இவ்வாசிரியர் பலவிடத்தும் தம் அன்புரிமை தோன்றத் தம்மை யுளப்படுத்தி ' எங்கோன் ' என்று கூறுவதால் இவர் அனபாயன் காலத்தவர் என்பதை நன்கறிய முடிகின்றது. இவ்வனபாயன் இரண்டாம் குலோத்துங்க சோழனேயாவான். இவனுடைய காலம் கி.பி. 12 -ம் நூற்றாண்டு ஆகும். ஆதலால் இவர் தம் காலமும் அதுவேயாகும். அன்றியும், ஒட்டக்கூத்தரின் காலம் கி.பி. 12-ம் நூற்றாண்டாதலால் இவ்வாசிரியர் காலமும் அதுவேயாதல் அறியலாம்.
சமயம் :இந்நூலாசிரியர் காட்டியுள்ள மேற்கோட் செய்யுட்களில் ஏறத்தாழ 41 பாடல்கள் சிவபெருமானைப்பற்றி உள்ளன. ஏறத்தாழ இருபது பாடல்கள் திருமாலைப் பற்றியுள்ளன. சிவபெருமானைப் பற்றிய பாடல்களில் ஆசிரியர் தமக்கிருக்கும் அன்புடைமை தோன்ற ' எங்கோன் ' என்றும், 'அடியேற்கினிதாம் கச்சிக் கச்சாலைக் கனி ' என்றும், 'எம்பிரான் இனியார்' 'உம்பர் நாயகனே !' என்றும் குறிப்பிடுவதால், இவர் சைவசமயத்தவர் என்பதை நன்கறியலாம்.

(உ) உரையாசிரியர் :

இந்நூலுக்கு உரை வகுத்த ஆசிரியரைப்பற்றி ஒன்றும் தெளிவாக அறிய இயலவில்லை. சுப்பிரமணிய தேசிகர் உரை எனச் சில பிரதிகளில் உள்ளன. சில பிரதிகளில் அப்பெயரும் இல்லாதிருக்கின்றது. ஆதலின் இவரைப் பற்றிய செய்திகள் ஏதும் தெரிந்தில. எனினும் இவர் தம் உரையைக் கொண்டு இவருடைய புலமையை நன்கறிய முடிகின்றது. சுருங்கிய முறையில் ஆற்றொழுக்காக உரையெழுதிச் செல்லுதலும், சிற்சில இடங்களில் பொழிப்புரையின்றிச் சொற்பொருள் மட்டும் தந்து போதலும், இன்றியமையாத இடங்களில் ஆங்ஙாங்கு இலக்கணக் குறிப்புக்கள் தந்து போதலும், ஒரு சில இடங்களில் அணிக்கும் அப்பாடற்கும் உள்ள பொருத்தத்தைக் குறிப்பாய்க் காட்டிச் செல்லுதலும், ஒரு அணிக்கும் பிறிதொரு அணிக்கும் உள்ள வேற்றுமைகளைச் சிற்சில இடங்களில் கூறிப் போதலும் இவர் தம் இயல்பாகும். எனினும் இவர் உரை இப்பொழுதுள்ள நிலையில் ஒரு நெறியாக அமைந்திலது என்றே தோன்றுகிறது. இவர் தம் உரையுடன் வெளிவந்த பதிப்புக்களும் ஒவ்வொரு அமைப்பில் உள்ளன. ஆதலின் இதுபற்றிய முழுவுண்மை புலனாகவில்லை. இவர் பல இடங்களில் ' என்பாருமுளர் ' எனக் குறிப்பதிலிருந்து இவருக்கு முன்னமையே இந்நூலிற்கு உரையிருந்தது என அறியமுடிகின்றது.
பாடலுக்கும் அணிக்கும் உள்ள பொருத்தத்தினை விளக்கிச் செல்லுதல் இவர் காலத்தில் தேவையின்று என விடுக்கப்பட்டது போலும்.

ரு. முடிவுரை :

இவ்வரைவழி நூலையும், நூல்வழி அணியிலக்கணத்தையும் அறிந்தின்புறுவது நம்முடைய கடமையாகும்.