பதிப்பாசிரியர் முகவுரை

     பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த இலக்கணப் பெரும்புலவர் மூவருள்
முதலாமவராகிய திருவாரூர் வைத்தியநாத தேசிகர் இயற்றிய இலக்கண விளக்கத்தின்
முப்படலங்களுள் முதலிரண்டு படலங்களும், பொருட் படலத்தின் முதல் மூன்று
இயல்களும் பதிப்பிக்கப்பெற்ற முறையை ஒட்டியே, முன்னைய வற்றிற்குப் பயன்படுத்தப்
பெற்றன போன்ற நூல்களின் துணையைக்கொண்டே அப்படலத்தின் நான்காம்
இயலாகிய செய்யுளியல் பதிப்பிக்கப்பெற்று உள்ளது. எடுத்துக்காட்டுப் பாடல்களின்
போந்த பொருள் தேவையின்மையின் எழுதப்பட்டிலது. யாப்புப்பற்றிய அருஞ்செய்திகள்,
ஒத்த கருத்துடைய பிற யாப்பு நூல்களின் நூற்பா மேற்கோள், சிதம்பரச் செய்யுட்
கோவைச் செய்யுட்கள், தேவையான அகர வரிசைகள் இவற்றோடு, இடைக்கால யாப்பு
நூல்களின் நூற்பாக்களைத் திரட்டி இச்செய்யுளியல் முறையில் அமைத்த
பிற்சேர்க்கையையும் இணைத்துப் பதிப்பித்தல் வேண்டும் என்று தஞ்சை
சரசுவதிமகாலில் கௌரவ காரியதரிசியாயிருந்த முதுபெரும்புலவர் திருவாளர் நீ.
கந்தசாமிப் பிள்ளை அவர்கள் இட்ட ஆணையை ஒட்டியே இவ்வியலும்
பதிப்பிக்கப்பட்டுள்ளது.