iii

தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் நுண்ணிய பல கருத்துக்களை உரையாசிரியர்களின் உரை நுட்பத்தோடு ஆய்ந்து, வடமொழி மரபுகளையும் ஏற்ற பெற்றிகொண்டு, இலக்கணக்கொத்து, பிரயோக விவேகம் என்ற அரிய நூல்கள் பதினேழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெளிவந்தன. நன்னூல் வெளி வந்தபின்,

“முன்னோர் ஒழியப் பின்னோர் தம்முள்
நன்னூ லார்தமக்கு எந்நூ லாரும்
இணையோ என்னும் துணிவே”

மன்னிய தமிழ்மக்கள், தொல்காப்பியத்தின் பரப்பு மிகுதி நோக்கி அதனைக் கற்றற்கண் ஊக்கமிலராய், நன்னூலினையே அதற்கமைந்த மயிலைநாதர் உரையுடன் சுவைத்துக் கற்றகாலம் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.

இக்காலத்தில் தோன்றிய வைத்தியநாத தேசிகர் தொல்காப்பியத்தை அதன் உரைகளோடு கசடறக் கற்றுப் பின்னூல்களிலும் துரைபோயவராய்த் தம் மாணாக்கருக்குப்பாடம் பயிற்றி வந்த ஞான்று, காலத்தை ஒட்டித்தொல்காப்பியத்தோடு பெரும்பாலும் ஒத்ததாகியதோர் ஐந்திலக்கண நூலினை யாத்து அதற்குத் தாமே உரையும் வரைதல் வேண்டும் என்ற எண்ணங் கொண்டார்;

“எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்”

ஆதலின் தாம் எண்ணிய தமிழ்ப்பணிக்கண் அயராது உஞற்றி, ‘இலக்கண விளக்கம்’ என்ற விழுமிய நூலை உரையுடன் இயற்றி வெளியிட்டார்.