க. கனகசுந்தரம் பிள்ளை அவர்களாலும்
எழுப்பெற்ற விளக்கமாகிய புத்துரையை உடையது. இதில்
இந்நூல் சூத்திரங்களுள் ஒவ்வொன்றற்கும் தலைக்குறிப்பு
அமைக்கப்பட்டிருக்கின்றது. பெரும்பான்மையான
கிளவிகளுக்கு உதாரணமாகத் தஞ்சைவாணன் கோவைச் செய்யுட்களும்,
சில கிளவிகளுக்குத் தஞ்சைவாணன் கோவைச் செய்யுளுடன்
பிறநூற் செய்யுட்களும் காட்டப்பட்டிருக்கின்றன.
இப்பொழுது நான் பதிப்பிக்க எடுத்துக்கொண்ட
பழைய உரையோடு கூடிய இந் நூலின் மூலத்தின் பாடத்தையும்
உரையின் பாடத்தையும் பழைய உரையினை உடைய இரண்டு
பிரதிகளையும் நோக்கி அவற்றில் உள்ளபடி அமைத்திருக்கின்றேன்.
அவற்றிற் காணப்பட்ட தக்க பாடவேறுபாடுகளை மட்டும்
மற்ற இரு பிரதிகளின் உதவி கொண்டும், கிளவி முதலியவற்றை
நோக்கியும் அமைத்துக்கொண்டேன்.
இப் பழைய உரையானது கருத்துரையையும்,
பொழிப்புரையையும், விசேடவுரையையும் உடையது. இதிற்
சில இடங்களில் தொல்காப்பியத்தினின்றும்
இறையனார் அகப்பொருளினின்றும் வேறு சில நூல்களினின்றும்
இலக்கண மேற்கோட் சூத்திரங்கள் காட்டப்பட்டிருக்கின்றன.
எல்லாக் கிளவிகளுக்குந் தஞ்சை வாணன் கோவைச் செய்யுட்களும்,
பல கிளவிகளுக்குத் தஞ்சை வாணன் கோவைச் செய்யுளோடு
ஐங்குறு நூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, திணைமொழி
ஐம்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை
நூற்றைம்பது முதலிய சங்கச் செய்யுட்களும் வேறு சில
செய்யுட்களும் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றன.
இவ்வுரையாசிரியர் இன்னார் என்பது விளங்கவில்லை.
மேற்கோள்களுள், இடம் விளங்கியவை பல; இடம்
விளங்காதவை மிகச் சிலவே. இவற்றுள் இடம்
விளங்கியவை அவ்வந் நூல்களில் உள்ள அந்த அந்தச்
செய்யுளோடு ஒப்பு நோக்கியும், இடம்
விளங்காதவை முன் பிரதிகளில் உள்ள படியும் பதிப்பிக்கப்பெற்றன.
இப் பதிப்புக்கு முன் குறித்த
நான்கு பிரதிகளும் உதவியாயினவாயினும், மதுரைத்
தமிழ்ச்சங்கத்தாரால் வெளியிடப் பெற்ற பிரதியும்,
அ. கு. அவர்களும், த. க. அவர்களும் எழுதிய புத்துரையையுடைய
பிரதியும் பேருதவி புரிந்தனவாயின. ஆதலின், அவற்றை
வெளியிட்ட அறிஞர்களுக்கு எனது அன்போடு கூடிய நன்றியைச்
செலுத்துகின்றேன். மற்ற இரண்டு பிரதிகளை
வெளியிட்டவர்களுக்கும் எனது நன்றியைச்
செலுத்துகின்றேன்.
இந் நூலின்கண் கிளவிகள், தொகை
வகை விரி என்னும் யாப்பினாற் கூறப்பெற்றிருக்கின்றன.
|