பதவியல்

நன்னூலை உட்கொண்டு எழுத்துப்படலத்தை ஐந்து இயல்களாகப் பகுத்துணர்த்தும் இவ்வாசிரியர், நன்னூலார் போலவே அதன் இரண்டாம் இயலுக்குப் பதவியல் என்றே பெயரிட்டுள்ளார். இவ்வியலின் எடுத்துக்கோடற்கண் ஈரெழுத்து ஒரு மொழியை இணைமொழி எனப் பெயரிட்டு, ‘எழுத்தே தனித்தும் இணைந்தும் தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம்’ எனக்கூறி, பின் அது பகாப்பதம் பகுபதம் என்ற இருபாலதாதலை விளக்குகிறார். எழுத்து மொழியாதல்பற்றி யமைந்த செய்திகள் பலவற்றையும் உரையில் எழுதி, ஒற்றினையும் குற்றியலுகரத்தையும் கணக்கிட்டே மொழியிடைப்பட்ட எழுத்துக்களை எண்ணுதல் வேண்டும் என்ற கருத்தை நிறுவுகிறார். தொல்காப்பியனார் கருத்துப்படி

“நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி
 குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே”

என்ற நூற்பா அமைத்து, நச்சினார்க்கினியர் தரும் விளக்கங்களையும் நவில்கிறார்.

‘ பகாஅப் பதம்’ என்ற தலைப்பில் அமைந்த நூற்பா உரையில், பகுபதம் போலக் காட்சியளிக்கும் சாத்தன் கொற்றன் போல்வனவும், ஒரு பிண்டமாகக் கொண்டு உணரப்படும் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரன் சேரல் இரும்பொறை போல்வனவும் பகாப்பதமே என்பதை நிறுவி, ‘அஃறிணை விரவுப் பெயர்’ என்பது தன்னொடு இயைபின்மை நீக்கிய விசேடணமாய் விரவுப் பெயரின் உண்மைத் தன்மைத் தோற்றம் கூறுகிறது என்ற நச்சினார்க்கினியர் கருத்தை உட்கொண்டு அதனை விளக்குகிறார். பகுபதம் வினை, வினைப்