இந்நூலின் ஆசிரியர் சமண சமயத்தவர்.
அஃது இந் நூலின் முதலிற் காட்டப்பட்ட சிறப்புப்பாயிரத்தான்
இனிது விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பெயர் முதலியவற்றைச்
சிறப்புப்பாயிரத்தானும் அதன் உரையானும் அறிக.
"பூமிசை நடந்த
வாமனை வாழ்த்தி வடமலைச் சென்னி
ஈண்டிய கடவுளர் வேண்டலிற் போந்து
குடங்கையின் அலைகடல் அடக்கி ஈண்டிய
தென்மலை இருந்த இருந்தவன் இயற்றமிழ்
கெழீஇய அகப்பொருள் தழீஇ நோக்கி
வழிகொடுத்து நிறீஇ வகுத்துப் புலப்படுத்தாங்
கிகப்பில் அகப்பொருள் விளக்கம் பகர்ந்தனன்
எழுதிச்
செந்தமிழ் நாட்டு மைந்தன் குரிசில்
பாற்கடல் பலபுகழ் பரப்பிய
நாற்கவி ராச நம்பியென் பவனே"
என்பதும் இந்நூலின் சிறப்புப்
பாயிரமே என்பதும், இதுவே இந்நூலின் பழைய சிறப்புப்பாயிரம்
என்பதும் அ. கு. அவர்களும், த. க. அவர்களும் எழுதி வெளியிட்ட
புத்துரையினால் விளங்குகின்றன.
இந்நூலில் இன்றியமையாது விளக்கவேண்டிய
சிலவற்றிற்குக் குறிப்புரை எழுதி அவ்வப்பக்கங்களில்
அடிக்குறிப்பாகச் சேர்த்திருக்கின்றேன். இந்நூலின்
சூத்திரங்களுள் ஒவ்வொன்றனுக்கும் அவ்வச் சூத்திரத்தின்
கருத்துரையை நோக்கியும் அ. கு. அவர்களும், த. க. அவர்களும் எழுதிய புத்துரையை நோக்கியும் தலைக்குறிப்பு எழுதி அமைத்திருக்கின்றேன்.
இலக்கண இலக்கிய மேற்கோள்களின் இடங்களுள்
பலவற்றை மதுரைத் தமிழ்ச்சங்கத்தார்
வெளியிட்ட பிரதியின் உதவியைக் கொண்டும் சிலவற்றை
நானே நோக்கியும் அடிக்குறிப்பில்
விளக்கியிருக்கின்றேன். அகப்பாட்டின் உறுப்புக்களுள்
ஒன்றாகிய துறைக்கும், அகப்புறப் பெருந்திணையாகிய
மடலேறுதல் முதலிய எட்டினுக்கும் விளக்கங்களும், இந்நூலின்
கிளவித்தொகை வகைகளின் பொருளும் எழுதிப் பின்
இணைப்பிற் சேர்த்திருக்கின்றேன்.
இத் தமிழ்த்தொண்டை எனக்களித்த
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு என்
அன்போடு கூடிய நன்றியைச் செலுத்துகின்றேன்.
எனது இம் முயற்சி இடையூறு இன்றி இனிது முடியத்
திருவருள் புரிந்த திருமகள்நாதன் திருவடித் தாமரைகளை
வழுத்தி வாழ்த்துகின்றேன்.
இங்ஙனம்,
கா. ர. கோ.
|