v “தஞ்சை சரபோசிமன்னர் அமைத்த சரசுவதிமகால் நூல் நிலையத்திலுள்ள 949 ஆம் எண்ணுடைய கையெழுத்துப் படியினையும், சென்னை அடையாறு ஒரியண்டல் நூல் நிலையத்துப் படியினையும் அச்சிடப்பட்ட நூலோடு ஒப்பு நோக்கி இலக்கண விளக்கத்தைப் பதிப்பித்தல் வேண்டும்” என்று சரசுவதிமகால் கௌரவக் காரியதரிசி உயர்திருவாளர் முதுபெரும்புலவர் நீ. கந்தசாமிபிள்ளையவர்கள் உள்ளங்கொண்டார். அவர் விரும்பியாங்கு இப்பொழுது இலக்கண விளக்கம் அச்சிடப்படுகிறது. இப்பதிப்பில் நூலமைப்பு, ஒவ்வொரு நூற்பாவின் உரைக்கும் ஏற்ற விளக்கம், உரை மேற்கோள் பற்றிய விளக்கம்,இலக்கண விளக்கக் சூறாவளிச்செய்தி, ஏனைய இலக்கண நூல்களின் ஒத்த நூற்பாக்களின் தொகுப்பு, அருஞ்சொல் விளக்கம் முதலிய பிறசேர்க்கை ஆகியவை நூலாசிரியர் தம் வரலாற்றோடு இடம் பெற்றுள்ளன. தொடக்கத்தில், இலக்கண விளக்கத்தின் எழுத்ததிகாரம் வெளி வருகின்றது. இப்பணியின்கண் என்னை ஈடுபடுத்திய தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தாருக்கு என் பணிவுகலந்த நன்றியைத் தெரிவிக்கும் கடப்பாட்டினேன். இப்பணிக்குப் பல்லாற்றானும் எனக்கு உதவிய என்னிடம் தமிழ் பயின்ற என் உடன்பிறந்தவராகிய திரு.வித்துவான் கங்காதரன்,M.A., செல்வி வித்துவான் கமலாம்பாள் ஆகியோருக்கு என் ஆசிகள். “குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்கற்றறிந்த மாந்தர் கடன்.” தி. வே. கோபாலையர் |