iv அந்நூல் ‘குட்டித் தொல்காப்பியம்’ என்ற சிறப்புப் பெயரோடு மக்களிடையே பெரிதும் பயிலப்படவே, நன்னூலின் பெருமை மங்குவதாயிற்று. அதுகண்டு பொறாத சான்றோர் சிலருடைய வேண்டுகோளினால், நன்னூல் சங்கர நமசிவாயர் உரையும், அதனைப் புதுக்கிய சிவஞான முனிவர் உரையும், இலக்கண விளக்கச் சூறாவளியும் பதினெட்டாம் நூற்றாண்டில் வெளிவந்தன அவற்றால் இலக்கண விளக்கம் கற்பார் தொகை ஓரளவு குறைவதாயிற்று. பின், பத்தொன்பதாம் நூற்றாண்டிறுதியில் இலக்கண விளக்கத்தைத் திருவாளர் தாமோதரம் பிள்ளையவர்கள் அச்சிட்டு வழங்கவே, தமிழகச் சான்றோர் அனைவரும் அதனைப் பெரும் பேறாகக் கொண்டு பயில்வாராயினர். இடையே, முத்துவீரஉபாத்தியாயர் வரைந்த முத்து வீரியம், ஐந்திலக்கணமும் தொகுத்துக் கூறும் சிறுநூலாய் எளிமை விரும்புவாருக்கு ஏற்றதாக வெளிவந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் இயற்றி வெளியிட்ட தொன்னூல் விளக்கம் மக்களிடையே யாது காரணம் பற்றியோ பரவும் வாய்ப்பற்றதாகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலக்கணம் கற்றலின்கண் மக்கள் காட்டிய ஊக்கம் இடைக்காலத்தில் சாம்பியது. ‘மொழிக்கு இலக்கணம் தேவையா?’ என்றெல்லாம் ஆராயப்புக்கு, ‘இலக்கணமே மொழிக்கு வேண்டா’ என்று பேசும் புலவரும் தமிழகத்தில் சிறப்பிக்கப்படுவாராயினர். ஆயினும், பழைய சான்றோர் தாம் அரிதிற் கண்டுரைத்த இலக்கண நுணுக்கங்களைக் கற்றுச் சுவைத்தல் வேண்டும் என்ற வேணவாவுடைய சான்றோர் இன்றும் உளர். அவர்களுக்கு அச்சிட்ட ‘இலக்கண விளக்கப்படி’ இப்பொழுது கிடைப்பது அரிதாக உள்ளது. |