xxiii

பெயர் என்ற இரண்டு பகுதியது ஆதலை விளக்கிச் சுட்டுகிறார், பகுபத உறுப்புக்கள் ஆறனையும் நூற்பாவில் சுட்டி, உரையில் அவற்றைத் தக்காங்கு விளக்குகிறார். ‘நடவா’ முதலியன ஏவல் வினைகள் அல்ல, தெரிநிலை வினைப் பகுதிகளாகிய முதல்நிலைத் தொழிற்பெயரே என்பதைத் தக்க விளக்கங்களோடு நிறுவுகிறார். ‘நடவா’ முதலியவற்றோடு ‘வி பி’ என்பன ஏற்ற பெற்றிவரின் ஏவல் வினைப்பகுதியாகும் என்பதை விளக்கி, நடவா என்பன தனித்து ஏவல்வினை ஆகா என்பதையும் இயைபுபற்றிச் சுட்டி, ஈரேவல் என்பது பொருந்தா வழக்கு என்ற கருத்தைச் சொல்லதிகாரத்தில் நச்சினார்க்கினியர் சொற்றவற்றை  உட்கொண்டு சாற்றுகிறார்.

பொருள் ஆதி ஆறும் அடிப்படையாகக் குறிப்பு வினை தோன்றுமாற்றை விளக்கியபின், சொல்லதிகாரத்தில் நச்சினார்க்கினியர் குறிப்பிட்ட கருத்துக்களை உட்கொண்டு, ‘செம்மை சிறுமை’ முதலியன பண்பிற் பகாநிலைப்பதம்  எனவும், அவை விகுதி முதலியவற்றோடு சேர்வுழி ‘ஈறு போதல்’ முதலிய விகாரங்கள் நிகழும் எனவும் கூறும் நன்னூலார் கருத்து ஏற்புடைத்தன்று என்பதை நிறுவுகிறார்.

பின், வினைவிகுதிகளைச் சுருங்கச் சொல்லல் என்ற வனப்புத்தோன்ற நூற்பா வாயிலாக வெளியிட்டு, நன்னூலார் போலப் புதியன புகுந்தவற்றையும் மறாது தழுவி, சொல்லதிகாரத்தில் நச்சினார்க்கினியர் குறிப்பிட்ட அரிய வியங்கோள் விகுதிகளையும் நூற்பாவில் அமைத்து, அவற்றைத் தக்க எடுத்துக்காட்டுக்கள் கொண்டு உரையில் விளக்குகிறார்.

நன்னூலார் இறந்தகால இடைநிலை ‘த ற ட  ஒற்று இன்னே’ என்று கூறியிருக்கவும், இவர் புக்கான், நக்கான் முதலிய வினைகளில் ககரமும் இறந்தகாலம்