விளக்கவுரை : 'தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும் , எய்தவுரைப்பது தற்சிறப்பாகும் ' என்பது தற்சிறப்புப் பாயிரத்தின் இலக்கணமாகும் . இந்நூற்பாவில் ' சொல்லின் கிழத்தி மெல்லியல் இணையடி சிந்தை வைத்து ' என்பதால் தெய்வ வணக்கமும் , 'செய்யுட்கு அணியே இயம்புவல் ' என்பதால் உரைக்கும் பொருளும் உரைக்கப்பட்டமை காண்க . ஆதலின் இந்நூற்பா தற்சிறப்புப் பாயிரமாயிற்று .
உடம்பொடு புணர்த்தல் - கூற வேண்டுவதோர் இலக்கணத்தை , இலக்கணமாக விதித்துச் சொல்லாமல் தான் அவ்விலக்கணம் அமையக் கூறியதைக் கொண்டு தெரிவித்தலாம் .
செய்யுள் வகை
2. செய்யுள் என்பவை தெரிவுற விரிப்பின்
முத்தகங் குளகந் தொகைதொடர் நிலையென
எத்திறத் தனவும் ஈரிரண் டாகும் .
என்பது சூத்திரம் என்னுதலிற்றோ வெனின் , மேல் 'செய்யுட்கு அணியிலக்கணம் உணர்த்துவல்' என்றார் . அச்செய்யுளாமாறு உணர்ந்தே அணி யுணரப்படுமாகலான் . அவ்வணி பெறுஞ் செய்யுளினது பெயரும் , முறையும் , தொகையும் உணர்த்துதல் நுதலிற்று .
(இ-ள்) செய்யுளென்று கூறப்படுவன , விளங்க விரித்துணர்த்துங்கால் , எவ்வகைப்பட்ட பாவேனும் முத்தகச் செய்யுளும் , குளகச் செய்யுளும் , தொகைநிலைச் செய்யுளும் , தொடர்நிலைச் செய்யுளும் என நான்கு வகைப்படும் என்றவாறு .
'செய்யுள்' என்பதை நான்கினோடும் , 'நிலை' என்பதைப் பின் இரண்டினோடுங் கூட்டி உரைக்கப்பட்டன . முத்தகம் குளகம் என்பன வடமொழிப் பெயர் . ஏனை யிரண்டுந் தமிழ்மொழிப் பெயர் . அவையாமாறு முன்னர் அறியப்படும் .
வி-ரை: செய்யுள் என்பதை நான்கனொடும் கூட்ட முத்தகச் செய்யுள் , குளகச் செய்யுள் , தொகைநிலைச் செய்யுள் , தொடர்நிலைச் செய்யுள் என்றாகும் . நிலை என்பதைப் பின் இரண்டனொடுங் கூட்டத்தொகைநிலை , தொடர்நிலை என்றாகும் .
முத்தகச் செய்யுள்
3. அவற்றுள்
முத்தகச் செய்யுள் தனிநின்று முடியும் .
எ-ன் முத்தகச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று .
(இ-ள்) மேற்சொன்ன நான்கனுள் முத்தகச் செய்யுள் என்பது தனியே நின்று ஒருபொருள் பயந்து முற்றுப் பெறுவது என்றவாறு .
எடுத்துக்காட்டு :
'என்னேய் சிலமடவார் எய்தற் கெளியவோ
பொன்னே யனபாயன் பொன்னெடுந்தோள் - முன்னே
தனவேயென் றாளுஞ் சயமடந்தை தோளாம்
புனவேய் மிடைந்த பொருப்பு '