முகவுரை

நூல்:--

தமிழிலுள்ள இலக்கணங்களில் தொன்மையும் முதன்மையும் வாய்ந்தது தொல்காப்பியம். அதற்குப் பின்னர் எழுந்த இலக்கணங்களில் வெளிவந்துள்ளவை நேமிநாதம், நன்னூல், வீரசோழியம், இலக்கணவிளக்கம், இலக்கணக்கொத்து முதலியன. இவைகளில் சிறந்ததாகக் கருதப்படுவது நன்னூலேயாம். அதனானே தொன்னூல் எனத் தொல்காப்பியமும் பின்னூல் என இந்நூலும் வழங்கப்படும்.

இந்நூலின் சிறப்புப்பாயிரத்தினால் நன்னூல் என்னும் பெயர் ஆசிரியராலேயே இந்நூலுக்கு இடப்பட்டது என்பது புலப்படும். 19 ஆம் சூத்திர உரையில் தன்மையாற் பெயர் பெற்ற நூலுக்கு மேற்கோளாக நன்னூல் காட்டப் பட்டிருத்தல் இதன் சிறப்பை நன்கு விளக்கும். இந்நூல் முதனூல் அன்று; வழிநூலாகவும் சார்புநூலாகவும் கொள்ளப்படும்.

நன்னூல் = நன்மை + நூல்; நன்மையாகிய நூல்; பண்புத்தொகை. நூல் சிறப்பாக இலக்கணத்தையே உணர்த்தும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கணங்களையும் தருக என நன்னூல் வகுக்கப்பட்டது என்று சிறப்புப்பாயிரம் கூறும். ஆனால் இப்போது வழக்கில் உள்ளன எழுத்தும் சொல்லும் என இரண்டு அதிகாரங்களே. ' பழையன கழிதலும் ' என்னும் சூத்திரத்தின் கருத்துரையில் " இந்நூலிற் சொன்ன ஐந்து அதிகாரத்திற்கும் சிங்கநோக்காய் நிற்பதொரு புறனடை உணர்த்துதல் நுதலிற்று. ........இவ்வாறே மேல் வரும் அதிகாரங்களிலும் கண்டுகொள்க. " என்பர் மயிலைநாதர் சிறப்புப்பாயிர உரை விளக்கத்தில் "பொருள் யாப்பு அணி என்னும் மூன்று அதிகாரங்களும் அக்காலத்து உள்ளன போலும்." என்பர் சங்கரநமச்சிவாயர். ஆகையால் மற்ற மூன்று அதிகாரங்களும் சங்கரநமச்சிவாயர் காலத்திலேயே இல்லை எனபது போதரும். வழங்கப் பெற்ற இரண்டு அதிகாரங்களைக் கொண்டு இந்நூல் சிற்றதிகாரம் எனப்பட்டது போலும்.

நூலாசிரியர் ;-

நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர். இவரின் பெயரினாலும், இவர் எழுத்ததிகாரத்திலும் சொல்லதிகாரத்திலும் தொடக்கத்தில் கூறும் கடவுள் வணக்கத்தாலும், உயிர்ப் பொருள்களை ஓரறிவுயிர் முதலாக ஐந்தறிவுயிர் என வகுத்திருக்கும் முறையினாலும் பவணந்தியார் சைனர் என்பதும் துறவி என்பதும் பெறப்படும். சிறப்புப்பாயிரத்தில், ''பவணந்தி என்னு நாமத்திருந்தவத் தோனே'' என வருவது இதனை வலியுறுத்தும்.

பவணந்தியாரின் ஞானபிதா சன்மதிமுனி என்பர்; ஆசிரியரை ஞானபிதா என வழங்குதல் மரபு; பவணந்தியாரின் தந்தை எனக் கொள்வாரும் உண்டு.

சனகையைச் சனநாதபுரம் என்பர் மயிலைநாதர். ''பவணந்தி மாமுனி நற்பதி '' தொண்டைமண்டலத்திலுள்ளதாகத் தொண்டைமண்டல சதகமும் ''பவணந்திமாமுனி'' தோன்றி வளர்ந்தது கொங்குமண்டலத்துக் குறும்பு நாட்டிலுள்ள சனகாபுரம் என்று கொங்கு மண்டல சதகமும் கூறுகின்றன. இச் சதகங்களின் கூற்றைக் கொண்டு தொண்டைமண்டலத்திலுள்ள சனகாபுரமே சனகை என்று சிலரும் கொங்குமண்டலத்தில் சீனாபுரம் என வழங்கும் ஊரே சனகை எனச் சிலரும் கருதுவர்.

பவணந்தியாரைக் கொண்டு நன்னூல் செய்வித்தவன் சீயகங்கன். இவனைக் குவளாலபுர பரமேசுவரன் கங்ககுலோத்தவன் சூரநாயகன் திருவேகம்பமுடையானான அமராபரணன் சீயகங்கன் எனச் சீகாளத்திக் கல்வெட்டு ஒன்று கூறும். குவளாலபுரம் இப்போது கோலார் எனப்படும். சீயகங்கன் திருக்காளத்தியுடையார்க்குத் திருவிளக்கு ஒன்று வைத்தவன் எனவும் மூன்றாம் குலோத்துங்க சோழமன்னன் கீழ்ச் சிற்றரசு புரிந்தவன் எனவும் தெரியவருகின்றன. மூன்றாம் குலோத்துங்கன் காலம் கி.பி. 1178-1216. ஆகவே பவணந்தியாரின் காலம் 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி எனக் கொள்ளுதல் வேண்டும்.

11-12-63

தி. க. இராசேசுவரன்