xvi

முதலெழுத்து முப்பது என்பதில், பெரும்பாலும் நூலாசிரியர்களிடையே கருத்து வேற்றுமையில்லை. ஆயினும், தொல்காப்பியனார் சார்பெழுத்து மூன்று என்றே கூறியிருப்பினும், நன்னூலார் சார்பெழுத்துப் பத்து என்று குறிப்பிட்டுள்ளார். நம் ஆசிரியர், தொல்காப்பியனார் சார்பெழுத்து என்று பெயரிடாது போயினும், அவரால் உடன்படப்பட்டனவாகிய ‘உயிர் மெய், உயிரளபு, ஒற்றளபு, ஐகாரக்குறுக்கம், ஒளகாரக் குறுக்கம், மகரக்குறுக்கம்’ ஆகியவற்றையும் நன்னூலாரோடு ஒருபுடை ஒத்துச் சார்பெழுத்தாகக்கொண்டு, நன்னூலார் சுட்டிய ஆய்தக் குறுக்கம் தொல்காப்பியனாருக்கு உடன்பாடன்று ஆதலின் அதனைமாத்திரம் விலக்கி, சார்பெழுத்தின் வகை ஒன்பது என்கிறார். ஓர் எழுத்தினையே அது வருகின்ற இடம் பலவாதலை நோக்கிப் பலவாகக் கணக்கிட்டுச் சார்பெழுத்தின் விரி முற்நூற்றறுபத்தொன்பது என்று குறிப்பிடும் நன்னூலார் கருத்து, இலக்கண மரபுக்கு ஏற்றதன்று என்னும் தம் கருத்தினை வெளிப்படையாகச் சுட்டுகிறார்.

“தன்னை உணர்த்தின் எழுத்தாம் பிறபொருளைச்
 சுட்டுதற் கண்ணேயாம் சொல்”

என்பது இலக்கணமாதலின், சுட்டுப்பொருள் வினாப் பொருள் தரும் நிலையில் ‘அகரம் எகரம்’ முதலியன இடைச் சொல்லேயாம் என்பதனை உட்கொண்டு அவற்றைச் சுட்டெழுத்து வினாவெழுத்து எனப் பெயரிட்டழையாது, வாளா சுட்டுவினா என்றே குறிப்பிடுகிறார். தனியேவரும் சுட்டும் முதற்கண்வரும் சுட்டுள் அடங்கும் என்ற கருத்தான், “அ இ உ முதல்வரின் சுட்டே” எனவே நூற்பா அமைக்கிறார்.

உயிர்வகைகளையடுத்து மெய்யின்வகைகளை நிரல் படக்கூறி, ஒவ்வொன்றினையும் பெயரிடுவதற்குரிய விரிவான காரணங்களையும் நவில்கிறார்.