சீயகங்கன் வரலாறு*

இந்நூலை ஆக்குவித்தோனாகிய சீயகங்கனென்பவன் கங்கர் குடியிற் பிறந்தவன்; மூன்றாங் குலோத்துங்கனுடைய ஆட்சிக்கு அடங்கி யொழுகிய ஓரரசன்; வீரத்திற் சிறந்தவன்; இவன் குலத்தினர், ‘‘நன்ன னேற்றை நறும்பூ ணத்தி, துன்னருங் கடுந் திறற் கங்கன் கட்டி.’’ (அகநா. 44), ‘‘பங்களர் கங்கர் பல்வேற் கட்டியர்’’ (சிலப். 25: 157) எனப் பழைய நூல்களிலும் ‘‘கங்கரிவரையகரு நாடரிவ ரைய’’ (திருவிளை. மெய்க் காட்டிட்ட, 30) எனப் பிற்காலத்து நூலிலும் கூறப்படுதல் காண்க.

‘‘துன்னருங் கடுந்திறற் கங்கன்’’ என இவன் முன்னோ னொருவனும், ‘அமராபரணன்’ என இவனும் விதந்து கூறப் பெற்றிருத்தலை நோக்குகையில், இக்குடியிற் பிறந்தாருடைய வீரச்சிறப்பு நன்கு புலனாகும்.

கங்கமென்பது நாட்டின் பெயராகவும் வழங்கும்.      

கங்கராச்சியத்தைத் தாபித்தவர் சைனாசாரியர்களில் ஒருவரான ஸிஹ்மநந்தி யாசாரியரென்றும், கங்க பரம்பரையினரிற் பலர் சைன மதத்தைத் தழுவி யொழுகினரென்றுஞ் சொல்லுவதுண்டு.

அமராபரணன், ஸ்ரீமத் குவளாலபுரபரமேசுவரன், கங்க குலோற்பவனென்று சீயகங்கன் தன் மெய்க் கீர்த்திகளிற் பாராட்டப் பெறுவன். மூன்றாங் குலோத்துங்க சோழ தேவனுடைய ஆட்சியின் 27-ஆம் ஆண்டான கி. பி. 1205-ல் வெட்டப்பெற்ற சாசனமொன்றால் இவனுக்குத் திருவேகம்ப முடையானென்று ஒரு பெயருண்டென்றுந் தெரிகின்றது.

குவளாலபுர பரமேசுவரனென்று கூறப்படுதலால் இவனுடைய இராசதானி ( குவளாலபுரமென்று தெரிகின்றது. வடமொழி நூல்களில் இது கோலாகலபுரமென்று கூறப்படுகின்றதென்பர்.

இந்நூலாசிரியர் உரையாசிரியர் வரலாறுகளால் இவனுடைய பிறவரலாறுகள் சில புலப்படும்.


* இந்நூற் சிறப்புப்பாயிரத்தையும், ம-ள-ள-ஸ்ரீ டி.ஏ. கோபிநாத ராயரவர்கள் எம்.ஏ. செந்தமிழ், நான்காந் தொகுதியில் எழுதிய ‘நன்னூல்’ என்னும் ஆராய்ச்சிக் குறிப்பு முதலியவற்றையும் கருவியாகக்கொண்டு இவ்வரலாறு எழுதப் பெற்றது.