வடமொழி தென்மொழி வல்லுநர் என்பதும், 1சோழ நாட்டினர் என்பதும், சோழனவையில்
இந்தூல் அரங்கேற்றப்பட்டதென்பதும் அறிய
முடிகின்றது. இந்நூலில் மேற்கோளாகக் காட்டிய செய்யுட்களில்
அனபாயனைப்பாராட்டியுள்ளமையான், இவர் சோழநாட்டிலிருந்து,
அச்சோழனவையில் இந்நூலை அரங்கேற்றி யிருக்கலாம்
என்பதை நம்பமுடிகின்றது. ஆனால் அம்பிகாபதியின்
புதல்வர் என்பதற்கும், அதனால் கம்பரின் பெயரர்
ஆவார் என்பதற்கும் இச்செய்யுளன்றிப் பிறசான்றுகள்
இன்மையின், அதனை அவ்வளவாகத் துணிய இயன்றிலது.
இன்னொரு சாரார் வடமொழித் தண்டியலங்காரத்தை
மொழிபெயர்த்ததால் இவருக்கும் தண்டி எனும் பெயர்
வந்தது என்பர். பிறிதொரு சாரார் தண்டியென்னும்
ஆசிரியர் ஒருவரே வடமொழியில் காவிய தர்சத்தையும்
தமிழ்மொழியில் இத்தண்டியலங்காரத்தையும் இயற்றினர் என்பர். இவ்விருசாராரின் கூற்றுக்களுக்கு
எவ்விதச் சான்றும் இன்மையால் இவை களையத்தக்கனவே
யாம். வடமொழியினின்றும்
இந்நூலை மொழி பெயர்த்திருப்பினும், மொழி
பெயர்ப்பால் முதனூற் கருத்துக்களின் அமைப்பும்,
அழகும் கெடாதவாறு யாத்திருப்பதும்,
முதனூலாசிரியர் தம் காலத்து ஆரசனான
இராசசிம்மனைப் பாராட்டியுள்ள இடங்களில்
எல்லாம், இவர் தம் காலத்து அரசனாகிய
அனபாயனின் பெருமைகளைச் சுவை நலம் ததும்பக்
கூறியிருப்பதும், இவர்தம் காலத்துத் தலைமை
சான்ற பெரும் புலவராய் விளங்கிய
ஒட்டக்கூத்தரைப் பற்றிய புலமைக்
காழ்ப்பின்றிச் சிறப்பித்திருப்பதும்
இவர்தம் புலமைக்கும் சால்பிற்கும்
எடுத்துக்காட்டாக வுள்ளன.
|