பதிப்புரை
நன்னூலுக்கு மயிலைநாதர் என்னும் சைனர் செய்த பழைய உரை ஒன்றுண்டு. அவருக்குப் பின்னர்ச்
சங்கர நமச்சிவாயர் எழுதிச் சிவஞான முனிவரால் செப்பஞ் செய்யப்பட்ட விருத்தி உரை
ஆறுமுக நாவலர் அவர்களால் முதன்முதல் வெளியிடப்பட்டது.
ஊற்றங்கால் ஆண்டிப் புலவர் உரை ஒன்றும் கூழங்கைத் தம்பிரான் உரை ஒன்றும் நன்னூலுக்கு
உண்டு என்பார்.அவை இதுகாறும் வெளிவரவில்லை.
சென்ற நூற்றாண்டில் விசாகப் பெருமாள் ஐயரும் இராமாநுச கவிராயரும் தனித்தனி உரை
செய்தார்கள்.விசாகப் பெருமாள் ஐயர் செய்தது காண்டிகை யுரை; இராமாநுச கவிராயர்
செய்த விருத்தி யுரை இராமாநுச காண்டிகை எனவும் பெயர் பெறும். இவைகள் இரண்டும் அச்சிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் எளிதில் தெரிந்துகொள்ளக்கூடியவாறு
அவ்வுரைகளில் அவர்களுக்கு விளக்கவேண்டுவனவற்றை மேலும் விளக்கியும், அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய
குறிப்புகள் பல கூட்டியும், பகுபத முடிபு சில காட்டியும் சொல்லிலக்கண சூசி சேர்த்தும்
, மாணவர்க்கு இன்றியமையாத அப்பியாசங்களைத் தொகுத்தும் நாவலர் பெருமான் புதிய
முறையில் காண்டிகை உரை ஒன்றெழுதித் தமிழகத்திற்கு அச்சிட்டு உதவினார்கள். இந்
நூலின் இருபத்திரெண்டாம் பதிப்பாகக் கி.பி. 1958 ல் வெளிவந்த பிரதிகள் முடிந்து
, இப்பொழுது இருபத்துமூன்றாம் பதிப்பு வெளிவருகிறது.
1-11-63
நன்னூலின்
இருபத்துமூன்றாம் பதிப்பிலே பதிப்புரையும் முன்னுரையும் சேர்க்கப்பட்டன. இப் பதிப்புப்
பிரதிகள் முற்றும் செலவாகி, இப்பொழுது இருபத்துநான்காம் பதிப்பு வெளிவருகிறது. 1-12-66
|