LXXXXIII இயற்றமிழ்முதலின்நின்று எடுத்துஉரைத்திடஅதன் ஒட்பம் கண்டு தட்பம் கூராது ஐந்துஇய லுந்தம் புந்தியின் வேறுகொண்டு உரைத்த புலவர் வரைத்த உரையான் முதலும் முடிவும் சிதர்தரப் பலவாய்க் கிடந்த இயலைத் தொடர்ந்துஒரு வழிப்பட ஈட்டலான் இலக்கண விளக்கம் என்ன நாட்டினன் வைத்திய நாத தேசிகன் அன்னவன் தவத்தி னால்அவ தரித்த முன்னவன் பாயிரம் மொழிந்துசொல் லணியும் தற்பவம் முதல்மூன் றின்பட நாடிப் உகந்துதொல் காப்பியத்து உண்மை தோன்ற ஐந்துஇய லுந்தன் புந்திசான் றாகத் தந்தைமுன் உரைத்தநூல் தான்முடிபு எய்த அந்தண் ஆரூர்ச் சந்திர மௌலி அருள்உட் கொண்டு மருள்மனம் நீங்கிப் புலங்கொளப் பாட்டியல் இலங்க உரைத்தனன் வாய்மைதரு தியாக ராய தேசிகனே. |
இந்நூல் முழுதும் நூற்பாவினைச் சந்தி சேர்க்கப் பட்டவாறே முன்னர் அமைத்ததை விடுத்துச் சந்தி பிரித்து எழுதிக் காட்டும்முறை பின்பற்றப்பட்டுள்ளது. இது தொன்னூற் பொருளை இந்நூல் உறச்செய்த கருத்தன் வழிமுறை தெரித்துக் கிழமையின் முற்றிய பரிசும் பகர்ந்தது. (தமக்கு முற்பட்ட காலத்தே தோன்றிய இலக்கண நூற்செய்திகள் பலவற்றையும் ஏற்றபெற்றி தொகுத்து இலக்கண விளக்கம் என்ற நூலை யமைத்த ஆசிரியன் வழித்தோன்றலர்களைப் பற்றியும், அவர்களுக்கு இந்நூலிடத்துள்ள உரிமையைப் பற்றியும் கூறப்பட்ட தொகுப்புரையாகும்.) |