xxxiii குறியதன்கீழ் வரும் ஆகாரஈற்றுச்சொற் செய்தியை நன்னூல் நூற்பாக்கொண்டு தெரிவிக்கிறார். இகர ஈற்றில் அன்றி இன்றி என்னும் வினையெச்சத்திரிபும், புணர்ச்சியும், சுவைப்புளியின் புணர்ச்சியும் இடம் பெறுகின்றன. ஈகார ஈற்றுள் பீ, மீ என்பனவற்றின் புணர்ச்சியே சுட்டப்படுகிறது. நீ என்பது விரவுப்பெயர் ஆதலின், அது ‘பொதுப்பெயர் உணர்திணைப் பெயர்கள்’ என்புழி அடங்குதலான், அதனை ஈண்டுக் குறிப்பிடவில்லை. பின், ‘ஆன்முன் வரூஉம் ஈகார பகரம்’ பற்றிக் கூறுகிறார். உகர ஈற்றில் சுட்டுக்பெயர், ஒரு இரு என்ற விதி உகர ஈற்று எண்ணுப் பெயர் என்பனவற்றின் புணர்ச்சிகளை விரித்துக் கூறும் ஆசிரியர், அது என்பது வருமொழியாகிய அன்று முதலியவற்றொடு புணரும் முறையை விளக்குகிறார். உரைக்கண், உதுக்காண், எழு முதலிய சொற்களின் புணர்ச்சியும் நச்சினார்க்கினியத்தை ஒட்டி விளக்கப்பெறுகின்றன. ஊகார ஈற்றுள் பூ என்ற பெயர் புணருமாற்றை நவில்கிறார். எகர ஈற்றில் தெளிவின் ஏ அளபெடுத்தல் இயம்பப் பெறுகிறது. இயைபுபற்றி ஒகர ஈறும் உடன்கொள்ளப்படுகிறது. சிறப்பின் ஓ அளபெடுப்பதும் சுட்டப்படுகிறது. அளபெடைக்கண் வரும் எகர ஒகரங்கள் இயல்பாகுமாறும் வினைக்கண் வரும் எகர ஒகர அளபெடையெழுத்துக்கள் மிகுமாறும் தொல்காப்பியனார் கருத்தை ஒட்டி விளக்கப்படுகின்றன. பின், இடைச்சொற்களாகிய ஏவும் ஓவும்இயல்பாகப் புணருமாறு குறிப்பிடப்படுகிறது. |