எழுத்தியல்

முதல் ஓத்தாகிய எழுத்தியலை, தனித்தும் மொழிப் படுத்தும் ஒலிக்கப்படும் எழுத்துக்கள் பற்றிய ‘எண்-பெயர்-முறை-பிறப்பு-உருவம்-அளவு-முதல்நிலை-இறுதிநிலை-இடைநிலை மெய்ம்மயக்கம்- போலி’ என்ற பத்தனையும் விரித்துக் கூறுவதாக அமைத்துள்ளார்.

அதன் தொடக்கத்தில் எழுத்தியலில் கூறப்புக்க இப்பத்துச் செய்திகளையும் நன்னூலார் போலவே தொகுத்துச் சுட்டி, அந்நூற்பா உரையில், எழுத்தினை எட்டுவகையானும் எட்டிறந்த பலவகையானும் விளக்கப் புகும் நச்சினார்க்கினியர் உரைத்தவற்றில் ஏற்பன கொள்கிறார்.

நன்னூலார் சமணர் ஆதலின், அவருக்கு மாயை உடன்பாடன்று. ஆகவே, ‘ஐம்பெரும் பூதங்களின்’ தொடர்பால் உலகத்துப் பொருள்கள் யாவும் தோன்றும் என்ற தோட்பாட்டினர் அவர். எனவே, அவர் சிதலது நீர்வாய்ச் சிறுதுகளால் பெரும்புற்றுரு வமைந்த பெற்றித்தென்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்தணுவால் இம்பரிற் சமைவது யாவரும் அவர் கருத்துப்பற்றி யறிதலின், அநாதி காரணமாகிய மாயையினை விடுத்து, ஆதிகாரணமாகிய ஒலி யணுக்களையே எழுத்தின் தோற்றத்துக்குக் காரணமாகக் கூறியுள்ளார். ஆனால் சைவசமயத்துச் சான்றோராகிய நம் ஆசிரியர், இறைவன் மாயையிலிருந்து தோன்றிய நாதத்தின் காரியமே ஒலி என்பதைத் தம் கருத்துப்பற்றி வலியுறுத்துகிறார்.