xxxiv

குற்றியலுகர ஈற்றுள் வன்தொடர் அல்லன மிகா என்பதனையும், வன்தொடர் ஒன்றுமட்டும் மிகும் என்பதனையும், ஏனைய தொடர்களின்புணர்ச்சி விதிகளையும், குற்றியலுகரம் ஐகார ஈறாகத்திரிதலும் உண்டு என்பதனையும், திசைப்பெயர்களின் புணர்ச்சி விதிகளையும் விளக்கிக்கூறும் இவ்வாசிரியர் தொல்காப்பிய உரைச் செய்திகள் பலவற்றையும் இடையிடையே தெரிவிக்கிறார்.

என்ணுப்பெயர்ப்புணர்ச்சி நூற்பாக்களைப் பெரும் பான்மையும் நன்னூலை ஒட்டியே யாத்துள்ளார் எனினும், தொல்காப்பிய உரைச் செய்திகள் பலவற்றையும் ஆட்டாண்டு இயைபுபடுத்தி எஞ்சாது குறிப்பிடும் இவர், தொண்ணூறு தொள்ளாயிரம் என்பனபற்றிய நன்னூல் விதிகள் பொருந்தா என்பதனை விளக்கி, முன்னூலை ஒட்டியே சுருக்கமாக அமைத்துள்ளார்.

இவ்வியலின் இறுதி நூற்பாவில் மூன்றன் உருபுகளாகிய ஒடுவும் ஓடுவும் ஆறன் உருபுகளாகிய அதுவும் ஆதுவும் இயல்பாகப்புணருமாற்றைச் சுட்டி உயிரீற்றுப் புணர்ச்சியினை முடிக்கும் இவ்வாசிரியர், குற்றியலுகரம் உயிரீறு ஆயினும் மெய்போல உயிர்ஏற இடங்கொடுத்தலின், குற்றியலுகரம் பற்றிய புணர்ச்சி விதிகளை மெய்யீற்றுப் புணரியலைச்சார, இவ்வுயிரீற்றுப் புணரியலின் இறுதிக்கண்வைத்தலே ஏற்றது எனக்கருதுகின்றார் போலும்.