இதனை அப்படியே அப்படியே பின்பற்றிச் சிவத்திரு கொ.
இராமலிங்கத் தம்பிரான் அவர்களின் குறிப்புரையுடன் 1938-ல்
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்
பதிப்பித்தார்கள்.
|
இதனையடுத்துச் சொல்லணியியலை
மட்டும் சென்னை விவேகானந்தர் கல்லூரித் தமிழ்ப்
பேராசிரியர் புலவர் திரு.
C. ஜெகந்நாதாசாரியார் அவர்களின்
குறிப்புரையுடன், வை. மு. நரசிம்மன் அவர்கள்
1962-ல் பதிப்பித்தார்கள்.
|
இப்பதிப்புக்கள் அனைத்தையும்
வெளியிட்ட சான்றோர்கள் அனைவர்க்கும் என்னுடைய
நன்றியறிதலைப் பணிவுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். இவையனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக
வெளிவந்த நிலையில் அரிய பல செய்திகளையும், திருத்தங்களையும்
பெற்றிருப்பினும், மேலும் திருத்தமும் விளக்கமும்
பெறவேண்டியதாயிருந்தது. இதற்கு முன்பு சுப்பிரமணிய
தேசிகர் உரையுடன் வெளிவந்த பதிப்புக்கள் நான்கு ஆகும்.
ஆயினும்
அவை ஒவ்வொன்றிலும் அவர் உரை பல இடங்களில் மாறுபட்டுள்ளது. இதனை
எண்ணும்பொழுது சுப்பிரமணிய தேசிகரின் உண்மையான உரை
எதுவென அறிதற்கு இயலாதிருக்கின்றது. எனினும் சந்திரசேகர
கவிராஜ பண்டிதர் அவர்களின் பதிப்பையும், திரு. வை. மு.
கோபால கிருட்டிணமாச்சாரியார் அவர்களின் பதிப்பையும்
கருவியாகக்கொண்டு இப்பதிப்பைப்
பழைய வுரையுடன் பதிப்பித்துள்ளேன்.
|
இப்பதிப்பின் செம்மை:
|
இப்பதிப்பில்
பழைய வுரையின்றி இருந்த செய்யுட்களுக்கு உரையும்,
ஒவ்வொரு பாடலிலும் அணிக்கும் அப்பாடற்கும் உள்ள
பொருத்தமும் விளக்கவுரை என்ற பெயரால் எழுதிச்
சேர்த்துள்ளேன். நூற்பாக்கள், செய்யுட்கள் ஆகியவற்றில்
காணப்படும் பாடபேதங்களை அவ்வவ்விடத்து அடிக்குறிப்பாகக்
கீழே குறித்துள்ளேன். நூலைப் பற்றியும், நூலாசிரியர்,
உரையாசிரியர்களைப் பற்றியும் அறியத்தக்க இன்றியமையாத
செய்திகளை ஆராய்ச்சி முன்னுரையில் எழுதியுள்ளேன்.
மாணாக்கர்க்கும், ஆராய்ச்சியாளர்க்கும் இப்பதிப்புப்
பெரிதும் பயன்படுமென நம்புகின்றேன்.
|
இந்நூல் முழுமையும் முதற்பதிப்பாக 1967ல்
வெளிவந்தது. ஆனால் இதுபொழுது பல்கலைக்கழகப் பாடமாக
இருக்கும் பொதுவணியியல் பொருளணியியல் ஆகிய
இரண்டியல்கள் மட்டுமே வெளிவருகிறது. காரணம் இக்காலத்துள்ள
தாள் விலை, அச்சுக்கூலி முதலியன
மலையளவு உயர்ந்துள்ளமையேயாகும், முழுதுமாக
வெளிக்கொணர இயலாமைக்கு வருந்துகின்றேன். அறிஞருலகம்
பொறுத்தருளுமாக! |