பக்கம் எண் :
 
பொதுவணியியல்3

(இ-ள்) பொன்னை யொப்பாய் ! அடிப்படத் தனக்கே சொம்மாக நினைத்துத் துய்க்கின்ற கொற்றவையுடைய தோளாகிய செறிந்த வேயினாலே நெருங்கப்பட்ட பொருப்பாகிய அனபாயனுடைய அழகினையுடையவாய்ப் பெரியவாகிய தோள்களானவை , என்னையொக்கும் தன்மை யுடையராகிய பெண்டிர் பலரும் புல்லுதற்கு எளிவந்தனவாமோ ? ஆகா எ-று .

வேய் மிடைந்த பொருப்பாகிய தோள் எனக் கூட்டுக . தோளாகிய பொருப்பு என்பாருமுளர் . 'என்னேய் ' என்புழி இரண்டனுருபு தொக்கு நின்றதெனக் கொள்க . 'என்' என்பதனை இரக்கத்தின்கட் குறிப்பு என்பாருமுளர் . சில என்பது - பல . எய்துதல் - கூடுதல் . அனபாயன் - அபாயரகிதன் . பொன் - அழகு . நெடுந்தோள் - பெரிய தோள் . 'என்று' என்றது என்று நினைத்து என்றவாறு . சயமடந்தை - வனதுர்க்கை . புனவேய் - செழித்தவேய் . மிடைதல் - நெருங்குதல் . பொருப்பு - மலை .

வி-ரை: ஸ்வம் என்பது சொம் எனத் திரிந்தது . ஸ்வம் - உரிய பொருள் . அபாயரகிதன் - அபாயமில்லாதவன் .

இப்பாடலில் தொடங்கிய கருத்து இப்பாடலிலேயே முற்றுப் பெற்றிருத்தலின் முத்தகச் செய்யுளாயிற்று .

குளகச் செய்யுள்

4 . குளகம் பலபாட் டொருவினை கொள்ளும் .

எ-ன் குளகச் செய்யுளாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

(இ-ள்) குளகச் செய்யுளென்பது , பல பாட்டாய் ஒருவினை கொண்டு முடிவது என்றவாறு .

'ஒருவினை' என்ற விதப்பான் , ஒரு பெயர் கொண்டும் முற்றுப் பெறுமென்க .

இதற்கு இலக்கியம் வந்துழிக் காண்க .

வி-ரை: குளகச் செய்யுட்களாகவே வந்த இலக்கியம் காண்டற் கரிதாகலின் இதற்கு இலக்கியம் வந்துழிக் காண்க என்றார் . எனவே முத்தகச் செய்யுளாகவே வந்த இலக்கியம் பல உள என்பது பெற்றாம் . அவை எட்டுத்தொகை நூல்கள் முதலாயினவும் , பிற்காலத்து வந்த பிள்ளைத் தமிழ் , கலம்பகம் போல்வனவுமாம் .

குளகச் செய்யுளாகப் பெயர்கொண்டு முடிதற்குப் பின்வரும் பாடல்களை எடுத்துக் காட்டுவர் .

'முன்புலகம் ஏழினையுந் தாயதுவு மூதுணர்வோர்
இன்புறக்கங் காநதியை யீன்றதுவும் - நன்பரதன்
கண்டிருப்ப வைகியதுங் கான்போ யதுமிரதம்
உண்டிருப்பா ருட்கொண் டதும் '

'வெந்த கரியதனை மீட்டுமக வாக்கியதும்
அந்தச் சிலையினைப்பெண் ணாக்கியதும் - செந்தமிழ்தேர்
நாவலன்பின் போந்ததுவும் நன்னீர்த் திருவரங்கக்
காவலவன் மாவலவன் கால்'