உரையாசிரியர் வரலாறு xix

இந்நூலின் உரையாசிரியராகிய மயிலைநாதர், தொல்காப்பியம் அவிநயம் முதலிய இலக்கண நூல்களிலும் அவற்றின் உரைகளிலும் அக்காலத்து வழங்கிய அகத்தியசூத்திரங்களிலும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு முதலிய சங்க நூல்களிலும், ஐம்பெருங்காப்பியம் முதலிய இலக்கியங்களிலும் சைனசமய நூல்களிலும் பிறவற்றிலும் பயிற்சியுள்ளவர்.

மயிலைநாதர் என்னும் பெயரை உடைமையாலும் இவ்வுரையுள், சைனசமய
வழக்குக்களையும் அச்சமய நூற்செய்யுட்களையும் ஆங்காங்கு எடுத்துக்
காட்டியிருத்தலாலும், அருகதேவனைப் பல படப் பாராட்டியிருத்தலாலும் இவர்
சைனமதத்தினராக எண்ணப்படுகிறார்.

இப்பொழுது மயிலாப்பூர் என வழங்கும் மயிலையில் முன்பு இருந்ததான *
சினாலயத்தில் எழுந்தருளியிருந்த 22-ஆம் தீர்த்தங்கரரான நேமிநாதருடைய
திருநாமமாகிய மயிலைநாதரென்பதே அம்மதத்தினராகிய இவருக்கு இடப்பட்டதென்பர்.

‘‘கருங்கழல் வெண்குடைக் கார்நிகர் வண்கைத், திருந்திய செங்கோற் சீய கங்கன்’’
(சிறப்பு. அடி, 15 - 6) என்பதனுரையில் சீயகங்கனை இவர் மிகவும்
பாராட்டியிருத்தலையும், ‘‘பல்வகைத் தாதுவின்’’ என்பதனுரையில் ’’கங்க னகன்மார்பன்’’
என்னும் இனியவெண்பா ஒன்றை உதாரணமாகக் காட்டியிருத்தலையும், கங்கனென்னும்
பெயரைக் குடிப்பெயருக்கு உதாரணமாகக் கொடுத்திருத்தலையும் நோக்கும்போது
இந்நூலை ஆக்குவித்த சீயகங்கனாலோ அல்லது அவன் பரம்பரையில் விளங்கிய ஓர் உப


* மயிலையில் சினாலயம் இருந்தமையும் பிறவும், ‘‘மறமே முனிந்து மயிலா
புரிநின்று மன்னுயிர்கட், கறமே பொழியு மருட்கொண்டலே’’ (திருநூற். காப்பு), ‘‘தேனிமிர்
பைம்பொழிற் றிருமயி லாபுரி, நீனிறக் கடவு ணேமி நாதர்’’ (நே. பாயிரவுரை)
என்பவற்றாலும், மயிலாப்பூர்ப்பத்து, திருமயிலாபுரிப்பத்து திருமயிலாபுரிநேமிநாதர்பத்து
என்னும் சைனப் பதிகங்களாலும் தெரியவருகின்றன. இவ்வாலயம் சில நூற்றாண்டுகளுக்கு
முன்பு கடல் கொள்ளப்பட்டதென்றும் கடல்கொள்ளுமென்பதை முன்னதாக அறிந்த
சைனப் பெரியோர் இதிலிருந்த படிமை மூன்றையும் எடுத்துச் சென்று அவற்றுள்
நேமிநாதருடைய சிலா விக்கிரகத்தைச் சிற்றாமூரிலும், அவருடைய
தாம்பிரவிக்கிரகத்தையும் இயக்கிவிக்கிரகத்தையும் இளங்காட் டிலும் தாபித்தனரென்றுங்
கூறுவர்; இயக்கி வடிவைப் பெருமண்டூரில் தாபித்ததாகச் சொல்வதுமுண்டு.