முன்னுரை

உலகத்தில் மக்களின் அறிவையும், மனத்தையும் நல்வழிப்படுத்தி நல்லியல்புகளையும் நாகரிகத்தையும் வளர்த்து, மக்களுக்கு மேன்மையை அளிப்பது சான்றோர்களால் இயற்றப்பட்ட கலைகளின் அறிவேயாகும். அதனை ஒப்ப மக்களுக்கு நன்மையைப், பயக்கவல்லது பிறிதொன்றுமின்று. அத்தகைய கலைகள் நன்கமைந்த மொழிகளுள், தமிழ்மொழியானது மிகப்பழைமையும், சொற்பொருள் அமைதியும், இனிமையும் வாய்ந்தது என்பது பிற நாட்டறிஞர் பலரும், இந்நாட்டறிஞர் பலரும் ஆய்ந்தறிந்து உவப்புடன் வெளியிட்டுள்ள உண்மையாகும்.

இத் தன்மையதாகிய தமிழ்மொழி பண்டைக்காலத்து இயல், இசை, நாடகம் என்னும் முத்திறத்தினதாய், அம் முத்திறத்துள், ஒவ்வொரு திறத்திற்கும் பல இலக்கிய இலக்கணங்களை உடையதாய் விளங்கியது. அம் மூவகையினுள், இசையும், நாடகமுமாகிய இரண்டன் இலக்கிய இலக்கணங்கள் மறைந்துவிட்டன. இயற்றமிழின் இலக்கிய இலக்கணங்களே இப்பொழுது இருக்கின்றன.

இயற்றமிழின் இலக்கணமானது எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்து பகுதியினை உடையதாகும். இவற்றுள், எழுத்து, சொல், யாப்பு, அணி என்னும் நான்கு இலக்கணங்கள் பிறமொழிகளிலும் உள. தமிழ்மொழியில் மாத்திரமே அந் நான்கனோடு பொருளுக்கும் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கின்றது.

இவ் வைந்திலக்கணங்களையும் ஒருங்கு சேர்த்தும், தனித்தனியாகவும், பண்டைச் சான்றோர் பலர் பல இலக்கண நூல்களை இயற்றினர். அவற்றுட் பல மறைந்துவிட்டன. சிலவற்றின் சில சூத்திரங்கள் உரையாசிரியர்களால் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக்கின்றன. பண்டை இலக்கண நூல்களுள், சிறிதும் இறவாமல் முற்றுங் கிடைத்திருப்பது தொல்காப்பியம் ஒன்றே. இலக்கண நூல்களுள் முதன்மையான நூலாகக் கொள்ளப்படுவதும் இந் நூலேயாகும். ஆயினும், இஃது அறிவிற் சிறந்தாரான் அன்றி, ஏனையோரான் எளிதில் கற்றறிதல் கூடாததா யிருத்தலின், பிற்காலத்து அறிஞர்கள் இவ் வைந்திலக்கணங்களுக்கும் யாவரும் கற்றுணர்தற்கு உரிய வகையில் வெவ்வேறு நூல்களை இயற்றினார்கள். அவற்றுள், எழுத்து, சொல் என்னும் இவ்விரண்டிலக்கணங்களுக்கும் நன்னூலையும், யாப்பிலக்கணத்திற்கு யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகைகளையும், அணி இலக்கணத்திற்குத் தண்டியலங்காரத்தையும், புறப்பொருள் இலக்கணத்திற்கும் அகப்பொருள் இலக்கணத்திற்கும் முறையே