முகவுரை


‘‘ஆதியிற் றமிழ்நூ லகத்தியற் குணர்த்திய
மாதொரு பாகனை வழுத்துதும்
போதமெய்ஞ் ஞான நலம்பெறற் பொருட்டே.’’
‘‘சந்தனப் பொதியத் தடவரைச் செந்தமிழ்ப்
பரமா சாரியன் பதங்கள்
சிரமேற் கொள்ளுதுந் திகழ்தரற் பொருட்டே.’’
இமிழ்திரை வரைப்பி னமிழ்தமீ தென்னும்
தமிழெனு மளப்பருஞ் சலதியி னுளவாய்ப்
புலக்கணக் கருவியா மிலக்கணந் தெரிக்கும்
பன்னூ லுட்கிளர் நன்னூ லென்பது
நாவல மிகுத்த பாவலர் யாரும்
அருத்தியிற் கூட்டுணும் விருத்தி யுரையுடன்
ஆரிய மொழியுஞ் சீரிய தமிழும்
சமையத் தொடுநன் கமையத் தழைப்புறு
மடந்தொறும் புலவ ரிடந்தொறு நிலைஇப்
பின்னரவ் வுரையொடும் பேணுகாண் டிகையொடும்
அளவறு புலவரா லச்சிடப் பெறீஇப்
பழக வினிக்குங் கழகந் தோறும்
பல்லாண் டாகப் பயின்றிலங் குறுமே.
 

ஆயினும், நன்னூலுக்கு முதன் முதலிற் செய்யப்பெற்றதும், இலக்கண விளக்கவுரை, மேற்கூறிய விருத்தியுரை முதலியவற்றிற்கு ஆதாரமாகவுள்ளதுமான இந்த மயிலைநாதருரை சில நூற்றாண்டுகளாகப் படிப்பாரும் படிப்பிப்பாருமின்றிப் பெயர் வழக்கமுமற்றுக் கிடந்தமையாலும், சிலசில பகுதிகள் பிற்காலத்தவர்களால் மறுக்கப்பட்டிருப்பினும் தமிழ்நாட்டின் பழைய நிலைமையையும் அக்காலத்துப் புலவர்களுடைய கோட்பாடுகளையும் இவைபோன்ற அரிய பலவற்றையும் தெரிவித்தலாலும் இதனைப் பதிப்பிக்கத் துணிந்தேன்.

இவ்வுரையைப் பெரும்பாலும் உபயோகித்துக்கொண்டோர் இதன் பெருமையைத் தெரிவியாவிடினும் இதன் கருத்துக்களை மறுக்குமிடங்களுள் ஒன்றிலேனும் இவ்வுரையாசிரியர் பெயரை