xi

“ஒட்டக்கூத் தன்கவியும் ஓங்குகம் பன்கவியும்
 பட்டப் பகல்விளக்காய்ப் பட்டவே-தெட்டபுகழ்
 வீசுங் கவிவீர ராகவனாம் வேளாளன்
 பேசுங் கவிகேட்ட பின்”

என்று பாராட்டப்பட்ட பெருந்தகையார் ஆவர். அவரே வைத்தியநாதருடைய கவி வன்மையையும் ஆழ்ந்த புலமையையும் மனங்கொண்டு,

“ஐம்பதின்மர் சங்கத்தார் ஆகிவிடா ரோநாற்பத்து
 ஒன்பதின்மர் என்றே உரைப்பாரோ-இம்பர்புகழ்
 வன்மீக நாதனருள் வைத்தியநா தன்புடவி
 தன்மீதந் நாள்சரித்தக் கால்”

என்று போற்றிப் புகழ்ந்தார் என்பதனை உட்கொண்டால் வைத்தியநாதருடைய பெருஞ்சிறப்பு நன்கு போதரும்.

திண்டிவனத்தை யடுத்த மயிலமலைமீது வீற்றிருக்கும் முருகப்பெருமான்மீது மயிலம்பிள்ளைத் தமிழ் என்ற அரிய பிரபந்தமும், அத்திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவஞானபாலய சுவாமிகள் மீது எட்டுப் பிரிவுகளையும் அவற்றுள் 736 தாழிசைகளையும் கொண்ட பாசவதைப் பரணி என்ற சுவைமிக்க பரணி நூலும், நூறுபாடல்களைக்கொண்ட திருவாரூப் பன்மணிமாலையும், இருபத்தேழு  சருக்கங்களையும் அவற்றுள் 1013 திருவிருத்தங்களையும் கொண்ட நல்லூர்ப் புராணம், ஏறத்தாழ நானூறு பாடல்கள் கொண்ட திருவாட்போக்கிப்புராணம், கமலாலய அம்மை பிள்ளைத்தமிழ் என்பனவும் இவரால் பாடப்பட்ட பிரபந்தங்கள் என்பது அறியப் படுகிறது. மெய்ஞ்ஞான விளக்கம் என்னும் தமிழ்ப் பிரபோத சந்திரோதயம் மாதைத் திருவேங்கடநாதரால் பாடப்பட்டது என்ப. இந்நூலாசிரியரே அதனையும் பாடினார் என்ற கருத்தும் நிலவுகிறது.