பக்கம் எண் :
 
பொதுவணியியல்1


தண்டியலங்காரம்

மூலமும் பழைய வுரையும்

1. பொதுவணியியல்

தற்சிறப்புப் பாயிரம்

1. சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி
சிந்தைவைத் தியம்புவல் செய்யுட் கணியே

இவ்வதிகாரம் என்ன பெயர்த்தோவெனின் , அணியினது இலக்கணம் உணர்த்தினமையின் அணியதிகாரம் என்னும் பெயர்த்து .

இவ்வதிகாரத்துள் இவ்வோத்து என்ன பெயர்த்தோவெனின் , அணிபெறுஞ் செய்யுட்கும் , ஒருசார் அணிக்கும் இலக்கணம் உணர்த்தினமையின் பொதுவியலோத்து என்னும் பெயர்த்து .

இவ்வோத்தினுள் இத்தலைச் சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் , கடவுள் வணக்கமும் உரைக்கும் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று .

இதன் பொருள் : கலைமடந்தை துணைத்தாளைக் கருத்துள் வைத்து , யாப்புக்கு அலங்கார இலக்கணஞ் சொல்லுவன் என்றவாறு .

சொல்லின்கிழத்தி எனினும் , கலைமடந்தை எனினும் ஒக்கும் . இணையடி எனினும் துணைத்தாள் எனினும் ஒக்கும் . சிந்தை எனினும் கருத்து எனினும் ஒக்கும் . 'உள்' என்பது ஏழாம் வேற்றுமை தொக்கு நின்று விரித்துரைக்கப்பட்டது . இயம்புவல் எனினும் சொல்லுவல் எனினும் ஒக்கும் . செய்யுள் எனினும் யாப்பு எனினும் ஒக்கும் . அணி எனினும் அலங்காரம் எனினும் ஒக்கும் .

'அணி' என்றது ஈண்டு அலங்கார இலக்கணத்தை ; ஆகுபெயர் . ஏகாரம் - ஈற்றசை .

'வாழ்த்து , தெய்வம் வணங்குதல் , வருபொருள் உரைத்தல் என்பன காப்பியத்து முதல் இலக்கணம் ' (பொதுவியல் : அ-ஆம் நூற்பா) என்றார் ஆசிரியர் ஆகலின் , ஈண்டுத் தெய்வ வணக்கமும் , உரைக்கும் பொருளும் உணர்த்தப்பட்டன . இஃது இலக்கியத்திற்கு ஓதியவதனை இலக்கணத்திற்கும் ஓதி உடம்பொடு புணர்த்தார் ஆசிரியராகலின் , ஈண்டு இவ்வாறு உரைக்கப்பட்டது , என்றதனால் சிறப்புப் பாயிரமாயிற்று .