை எவரும் விரும்பிப் பாராட்டுதற்குரிய பண்புகளாயிருந்தன. ‘கற்றோருடன் கலந்து உரையாடி மகிழ்வதிலும் பேரின்பம் வேறில்லை,’ என்னும் கருத்துடன் இப்பெரியார் வாழ்ந்து வந்தமையின், புலவரும் கவிஞரும் போற்ற வாழ்ந்தவராவர்.

இங்ஙனம் அரசறிய வாழ்ந்து பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தது போலவும் ஊருணி நீர் நிறைந்தது போலவும் பலர்க்கும் பயன்படுபவராய் விளங்கிய இப்பெரியார், 1932-ஆம் ஆண்டு, மே மாதம் 20-ஆம் தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்து, விண்ணுலகத்தார்க்கு நல்விருந்தினர் ஆயினர். இறைவன் திருவடி நிழலில் இவர் ஆன்மா என்றும் நிலவி இன்பம் திளைப்பதாகுக!.