உருபு புணரியல்

முதற் நூற்பா உரையில், பொருட்புணர்ச்சிக்கண் கூறப்பட்ட தொல்காப்பியம் பற்றிய சாரியை எழுத்துப் பேறு முதலிய பலவற்றையும் உருபு புணர்ச்சிக்கண் பெய்து காட்டுகிறார். தொல்காப்பியனார் அ ஆ உ ஊ ஏ ஒள ஞ் ந் என்பனவற்றை ஈறாக உடைய சொற்களுக்கே இன்சாரியை கூறவும், இவர் எல்லா ஈற்றுச் சொற்களுக்கும் அச்சாரியையைக் குறிப்பிட்டு எடுத்துக்காட்டுக்களையும் தருவது புதியனபுகுதலை உட்கொண்டு சொற்றதாகும். பலவற்றிறுதிப்பெயர் அற்றுச்சாரியை பெறுமாற்றைப் பின்னர் எடுத்து விளக்குகிறார்.

தொல்காப்பியனார் ‘ஊ என் ஒருபெயர் ஆவொடு சிவணும்’ என்று கூறியதை உட்கொண்டும், அவர் ‘ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை’ என்று கூறியதன் கண் ஒகரத்தை எழுத்துப்பேறளபெடையாகக் கொண்டும் ‘ ஆ மா கோ னகரம் பெறும்’ என்று நன்னூலார்போல நூற்பாவில் கூறி உரையில் ஊகாரத்தையும் குறிப்பிடுகிறார்.

எல்லாம் எல்லாரும் எல்லீரும் என்பன உருபு புணர்ச்சிக்கண் சாரியை பெறுமாற்றை நன்னூலை உட் கொண்டே நவில்கிறார்.

தொடக்கங் குறுகும் மூவிடப் பெயர்களின் விதியும் நன்னூலை உட்கொண்டே கூறப்பட்டதேனும், விளக்கம் தருதற்கண் தொல்காப்பிய நூற்பா அடிகள் உரையில் இடம் பெறுகின்றன.

வகரஈற்றுச் சுட்டுப் பெயர்கள் அற்றுச்சாரியை பெறுதலை நன்னூல் நூற்பாவால் விளக்குகிறார்.